இன்று நாட்டின் தலைநகரான கொழும்பில் அதுவும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் வருகை தந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பலவந்தமான ஜனாசா எரிப்புக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும் ,
இதில் இலங்கை முஸ்லிம்களின் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் மனித நேயத்தை விரும்பும் மக்களும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட ஜனாசாக்களின் உறவினர்களும் பெருமளவிலான பெண்களும் கலந்து உணர்வுபூர்வமாக தங்கள் எதிர்ப்பை நாட்டுக்கும் ஆளும் ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பறைசாற்றினர்,
இதன் பிரதிபலிப்புக்கள் எதிர்காலத்தில் எவ்வாறாக இருந்த போதிலும் ,இந்த வரலாற்று நிகழ்விலும் எம்மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று ஆளும் அரசின் 20வது திருத்தத்துககு ஆதரவு வழங்கிய ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை ,என்பது முழு முஸ்லிம் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும்.
அது பற்றிய அக்கரையும் இது விடயத்தில் கொஞ்சமேனும் அந்த உறுப்பினர்களான அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை , மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பெருமளவு கட்சி ஆதரவாளர்களும் பங்குபற்றி இருந்தனர்.
ஆனால் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அந்த நான்கு
பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை.
கட்சியின் உயர்பீடத்தில் அந்த நால்வரும் கேட்ட மன்னிப்பும் அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தாங்கள் ஜனாசா எரிப்புக்கு எதிராக போராடப்போவதாக கூறியதும் ஏமாற்று நாடகம் என்பது இப்போது தொழிலாக தெரிகின்றது ,
இதே போன்றுதான் அ இ ம கட்சியின் மூன்று உறுப்பினர்களும் கூட அந்த கட்சியின் தலைவர் ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதும் அவர்கள் அங்கே பிரசன்னமாகி இருக்கவும் இல்லை ,
ஆக இந்த உறுப்பினர்கள் ஏழு பேரும் இது விடயத்தில் எந்த அக்கரையும் இல்லாதவர்களாக வீதிகளுக்கு பாலம் போடுவதிலும் வீதி கொந்தராத்துக்களை பங்கிடுவதிலும் படு குசியாக உள்ளனர் போலும் ,
இதன் பின்னரும் இரண்டு கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் இவர்களுக்காக தங்கள் கட்சி சார்ந்து நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றால் அது அந்த கட்சிகளின் தலைமைகளின் பலவீனத்தை அல்லது அவர்களுக்கு இது விடயத்தில் உள்ள இரட்டை நாடகத்தை நிச்சயம் மக்கள் முன் நிருபிக்கும்.
அத்தோடு இரண்டு தலைவர்களும் தாங்கள் விரும்பியே தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசுக்கு ஆதரவு வழங்க அனுமதி வழங்கினர் என்ற கை உயர்த்தியவர்களின் தலைவர்கள் மீதான குற்றச் சாட்டை மக்கள் முன் உறுதி செய்வதாக அமையும் ,
இதுவரை எரிக்கப் பட்டவர்களின் உறவினர்களும் ,பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்களும் ,முஸ்லிம் சமூகத்தின் பெண்களும் கண்ணீரும் கம்பலையுமாக அழுது கொண்டு இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து உரிமை கேட்டுப் போராட வீதிகளில் வெயிலில் ஆர்ப்பரித்து நிற்க
அந்த மக்களின் பெயரால் வாக்குகளை ஏமாற்றிப் பெற்று பாராளுமன்றில் ஜனாசா எரிப்புக்கு ஆதரவாக கை உயர்த்தி ஆதரவு வழங்கி இந்த எரிக்கப் படும் மக்களின் ஜனாசாக்களின் பெயரால் பங்கு லாபங்களை பங்கு போட்டுக் கொண்டு படுத்துறங்கி மகிழும்
இவர்களுக்கு இந்த சமூகமும் அந்த மக்களுக்காக போராடுவதாக கூறும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அந்த கட்சிகளின் உயர்பீடங்களும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதே இன்றைய ஒவ்வொரு இலங்கை வாழ் முஸ்லிம்களின் கேள்வியாகும் .
இந்தக் கேள்விக்கான பதிலிலும் அவர்களுக்கு எதிராக அவர்களது கட்சி தலைமைகள் எடுக்கப் போகும் முடிவுகளிலுமே இனிமேல் முஸ்லிம் சமூக அரசியலின் எதிர்காலமே தங்கியுள்ளது .
இது இவர்களின் நாடகமா அல்லது திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்பாடா அல்லது வேறு ஏதும் விவகாரமா என்பதை காலம் உறுதி செய்யும் .
Shm firthows
0 comments:
Post a Comment