எஸ்.றிபான் -
முஸ்லிம் காங்கரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதற்கு மற்றுமொரு நாடகத்தை தனித்தனியே அரங்கேற்றியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று தெரிவித்துள்ளது. மக்கள் காங்கிரஸ் விசாரணைக் குழுவொன்றினை நியமித்துள்ளது. இவை மக்களை ஏமாற்றுவதற்கான யுக்தியாகும்.
தேர்தல் காலத்தில் ஒரு கதையும், தேர்தலின் பின்னர் இன்னுமொரு கதையும் சொல்லி மக்களை ஏமாற்றிப் பழக்கப்பட்ட இவ்விரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கி வசமாக மாட்டிக் கொண்டார்கள். அதிலிருந்து மீளமுடியாத நிலையில் அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றோம் என்று சொல்லி தப்;பித்துக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் 'மன்னிப்பு' எனும் புதிய நாடகத்திற்குரிய நெறியாள்கையை கட்சியின் தலைவரே மேற்கொண்டுள்ளார் என்பது பலருக்கு தெரியாத, திரைமறை விசயமாக பேசப்படுகின்றன.
சட்ட மூலங்களுக்கு ஆதரவு
மிகப் பெரிய தவறை செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஒரு சட்ட மூலத்தை ஆதரிப்பதற்கு முதல் அதன் நன்மை தீமைகளை நாடு மற்றும் சமூகம் என்ற இரு அடிப்படையில் ஆராய வேண்டும். கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்க முடியாது. அவ்வாறு ஆதரவு வழங்குவதென்பது அரசியல் தலைமைகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருத்தமான நடவடிக்கையாக இருக்காது.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனைத்து சட்ட மூலங்களையும் ஆதரித்தே வந்துள்ளன. இதற்கு நாட்டு நலன் என்றோ அல்லது சமூக நலன் என்றோ கூறிவிட முடியாது. அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையாவது தங்களின் மீது இருக்க வேண்டும். அதனூடாக சலுகைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதே ஒரே நோக்கமாகும்.
18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு மேற்படி இரு கட்சிகளும் ஆதரவு வழங்கின. அதனால், எந்த நன்மையும் நாட்டிற்கும், சமூகத்திற்கும் கிடைக்கவில்லை. இச்சட்ட மூலத்தை ஆதரித்தது குறித்து முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 'கண்களை மூடிக் கொண்டு படுகுழியில் விழுந்தோம்' என்று தெரிவித்திருந்தார். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியையும், தலைமையும் பணயம் வைத்தாகவும், அதனால் கட்சியை பாதுகாத்துக் கொள்வற்காகவே 18வது திருத்தச் சட்ட மூலத்தை ஆதரித்ததாக தெரிவித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கட்சியையும், தலைமையும் பணயம் வைத்த அதே நபர்களுககே தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புக் கொடுத்தார். இதன் மூலமாக 18வது திருத்தச் சட்ட மூலம் குறித்து ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்களில் உண்மையில்லை என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
2015ஆம் ஆண்டு 19வது திருத்தச் சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் ஆதரவு வழங்கின. 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியமைக்குரிய பாவவிமோசனம் பெறுவதற்காக 19வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியதாக தெரிவித்தன. இது மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் முறை மாற்றம், மாகாண எல்லை நிர்ணயம் போன்ற சட்ட மூலங்களுக்கும் ஆதரவு வழங்கின.
தற்போதைய அரசாங்கம் 19வது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள பலவற்றை இல்லாமல் செய்து ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவதற்காக கொண்டு வந்த 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் ஆதரவு வழங்கியுள்ளார்கள். இச்சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை குறிப்பாக கொவிட் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்குரிய உத்தரவாத்தை பெற்றுக் கொண்டதன் பின்னரே ஆதரவு வழங்கியதாகவும் தெரிவித்தார்கள்.
ஆனால், இவர்களின் உத்தரவாதக் கதையை நம்புவதற்கில்லை. ஏனென்றால், ஆட்சியாளர்களை பகைத்துக் கொள்ளாத அரசியலையே முஸ்லிம் கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. 18இற்கும், 19இற்கும் ஆதரவு வழங்கிய போது சமூகத்திற்குரிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்று நிபந்தனை போடவில்லை.
இதே வேளை, 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதென்பது தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியதன் பின்னரே முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத் தருகின்றோம். நாங்கள் எதிராக நிற்கின்றோம் என்று தெரிவித்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றன.
ஒழுக்காற்று நடவடிக்கை
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை. அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்துக் கொண்டாலும், அந்த நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தை மக்கள் மறந்து போய்விடுவார்கள் என்று காலத்தை கடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், மக்கள் மத்தியில் விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. அதனால்தான் ஒழுக்காற்று நடவடிக்கை எனும் பேரில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் புதிய நாடகமொன்றினை அரங்கேற்றியுள்ளது. அதற்கு 'மன்னிப்பு' என்றும் பெயர் வைத்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்ட காலம் முதல் இன்று வரைக்கும் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தலைவருக்கு எதிராக செயற்பட்டவர்களே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ரவூப் ஹக்கீமின் ஆதரவும் இருந்துள்ளது. அதனால், ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு கட்சியின் முடிவுக்கு மாறாக செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை அதன் தலைவர் மனோகணேசன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கினார். அது போன்று முஸ்லிம் காங்கிரஸினாலும், மக்கள் காங்கிரஸினாலும் முடியவில்லை. காரணம், இச்சட்ட மூலத்திற்கு தலைவர்களின் ஆதரவும் இருந்திருக்க வேண்டுமென்பதே எமது முடிவாகும்.
மனச்சாட்சிப்படி வாக்களிப்பதற்கு எமக்கு தலைவர் அனுமதி தந்தார். அதன்படியே நாங்கள் ஆதரவாக வாக்களித்தோம். கட்சியின் தீர்மானத்தை மீறி நாங்கள் வாக்களித்திருந்தால் மனோ கணேசன் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து நீக்கியது போன்று எங்களையும் நீக்கலாம் என்று முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் சவால் விட்டார். ரவூப் ஹக்கீம் மௌனமாகவே இருந்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தன் பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, 'சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட்டு செயற்பட கட்சித் தலைவர் அனுமதியளித்துள்ளதால் அதன்படியே செயற்பட்டோம் என்று தெரிவித்திருந்தார். இது ஹன்ஸார்ட்டிலும் பதிவாகியுள்ளது. நசீர் அஹமட்டின் இக்கருத்திற்கும் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
இம்மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, இதன் பின்னாலுள்ள நாடகத்தைப் புரிந்திராத உயர்பீட உறுப்பினர்கள் காரசாரமான கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்த வேண்டுமென்றும் கேட்டார்கள். ஆயினும், இறுதியில், பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.
நழுவவிடப்பட்ட சந்தர்ப்பம்
கோவிட் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குரிய அனுமதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டதனை பயன்படுத்திக் கொள்ளாது, உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர்தான் வாக்களித்தோம் என்று சிறுபிள்ளைத்தனமான அரசியலை கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குரிய அனுமதியை முதலில் வழங்கினால் மாத்திரமே வாக்களிப்போம் என்று சொல்லி இருந்தால், அனுமதி கிடைத்திருக்கும். ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தின் தரப்பினருக்கும் 20வது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராகவே இருந்தது. அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கடும்போக்குவாத தேரர்கள் இச்சட்ட மூலத்தை எதிர்த்த போதிலும், இதனை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை. அரசாங்கத்திலுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்ட மூலத்திற்கு எதிராகவே இருந்தார்கள். அதனால், எதிர்க்கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவில்லாது சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாத சூழலே இருந்தது.
ஆனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் மிகப் பெரிய கவலையாகவுள்ள ஜனாஸா அடக்கத்திற்குரிய அனுமதியை பெற்றுக் கொள்வதற்குரிய முயற்சிகளை எடுக்காது, ஆதரவு வழங்கியமை மன்னிக்க முடியாத குற்றமாகும். அரசாங்கத்தின் தரப்பினர் ஆதரவு தாருங்கள் என்றவுடன் எச்சில் ஊறிய நிலையில் கையை உயர்த்தினார்கள். தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக ஏசுவதும், தேர்தலின் பின்னர் வெட்கமில்லாது, சமூகத்தின் பிரச்சினைகளின் மீது அக்கறை கொள்ளாது அரசாங்கத்தில் இணைந்து கொள்வதே இவர்களின் வாடிக்கையாகும். முஸ்லிம்களின் பிரச்சினைகளின் மீது அக்கறையுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால், 18இற்கும், 19இற்கும், தேர்தல் முறை மாற்றத்திற்கும் ஆதரவு வழங்கும் போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்திருக்க வேண்டும். மாறாக இச்சட்ட மூலங்களுக்கு ஆதரவு வழங்கி சமூகத்திற்கு கேடுகளையே செய்துள்ளார்கள்.
முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்திலும், நல்லாட்சி அரசாங்கத்திலும் தாக்குதல்களை மேற்கொண்ட போது, அதனை எதிர்க்கவில்லை. அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளிலேயே இருந்தார்கள். அமைச்சர் பதவியும், ஆளுந் தரப்பினர் என்பதுமே முக்கியமாகும். சமூகம் தேர்தல் காலத்தில் மட்டுமே இவர்களுக்கு தேவையாகும். இத்தகைய இழிநிலை அரசியலில் திளைத்துள்ள இவர்கள் நல்லாட்சியில் ஒரு சில மாதங்கள் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு, நாங்கள் சமூகத்திற்காக அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்தோமென்று சலங்கை கட்டுகின்றார்கள். அமைச்சர் பதவிளை தூக்கி வீசிய நீங்கள் எதிர்க்கட்சியில் ஏன் அமரவில்லை? ஆளுந் தரப்பினராக, அனைத்து சுகங்களையும் பெற்றுக் கொண்டுதான் இருந்தீர்கள். அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதில்தான் உங்களின் எதிர்கால அரசியல் இருந்தது. அதற்காகவே இராஜினாமாச் செய்தீர்கள்.
அரசாங்கத்தோடு இருந்தால்தான் கல்முனையை பாதுகாத்துக் கொள்ளலாமென்றும், பொத்துவில் மண்ணை பாதுகாக்கலாமென்றும், புல்மோட்டையில் முஸ்லிம்களின் காணியை மீட்கலாமென்று பாட்டி காலத்து சாந்தமாமா கதையை சொல்லுக்கின்றார்கள். நீங்கள் நல்லாட்சியில் அமைச்சர்களாக இருக்கும் போதுதானே இறக்காமம் - மாயக்கல்லிமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அங்கு விகாரையும் கட்டப்பட்டது. நீங்கள் அமைச்சர்களாக இருக்கும் போதே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிகள் பல பெயர்களில் பறிக்கப்பட்டன. இதுவரைக்கும் அக்காணிகளில் ஒரு துண்டைக்கூட மீட்டுக் கொடுக்க முடியாத நீங்கள், 20வது திருத்தச் சட்ட மூலத்திற்குரிய ஆதரவை சமூகத்திற்காகவே வழங்கினோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதனை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களின் அரசியல் வரலாற்று நெடுகிலும் சாக்கடைகளே நிறைந்துள்ளன. அதனை கிளறி உங்களை நாரடிப்பது எமது நோக்கமல்ல. ஆனால், சமூகத்திற்காகவே எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கின்றோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் கட்சிகள் சொல்லுவதற்கு அருகதை கிடையாது.
பிசுபிசுக்கும் மன்னிப்பு
20வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பது போல் காட்டுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் கருத்துக்களை சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நகர்வுகளை அவதானிக்க முடியவில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவிருந்தார்.
ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பதனை மறுத்தலித்துள்ளார்கள். 20வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள் பேச்சு நடந்தபோது அவரவர் தீர்மானப்படி வாக்களிக்கலாமென கட்சியின் தலைவர் தெரிவித்தார். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். அப்படியிருக்கையில் எங்களை மன்னிப்பு கோரச் சொல்வதில் நியாயமில்லை. அப்படியென்றால் கட்சித் தலைவர் முதல் எல்லோரும் சேர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்களின் பிரச்சினைகள் தீர அரசுக்கு ஆதரவளிப்போமென எல்லோரும் தீர்மானித்துவிட்டு இப்போது தனியே பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது பழி போடுவதில் அர்த்தமில்லை என்று முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் தங்களை சமூகத்தின் முன் கேவலப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார். எங்களை தடுத்து நிறுத்தாது இருந்துவிட்டு, சுதந்திரத்தையும் தந்துவிட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளமை ஏற்க முடியாது. நாங்கள் குற்றவாளி என்றால், தலைவர் ரவூப் ஹக்கீமும் குற்றவாளிதான் என்பதே முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடா இருப்பதாகவே இருக்கின்றது.
இதே வேளை, 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுத் தருகிறேன் என்று ரவூப் ஹக்கீம் பசீல்ராஜபக்ஷவிடம் உறுதியளித்தாக முகநூல் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் உண்மைத்தன்மையை ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியவில்லை என்பது வாசகர்களின் கவனத்திற்குரியது.
சரணாகதி
இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லது நடக்கும். கொவிட் ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இருந்தார்கள். 20இற்கு கையுயர்த்தியதனால் ஏற்பட்டுள்ள தலைக்குனிவை சரி செய்வதற்கு கொவிட் தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்குரிய அனுமதியினால் மாத்திரமே முடியும். ஆனால், நல்லது நடக்கவில்லை. கையுயர்த்தியதன் பின்னர் கூட எரிப்பதில் மாற்றம் செய்யப்படவில்லை. அதனால், முஸ்லிம் காங்கிரஸினதும், மக்கள் காங்கிரஸினதும் பாராளுமன்ற உறுப்பினர்களை சமூகத்தினர் கேவலமாக திட்டினார்கள். கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவையில் அனுமதி, ஜனாதிபதியும் இணக்கம் என்ற போது, பௌத்த இனவாத தேரர்கள் அனுமதிக்க முடியாதென்றார்கள். உடனே அரசாங்கம் அமைச்சரவையில் அத்தகையதொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றது. கொவிட் தொற்றால் மரணித்த உடல்களை எரிப்பதில் மாற்றமில்லை என்று அரசாங்கம் தெரிவித்தது. இதற்காகவா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினீர்கள் என்று மக்கள் நயையாண்டி செய்தார்கள்.
சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவுக்கு மேலாதிகமாக இன்னுமொரு நிபுணத்துவ குழு நியமிக்கப்பட்டது. அக்குழு கொவிட் தொற்றால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்யலாமென்றது. அதனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. எரித்தே தீர்வோம் என்றது அரசாங்கம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் அவமானப்பட்டார்கள்.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் (10.02.2021) பிரதமர் மஹிந்தராஜபக்ஷ கொவிட் தொற்றால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்றார். உடனே, 20இற்கு ஆதரவு வழங்கியதன் எங்களின் நோக்கம் நிறைவேறிவிட்டதென்று நசீர் அஹமட் பெருமிதம் கொண்டார். ஹரீஸ் பிரதமருடன் நாங்கள் பேசினோம். பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்தார். மறுநாள் எல்லாம் தலைகீழாக மாறியது. பிரதமர் அவ்வாறு சொல்லவில்லை. அடக்கம் செய்வது பற்றிய முடிவை சுகாதார அமைச்சின் நிபுணத்துவ குழுவே எடுக்க முடியும் என்றெல்லாம் சொன்ன போது, முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனியும் நல்லது நடக்குமென்று சொல்லிக் கொண்டிருக்க முடியாதென்று முடிவு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று சொன்னார்கள்.
மக்கள் காங்கிரஸ்
இதே வேளை, மக்கள் காங்கிரஸின் 25பேரைக் கொண்ட அரசியல் அதிகார சபை 13ஆம் திகதி கூடியது. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியது ஏன் என்பதற்குரிய எழுத்து வாக்குமூலத்தை முஸரப் மாத்திரமே வழங்கியிருந்தார். ஏனையவர்கள் வழங்கவில்லை. அவர்கள் தங்களுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் தாருங்கள் என்று கேட்டுள்ளார்கள். இதனிடையே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியமையை விசாரிப்பதற்கு சட்டத்தரணி சஹீட் தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கட்சியும் கூட முஸ்லிம் காங்கிரஸை போலவே நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றது. இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மற்றும் தலைமை விசுவாசத்தை விடவும் அரசாங்கத்தின் விசுவாசிகளாகளே இருக்கின்றார்கள். றிசாட் பதியூதின் இதனை கண்டும் காணாது போன்று இருப்பதாகவே தெரிகின்றது.
Vidivelli 19.02.2021
0 comments:
Post a Comment