• Latest News

    March 26, 2020

    வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரம் நீடிக்கப்பட்டுள்ளது : அரசாங்கம் அறிவிப்பு

    (எம்.எப்.எம்.பஸீர்)
    அடுத்தவாரம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை அடுத்தவாரம் முழுவதும் நீடிக்க அரசாங்கம் நேற்று தீர்மானித்துள்ளது.
     
    அதன்படி எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

    இந்த காலப் பகுதியில், அரச, தனியார் நிறுவங்கள் அனைத்தும் அதன்படி செயற்பட வேண்டும் எனவும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே,  இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவை மற்றும் திறைசேரி ஆகியன அத்தியாவசிய சேவைப்பட்டியலுக்குள் இணைக்கப்பட்டுள்ளன.

    சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ், பொருட்களை விநியோகித்தல், சுங்க நடவடிக்கைகள், மின்சாரம், நீர், எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளும் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

    ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த துறைகள் செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு காலப்பகுதியில் இந்த நிறுவனங்களை திறக்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, மத்திய வங்கியின் ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டது.

    இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் தினமும் 02 மணித்தியாலங்கள் தபால் நிலையங்களை திறப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துப் பொருட்களை வீட்டிற்கே விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரம் நீடிக்கப்பட்டுள்ளது : அரசாங்கம் அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top