• Latest News

    March 10, 2020

    முஸ்லிம் கட்சிகளின் தேர்தலுக்கான நிலைப்பாடுகள்

    - (ஏ.எல்.நிப்றாஸ்) –
    நாட்டில் வெப்பநிலை அதிரித்துள்ளதைப் போன்று, நாடுமுழுக்க தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. நோன்புப் பெருநாள் காலத்தில் ஒருவிதமாகவும், சித்திரைப் புத்தாண்டுக்கு வேறு விதமாகவும் என பருவ காலங்களுக்கு ஏற்றமாதிரி தமது வியாபார உத்திகளை மாற்றிக் கொள்கின்ற 'சீசன்' வியாபாரிகளைப் போல நமது அரசியல்வாதிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக புதிய வியூகங்களை வகுத்துள்ளனர்.
    பொட்டலங்களுக்கும், போலி வாக்குறுதிகளுக்கும் முலாம்பூசும் நடவடிக்கைகள் மற்றும் காரணங்கள், கற்பிதங்களை பூசிமொழுகும் நடவடிக்கைகளும் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன. 

    இந்த முறையும் மக்கள் போலி வியாபாரிகளிடம் ஏமாந்து விடக் கூடாது என்பதை இந்த (தேர்தல் அறிவிப்புக்குப் பின்னரான) முதலாவது கட்டுரையிலேயே வலியுறுத்த வேண்டியுள்ளது.
    திருவிழாக் காலங்களில் வேறு வேறு வேடம் அணிந்து கொண்டு ஒரு தடவை முட்டாசு வியாபாரி போலவும் இன்னுமொரு முறை ஐஸ்பழ வியாபாரியாகவும் வந்து ஏமாற்றி விட்டுப் போன ஆட்களை நாம் அடுத்த திருவிழாவில் தேடுவோம்.
    அதுபோல, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதற்கு முன்னைய தேர்தல்;களிலும் வெற்றி பெற்ற பின்னரும் மக்களுக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை மிகத் தெளிவாக ஏமாற்றிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு எம்.பி.க்கான எந்தத் தகுதியும் இல்லாமல் இம்முறை போட்டியிட அடம்பிடிக்கின்ற பத்தாம்பசலிகளுக்கெல்லாம் நன்றாக பாடம் புகட்ட வேண்டும் என்று இப்போதே திடசங்கற்பம் பூண வேண்டியுள்ளது.
    இத் தேர்தலில் யார் வெல்கின்றார், யார் ஆட்சியமைக்கின்றார் என்பதை விட சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் யாருக்கு வாக்களிக்கின்றது, யாரை தமது மேய்ப்பர்களாக தெரிவு செய்கின்றது என்பதில் கூடிய சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இவர்கள் எல்லோரும் செய்த நல்லது கெட்டதுகளை மீட்டிப்பார்த்தே ஆக வேண்டிய காலமிது!
    தேர்தல் அறிவிப்பு
    அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஒரு பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி பெறுகின்றார். இந்த நியதி நடைமுறைக்கு வரும் வரை காத்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாராளுமன்றம் ஆரம்பமாகி சரியாக 54 மாதங்கள் முடிவடைந்து 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.
    ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இம்மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதோடு, ஏப்ரல் 25ஆம் வாக்கெடுப்பு நடைபெறுமெனவும் அதற்கான வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 19 வரை இடம்பெறும் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் உள்ள வாக்காளர்களுக்கும் தேர்தல் என்ற தடிமல் காய்ச்சல் ஏற்பட்டிருக்கின்றது எனலாம்.
    இந்தத் தேர்தலும் முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களும் தமிழர்களும் பெரும்பான்மையாக வாக்களிக்காத ஒருவரே சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி ஆகியுள்ளார். அதனால் சிறுபான்மைச் சமூகங்கள் எவ்வாறான எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரிட்டது என்பதை யாவரும் அறிவோம்.
    இந்தப் பின்னணியில், மீண்டும் அதே அரசியல் கட்டமைப்பில் இன்னுமொரு தேர்தலை சிறுபான்மையினர் எதிர்கொண்டுள்ளனர். ஆளும் தரப்பு சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை அரவணைத்து அவர்களது வாக்குகளையும் பெற்றுக் கொள்ள முனைவதாக காட்டிக் கொள்ளும் சமகாலத்தில் தனிச் சிங்கள வாக்குகளால் இந்தப் பாராளுமன்றத் தேர்தலையும் வெற்றிகொண்டு ஆட்சியமைக்க வேண்டும் என்று கடும்போக்கு செயற்பாட்டாளர்கள் பிரயாசைப்படும் இரட்டைமுக தேர்தலை நாம் எதிர்கொண்டு நிற்கின்றோம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
    பிரதான கட்சிகள்
    ஏப்ரலில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுஜனப் பெரமுண கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டிணைந்துள்ளது. ஐ.தே.க செயற்குழுவின் தீர்மானத்தின் படி சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. எனவே இவ்விரு கூட்டுக்களும் பிரதான போட்டிக் கட்சிகளாக திகழும். ஒருவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கடைசி வரையும் தீர்க்கப்படாத பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்க தரப்பு ஐ.தே.க. தனித்து களமிறங்கலாம்.
    அதேபோன்று ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவை தமது தேர்தல் வியூகங்களுக்கு அமைவாக நாட்டின் சில மாவட்டங்களில் தனித்து போட்டியிடும் முடிவை எடுப்பதற்கும் சாத்தியமுள்ளது. இதற்கு மேலதிகமாக, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் களமிறங்கும்.
    இந்;தத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இரு பக்கத்திற்கும் பகிரப்படவுள்ளது. சஜித் அணியை ஆதரிக்கப் போவதாக இரு முஸ்லிம் கட்சிகள் அறிவித்து விட்டது. அப்போது மௌனமாக இருந்த மக்கள் காங்கிரஸ் கட்சியும் இப்போது சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்படவுள்ளதாக அறிவிப்புச் செய்திருக்கின்றது.
    இதேவேளை, தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் போல இம்முறையும் பொதுஜனப் பெரமுண சார்பு நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சியும் மொட்டுக்கு ஆதரவாகவே பிரசாரம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
    ஒற்றுமை பற்றிய கதை
    இது இவ்வாறிருக்க முஸ்லிம் அரசியலுக்குள் வழக்கமாக தேர்தல் காலங்களில் பிரசாரப்படுத்தப்படும் உணர்வெழுச்சிக் கோஷங்கள் மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கியிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்றும், முஸ்லிம்களின் பலத்தை காண்பிக்க வேண்டும் என்றும் பேரம் பேசலை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என்றும் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கருத்துக்களை முன்வைப்பதை அவதானிக்க முடிகின்றது.
    உண்மைதான் முஸ்லிம் கட்சிகள் ஓரணியில் திரண்டு தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். நாங்கள் சஜித்துக்கு ஆதரவானவர்கள் அல்லது ராஜபக்சவுக்கு சார்பானவர்கள் என்ற நிலைப்பாட்டை இப்போதே எடுக்காமல் நடுவுநிலையில் நின்று இனக்குரோத உரைகளை பேசி, உணர்ச்சிகளை தூண்டிவிடாமல் மிகப் பக்குவமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கலாம்.
    பல கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு போல தனித்து போட்டியிட்டு, முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளை ஒன்றுதிரட்டி அதன் பின்னர் முறையான பேரம்பேசலை மேற்கொண்டு ஆட்சியமைக்கும் தரப்பிற்கு ஆதரவளித்திருக்க முடியும். கடந்த காலங்களில் இப்படிச் செய்து வந்திருந்தால், இப்போது தனித்து போட்டியிட்டால் நாம் சிங்கள மக்கள் என்ன நினைப்பார்கள் என்று அச்சம் கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்காது.
    சாத்தியமற்ற நிலை
    ஆனால், இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. முஸ்லிம் கட்சிகள் ஒன்றுசேர்வது என்றால் அந்த கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம் மட்டும் இணைந்தால் போதாது. மாறாக, இவர்களோடு ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் மற்றும் எம்.ரி. ஹசனலியின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணி போன்ற இதர முஸ்லிம் கட்சிகளும் ஹிஸ்புல்லா, மஸ்தான் உள்ளிட்ட முக்கியமான முஸ்லிம் அரசியல்வாதிகளும் அந்த அணிக்குள் வரவேண்டும்.
    அத்துடன் பெரும்பான்மைக் கட்சிகளில் யாராவது வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் முஸ்லிம்கள் முஸ்லிம் கூட்டணிக்கே அதிக வாக்குகளை அளித்தாலேயே ஒற்றுமைப்பட்டதன் சரியான பலத்தை அனுபவிக்க முடியும்.
    ஆனால், இது சாத்தியமில்லை. முன்னாள் எம்.பி.க்கள் பலரும் சமூக செயற்பாட்டாளர்களும் இன்று ஒற்றுமை பற்றிப் பேசுவது வரவேற்கத்தக்கதும் மனமகிழ்ச்சி தருவதாகவுமே இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. நாமும் இப்பக்கத்தில் அதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், இந்த ஒற்றுமைக் கதையெல்லாம் தேர்தல் காலங்களில் மாத்திரமே மேலெழுவதுதான் எங்கோ உதைக்கின்றது.
    அத்துடன், முஸ்லிம் கட்சிகளால் தேர்தலையும் தாண்டி ஓரணியில் செயற்படுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதற்கு ஆகப் பிந்திய உதாரணம் ஐக்கிய மக்கள் (முஸ்லிம்) கூட்டமைப்பின் தோல்வியாகும். எது எவ்வாறிருப்பினும், பிரதான முஸ்லிம் கட்சிகளாவது ஒன்றிணைந்து ஓரணியாக போட்டியிட்டிருக்கலாம் என்ற மனத்தாங்கல் வழக்கம்போல இம்முறையும் இருக்கத்தான் செய்கின்றது.
    ஆனால் இதனையெல்லாம் கடந்தே, முஸ்லிம் கட்சிகள் ஏதாவது ஒரு பிரதான கட்சியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. இதற்கும் நியாயங்களும் நடைமுறை யதார்த்தங்களும் இருக்கின்றன என்பதை இந்தக் கட்டுரை மறுத்துரைக்கவில்லை.
    முடிவிற்கான காரணங்கள்
    அந்த வகையில், றவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் றிசாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கட்சிகள் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கின்றமைக்கான காரண காரியங்கள் வெளிப்படையானவை. அடிப்படையில் தற்போது அக்கட்சிகள் ஐ.தே.க.சார்பு வாக்குகளை கொண்டிருக்கின்றன.
    அத்துடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித் அணிக்கே கிடைத்திருந்த சூழ்நிலையில், அதிக எம்.பி.க்களை பெறுவது என்றால் சஜித் பக்கம் நிற்பதே சிறந்த ஒப்பீட்டுத் தெரிவு என ஹக்கீமும் றிசாட்டும் நினைத்திருக்கலாம்.
    அதுமட்டுமன்றி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜனப் பெரமுண அதிகப்படியான வாக்குகளை உறுதி செய்தமைக்கு, றிசாட், ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தியும், இனவாதம் பேசியும் மேற்கொண்ட பிரசாரங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கின. இப்போது இவ்விரு கட்சிகளையும் இணைத்துக் கொண்டால் தாம் உருவாக்கியுள்ள 'பிம்பம்' நொருங்கிவிடலாம் என்ற அச்சம் ஆளும் தரப்பிற்கு இருக்கின்றது என அனுமானிக்கக் கூடியதாகவுள்ளது.
    அத்துடன் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளையும் கையாள்வது தலையிடியான விஷயம் என்று கருதியே பிற முஸ்லிம் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய புதியதொரு முஸ்லிம் அணியை ஆட்சியாளர்கள் கட்டமைக்க முனைகின்றார்கள் என்றும் தோன்றுவதுண்டு. இந்தப் பின்னணியிலேயே 'ஹக்கீமையும் றிசாட்டையும் சேர்க்க மாட்டோம'; என்று பெரமுண அறிவித்தது எனலாம். ஆகவே இந்தக் காரணங்களால், ஏதாவது பெரும்பான்மை கட்சியுடன் சேர்வது என்றால், தமக்கு சிறந்த தெரிவு சஜித் என்று இவ்விரு தலைவர்களும் கணித்திருப்பார்கள்.
    இதேவேளை, அடுத்த பிரதான முஸ்லிம் கட்சியாக திகழும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் வழக்கம் போல பொதுஜனப் பெரமுணவுடன் இணைந்தே இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் பெருவெற்றி மற்றும் அதற்குப் பின்னர் மொட்டுவை நோக்கி அலை அடிப்பதான தோற்றப்பாடு, அதாவுல்லாவின் செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்த இந்த அணி முயற்சிக்கும்.
    ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கட்சியானது இந்தத் தேர்தலிலும் பொதுஜனப் பெரமுணவை ஆதரிக்கும் எனத் தெரிகின்றது. அதேநேரம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அதே நிலைப்பாட்டில் அதாவது மக்கள் விடுதலை முன்னணியின் வழித்தடத்திலேயே இந்த தேர்தலையும் கடந்து செல்லும் எனத் தெரிகின்றது.
    ஆனால் ஒன்று, பொதுஜனப் பெரமுண கட்சி நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் மொட்டுச் சின்னத்திலேயே தமது வேட்பாளர்களை நிறுத்துவது என முன்னர் தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போது வடக்கு கிழக்கில் வேறு சூத்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக மந்திராலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியானால் பொதுப் பெரமுண சார்பான வேட்பாளர்கள் வேறு சின்னத்திலும் களமிறங்கலாம். அவ்வாறே, சஜித் அணியில் உள்ள மு.கா.வும் ம.கா.வும் ஒரு சில மாவட்டங்களில் வேறு வியூகங்களை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது.
    முஸ்லிம்களுக்கு சவால்
    எது எவ்வாறாயினும், முஸ்லிம்களுக்கு இந்தத் தேர்தல் நிச்சயம் மிகவும் சவாலானதாக இருக்கும். 'ஊருக்கு எம்.பி.', 'பல தசாப்த அனுபவமுள்ளவர்', 'முன்னாள் எம்.பி'., இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று பல தாரக மந்திரங்களோடு களத்திற்கு வந்தாலும் அநேக முஸ்லிம் (உத்தேச) வேட்பாளர்களுக்கு வெற்றி பெறுவது கல்லில் நார் உரிக்கின்ற வேலையாகவே இருக்கும்.
    ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடு தொடர்கின்றது.
    இந்நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க – சஜித் நடாத்திய நாடக பாணியிலான இழுபறியைப் போல் இம்முறையும் ஒரு செயற்கையான அலையை ஏற்படுத்துவதற்காக இந்த முரண்பாடு பயன்படுத்தப்பட்டால் பரவாயில்லை.
    ஆனால், ரணில் - ரஜித் இரண்டு அணிகளாகி, ரணில் விக்கிரமசிங்க சார்பாக ஒரு அணி களமிறங்கும் நிலை ஏற்பட்டால் முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பது கேள்விக்குறியாகவே அமையும். ரணிலின் இராஜந்திரம் பற்றி அறிவோர் இதை விளங்கிக் கொள்வர். (பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இந்த சிக்கலுக்கான சாத்தியக் கூறுகள் அதிகாிப்பதாக தோன்றுகின்றது)
    இதேவேளை, கடந்த தேர்தலை விட இப்போது நூறு முஸ்லிம்களின் வாக்குகளாவது வெற்றிபெற்ற பொதுஜனப் பெரமுண பக்கம் சென்றிருக்கின்றது என்பதே யதார்த்தமானது. முன்னர் பிரசாரம் செய்யப்பட்டது போல கடுமையாக ராஜபக்ச அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை என்பதும் முஸ்லிம்கள் மனதில் பதிந்திருக்கின்றது. ஆனால், இன்னும் பயம் முற்றாக அகலவில்லை. இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் கெடுபிடிகள் அதிகரிக்கும் என்று கூறுவோரும் உளர்.
    ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சூடு ஆறுவதற்கு இடையில் இன்னுமொரு தேர்தலை நடாத்தும் அரசாங்கம் இப் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவது அவ்வளவு கடினமானதாக இருக்காது என்றே இப்போது அனுமானிக்க முடிகின்றது.
    இருப்பினும், கடந்த முறை அன்னத்திற்கு அளித்தது போல் ஓரிரு முஸ்லிம் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், கொத்தாக முஸ்லிம் வாக்குகள் மொட்டுசார்பு வேட்பாளருக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல. இந்த யதார்த்தநிலை ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் சிலருக்கே தெரியும் என அறிய முடிகின்றது எனவேதான் மொட்டுசாா்பு முஸ்லிம் வேட்பாளா்களை வேறு வியகத்தில் களமிறக்குவது பற்றியும் ஆராயப்படுவதாக தெரிகின்றது)
    எது எப்படியிருப்பினும், முஸ்லிம் கட்சிகள், தனிப்பட்ட அரசியல்வாதிகள் தொடக்கம் முஸ்லிம் பொதுமக்கள் வரை அனைவரும் களநிலைமைகள் பற்றிய பூரண அறிவுடன் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும். கட்சிக்கும் சமூகத்திற்கும் அதிக எண்ணிக்கையில் எம்.பி.களை பெறுவது மாத்திரம் நமது இலக்காக முடியாது.
    கடந்த தேர்தலிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் இந்த சமூகம் எடுத்த நிலைப்பாடுகள், அதற்கு கிடைத்த பிரதிபலன்கள் மற்றும் எதிர்வினைகள், சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட பல்லின நாடொன்றில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் வாழ்வு மற்றும் இருப்பு... என எல்லாவற்றையும் கருத்திற் கொண்டே முஸ்லிம் அரசியலானது இந்தத் தேர்தலில் தமது நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியுள்ளது.
    - ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 08.03.2020)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் கட்சிகளின் தேர்தலுக்கான நிலைப்பாடுகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top