• Latest News

    February 05, 2021

    முஸ்லிம்கள் மீதான சர்வதேசத்தின் கரிசனை

    சஹாப்தீன் -
    அரசாங்கத்தின் மீது பல திசைகளிலும் அழுத்தங்கள் கொழும்பு துறை முகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கக் கூடாதென்று எதிர்க்கட்சிகளும், பௌத்த தேரர்களும், இன்றைய ஆட்சியை நிறுவதற்கு உழைத்த பௌத்த கடும்போக்குவாத தேரர்களும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
     
    மேலும், நல்லிணக்க பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளன.

    இவற்றிக்கு மத்தியில் கொரோனாவினால் மரணிக்கின்றவர்களின் சடலங்கைளை தகனம் செய்வதனை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை கேட்டுள்ளது. ஆயினும், இலங்கை அரசாங்கம் இத்தகைய அழுத்தங்களை கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், அரசாங்கத்தின் மீது நெருடிக்கடிகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

    விடாப்பிடியான தீர்மானம்
    ****************************
    கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென்று சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளன. ஆயினும், தமது முடிவில் எந்தவொரு மாற்றமும் கிடையாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செயவதற்கு அனுமதித்துள்ள நிலையில், இலங்கை மாத்திரம் எரிப்பதே தீர்வாகுமென்று விடாப்பிடியாக தெரிவித்துக் கொண்டிருப்பது அரசியல் காரணங்களுக்காக என்பது தெளிவாகியுள்ளது.
    இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்து ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசேட நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    கொவிட் வைரஸ் தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் செய்வதே இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமாக இருப்பது மனித உரிமையை மீறும் செயலாகும். இதனை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுத்தக் கூடாது.

    கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதனூடாக வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையிலோ வேறு நாடுகளிலோ மருத்துவ ரீதியில் அல்லது விஞ்ஞான ரீதியிலான எந்த ஆதாரமும் இல்லை.

    இலங்கை வைத்தியர் சங்கம் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையிலும் இதனை உறுதி செய்திருக்கின்றது. தொற்று நோய் நிலைமையின் போது மரணித்தவரின் கௌரவத்துக்கும் அதே போன்று அவர்களின் உறவினர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.

    இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் குழுவை பிரித்து செயற்படுவது இனவாத வன்முறை நிலைமை ஏற்படுத்துவதற்கு மற்றும் வர்க்க பேதத்தை வெளிப்படுத்தி காட்டுவதற்கு காரணமாகும் வகையில் தீர்மானங்களுக்கு வருவதை கண்டிக்கின்றோம்.

    மேலும் கொவிட் 19 தொடர்பான இறுதி அறிக்கையை உறவினர்களால் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னரே சில சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கின்றன.

    கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு ஆலாசேனை வழங்கிய பின்னர், சுகாதார இராஜாங்க அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு, அது தொடர்பான ஆலாசேனைகளை வழங்கி இருந்தும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.

    எனவே, பலவந்தமாக கொவிட் சடலங்களை தகனம் செய்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தகனங்களுக்காக எந்த முறையிலாவது நிவாரண முறைமையொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
     
    ஐ.நாவின் இந்த அறிக்கையை பன்னாட்டு இராஜதந்திரிகள் தமது டுவிட்டர் பக்கத்தில் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதே வேளை, கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் செய்வது நிறுத்தப்பட வேண்டுமென்று ஐ.நா இலங்கையை கேட்டுள்ளமை தவறான செயற்பாடாகும். கொவிட் 19 வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் தீர்மானங்களை ஏற்க முடியுமே தவிர, ஐ.நாவின் தீர்மானங்களை செயற்படுத்த முடியாது. உடல்களை தகனம் செய்வதில் எந்த மாற்றமும் கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

    ஆனால், உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கும் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார  அமைப்பின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு முஸ்லிம்கள் கோரிக்கைகளை முன் வைத்த போது இலங்கையின் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளையே நாம் நடைமுறைப்படுத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சுகாதார இராஜாங்க அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு அடக்கம் செய்வதனால் பாதிப்பில்லை என்று தெரிவித்தமையைக் கூட அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது ஐ.நாவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. உலக சுகாதார அமைப்பின் தீர்மானங்களையே ஏற்க முடியுமென்று தெரிவிப்பதன் மூலம் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றன.

    வாக்குறுதிகள்
    ****************
    இதே வேளை, ஐ.நா, சர்வதேச மன்னிப்புச் சபை, ஐரோப்பிய நாடுகள், முஸ்லிம் நாடுகளும் கொவிட் தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென்று அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், முஸ்லிம் அமைப்புக்களும் ஐ.நாவின் அறிக்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இத்தகைய சர்தேச அழுத்தங்கள் ஏற்படுவதற்கு முஸ்லிம் கட்சிகளும், அமைப்புக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்ட நடவடிக்கைள் என்னவென்று சிந்திக்க வேண்டும்.

    முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்றத்தில் சூடாகப் பேசிக் கொண்டார்கள். அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லது நடக்கப்போகுதென்று பெயர் சூட்டிக் கொள்வதற்கு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தமிழர் தரப்பினர் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமென்று கேட்டு ஐ.நாவிற்கு எழுதிய கடிதத்தில் கொவிட் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்கள் என்பது முஸ்லிம்களின் கவனத்திற்குரியதாகும்.

    முஸ்லிம்களின் வாக்குகளினால் முகவரிகளையும், உயர்வான அந்தஸ்தையும் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு வாழ்வு கொடுத்துவிட்டு, சமூகத்தை வாழாவெட்டியாக்கி மூளைக்குள் முடங்கிக் கொண்டார்கள். முஸ்லிம்களின் வாக்குகளினால் கட்சியை வளர்த்து, தலைவர் என்ற உயர்வைப் பெற்றவர்கள் பாராளுமன்றத்தில் பேசியதுடன் நிறுத்திக் கொண்டார்கள். இதற்காகவா முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாக்களித்தோம். முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்றார்களே, அவர்கள் அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் பெற்றுக் கொண்ட உரிமைகள் என்னவென்று முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

    சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, தாங்கள் பெற்றுக் கொண்ட முழு மற்றும் அரை மந்திரிப் பதவிகளை முஸ்லிம் சமூகத்தின் உரிமையாகவும், கௌரவமாகவும் காட்டினார்கள். அரசியலின் சூழ்ச்சுமத்தை சரியாக விளங்கிக் கொள்வதற்கு ஞானமற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் அமைச்சர் பதவிகளைப் பெற்றவர்களுக்கு விழா எடுத்தார்கள்.

    இப்போது அரசாங்கத்தின் சட்ட மூலங்களுக்கு ஆதரவு அளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்குரிய பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தினால் அவர்களுக்கு பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவிகளும், இராஜாங்க அமைச்சர் பதவிகளும் பெற்றுக் கொள்ளவுள்ளார்கள். இதற்கு ஆசைப்பட்டுத்தான் நிறைவேற்று அதிகாரத்தின் கரங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளார்கள். இதன் போது தங்களின் நிகழ்ச்சி நிரலை மறைத்துக் கொள்வதற்காக கொவிட் தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காகவே ஆதரவு வழங்கினோம் என்று சொன்னார்கள். அரசாங்கம் அனுமதிக்காது போனால் நாம் மாற்று நடவடிக்கைகள் குறித்து சிந்திப்போம் என்று சொன்னார்கள்.

    இப்போது அரசாங்கம் ஐ.நாவின் அறிக்கை குறித்து தெரிவிக்கையில், கொவிட் 19 வைரஸினால் மரணிக்கின்றவர்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை என்பதில் உறுதியாக அறிவித்துள்ளது. ஆனாலும், அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு குறித்து ஒரு வார்த்தையேனும் பேச முடியாதளவுக்கு சுயநலத்திற்குள் முகத்தைப் புதைத்துள்ளார்கள். கொவிட் தொற்றால் மரணிக்கின்றவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்திடம் உடன்பாடுகளை; பெற்றுள்ளோமென்று அளித்த வாக்குறுதியை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கியுள்ளார்கள்.

    கடந்த காலங்களில் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே வாக்குகளைப் பெற்றார்கள். அந்த வாக்குறுதிகளையும் நிiவேற்றவில்லை. அதே வேளை காலப் போக்கில் மக்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினால் வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டார்கள். இதே போன்று தமது புதிய வாக்குறுதிகளையும் முஸ்லிம்கள் மறந்து, அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் வரலாற்றில் தற்போது எதிர்கொண்டுள்ள அவலநிலையை எந்தக் காலத்திலும் அனுபவிக்கவில்லை என்பதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சட்ட மூலங்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்குவதற்கு கோடிகளைப் பெற்றிருந்தார்கள் என்பது பொதுவெளியில் பேசப்பட்ட விடயமாகும். இந்த வாங்கும் பழக்கத்தை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்தான் வழக்கமாக்கிக் கொண்டார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பல தடவைகள் சமூகத்தின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளார்கள். அதற்குரிய சன்மானங்களை பேரினவாத ஆட்சியாளர்களிடம் பெற்றுக் கொண்டார்கள்.

    தற்போது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருந்தாலும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுந் தரப்பினரின் செல்லப்பிள்ளைகளாகவே இருக்கின்றார்கள். அவர்களின் பல கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    முஸ்லிம் சமூகம் உடனடித் தீர்வாக வேண்டி நிற்கின்ற கொவிட் 19 தொற்றால் மரணிக்கின்ற முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்குரிய அனுமதியை அரசாங்கம் தர வேண்டுமென்தில் கவனம் செலுத்தாது பதவிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதும், கொந்தராத்துக்களை பெற்றுக் கொண்டிருப்பதும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூகத்தின் பிரச்சினைகள், தேவைகளின் மீது அக்கறை கிடையாதென்பது தெளிவாகின்றது.

    இரகசிய உடன்பாடுகள்
    *************************
    இதனிடையே கட்சியின் முடிவுக்கு மாறாக அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்திருந்தன. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் நடைபெற்றன. விசாரணைகளின் பின்னர் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டன. ஆயினும், தற்போது இரு கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையை கிடப்பில் போட்டுள்ளன. தங்களின் பாரர்ளுமன்ற உறுப்பினர்களை விமர்சனங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்களா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

    அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சிகளின் தலைவர்களுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரு இணக்கப்பாட்டைக் கண்டுள்ளதாகவும், அதனை இரகசியமாக பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதனால்தான் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியூதீன் ஆகியோர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்க ஆதரவு போக்கினை கண்டிக்காது மௌனமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதனால், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் செயற்பட்டுக் கொண்டிருப்பது போல் தெரிகின்றன.

    எந்தவொரு கட்சியாகவும், சமூக அமைப்பாகவும் இருந்தாலும் அவற்றிக்கு நிர்வாகக் கட்டமைப்பும், ஒழுக்கக் கட்டுப்பாடும் அவசியமாகும். மேற்படி இரு முஸ்லிம் கட்சிகளுக்கும் நிர்வாகக் கட்டமைப்புக்கள் உள்ள போதிலும், ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாதொன்றாகவே இருக்கின்றன. இக்கட்சிகள் அவ்வப்போது உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அவற்றில் தலைவர்களின் நலன்கள் மாத்திரமே இருந்தன. அதனால், தலைவர்களுக்காகவே ஒழுக்காற்று நடவடிக்கைகளும், கட்சியை விட்டு இடைநிறுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன என்பது மறைக்க முடியாததாகும்.

    இதே வேளை, ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு முஸ்லிம்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், கோரிக்கைகளை முன் வைத்ததாகவும் அறிய முடியவில்லை. அக்கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி ஊடகங்களில் சில கருத்துக்களை தெரிவித்துக் கொண்டாலும், ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற உரிமையுடன் நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதன் மர்மம் புரியவில்லை.

    முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் மர்ஹும் அஸ்ரப்பின் கொள்கைகளை பாழுதடித்துள்ளன. அதனால், அவரின் கொள்கையை வாழ வைக்கப் போகின்றோம் என்று புதிய கட்சியை ஆரம்பித்தார்கள். அக்கட்சியின் செயலாளராக ஹஸன்அலி நியமிக்கப்பட்டமையால் முஸ்லிம்களிடையே நம்பிக்கைகளும் ஏற்பட்டன. ஆனால், அக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவும், அதன் பின்னர் தற்போது மௌனித்து ஏனைய முஸ்லிம் கட்சிகளைப் போன்று உறங்கிக் கொண்டிருப்பதும் பல்வேறு சந்தேசங்களை ஏற்படுத்தியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜனபெரமுனவுடன் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்தான உடன்படிக்கை செய்துள்ளோம். பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படுமென்றும் தெரிவித்தமை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

    ஆகவே, முஸ்லிம்கள் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகள், அமைப்புக்களின் நடவடிக்கைகள் குறித்து நம்பிக்கை இழந்து இருப்பதனால் எதனையும் சாதிக்க முடியாது. மாற்று நடவடிக்கைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும். நல்ல புதிய மாற்றம் ஒன்றுதான் முஸ்லிம்களின் குரலை ஒலிக்கச் செய்யும். சமூகத்தின் உரிமைகளைப் பற்றி ஆட்சியாளர்களுடன் பேசவும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும் வழி செய்யும் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    Thanks: Virakesari 31.01.2021
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்கள் மீதான சர்வதேசத்தின் கரிசனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top