• Latest News

    April 06, 2020

    ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவது இப்போதைக்குச் சாத்தியமில்லை. - இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

    இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்துக்குச் சென்றுள்ளது. எனினும், இதிலிருந்து நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்தநிலையில், இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவது இப்போதைக்குச் சாத்தியமில்லை."

    இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில்,
    "கடந்த மாதம் ஆரம்பத்திலிருந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களே இலங்கைக்குக் கொரோனா வைரஸ் தொற்று நோயையும் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

    ஏற்கனவே இரண்டு வார தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அவ்வாறு சென்றவர்களில் ஒருவருக்குத் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது எமக்குப் பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களை நாள்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

    இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 40 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    எனவே, நோய் குணமடைந்து வீடு திரும்பியவர்களும் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர்களும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    இலங்கையிலிருந்து கொரோனாவை இல்லாதொழிக்க அரசு அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு நாட்டு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இடர் வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இம்மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவது இப்போதைக்குச் சாத்தியமில்லை" - என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவது இப்போதைக்குச் சாத்தியமில்லை. - இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top