• Latest News

    March 31, 2025

    பலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்கும் எமது உரிமையை பறிக்க முடியாது - பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்

    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கட்டும் அதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்கும் எமது உரிமையை பறிக்க முற்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களை கொழும்பு நகரில் ஒன்றுசேர்ப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

    இஸ்ரேலில் இடம்பெறும் மனித படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிகர் ஒட்டிய இளைஞனை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவில் அமைப்பினர் கொழும்பில் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

    இஸ்ரேல் இராணுவத்தின் குண்டு தாக்குதலில் இதுவரை 50ஆயிரம் பேர்வரை கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20ஆயிரம் பேர் சிறுவர்கள். இந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் மனிதாபிமானத்துக்காக பல்வேறு வகையில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில்

     தற்போது ஸ்டிகர் ஒட்டியமைக்காக கைதுசெய்யப்பட்டிருக்கும் இளைஞனும் தனது மன வேதனையையே இஸ்டிகர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். அது எவ்வாறு பிழையாக முடியும்.

    ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இஸ்ரேல் பக்கம் தான் இருப்பது என்றால் அதனை வெளிப்படையாக கூறுங்கள். அப்போது பிரச்சினை முடியும். அதன் பின்னர் நாங்கள் உங்களைப்பற்றி பேசப்போவதில்லை. பலஸ்தீன் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் இரட்டை வேடம் தற்போது வெளிப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏன் இஸ்ரேலுக்கு இந்தளவு அச்சப்படுகிறது.

    இஸ்ரேலுக்கு எதிராக உலக மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். மனித குலத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புக்கு எதிராக மக்கள் அணி திரண்டுள்ளனர். அதனால் கைதுசெய்யப்பட்டிருக்கும் இளைஞன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி பதில் சொல்ல வேண்டும்.இதில் இருந்து தப்பிச்செல்ல முடியாது.

    ஜனாதிபதியின் அரசாங்கம் பலஸ்தீனுக்காக முன்னிட்பதாக தெரிவிக்கிறது. ஆனால் உங்களின் பொலிஸார் பலஸ்தீனர்களுக்காக செயற்படுபவர்களின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு, அடக்குவதற்கு தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.

    அதனால் அரசாங்கம் தொடர்ந்து இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தால், அப்படியே செயற்படட்டும். அதுதொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பலஸ்தீனர்களுக்காக குரல்கொடுக்கும் எமது உரிமையை பறிக்க முற்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களை கொழும்பு நகரில் ஒன்று சேர்ப்போம் என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

    இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் நாடு பூராகவும் தொடர்ந்தும் ஸ்டிகர் ஒட்டுவோம். சுவரொட்டிகளையும் ஒட்டுவோம். அநுரகுமாரவின் அரசாங்கத்துக்கு முடிந்தால் அதனை கழட்டிப்பார்க்கட்டும், எனது வாகனத்திலும் நான் ஸ்டிகர் ஒட்டுவேன் என்றார்.

    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்கும் எமது உரிமையை பறிக்க முடியாது - பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top