இம்ரான்கானை எமக்கு சந்திக்க விடாமல், அவருக்கு உயிராபத்து இருப்பதாக மழுப்பி, கோழைத்தனமாக அனுமதி மறுத்தது அரசாங்கம்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும் ஒருங்கே கையொப்பமிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால், இந்த அரசாங்கம் அவருக்கு உயிராபத்து இருப்பதாக மழுப்பி , பாதுகாப்பு காரணமாக அனுமதி வழங்க முடியாது என மிகவும் கோழைத் தனமான காரணத்தை முன்வைத்து தட்டிக் கழித்துவிட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இன்று (23) எமது நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கின்ற இஸ்லாமிய உலகின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் மிக அமைதியாக இந்த சமூகம் அனுபவிக்கின்ற அவஸ்தையை தெரியப்படுத்துவதற்காகவும், அவரது கவனத்தை ஈர்ப்பதற்காகவும் காலி முகத்திடலுக்கு முன்பாக பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் உட்பட ஏனைய மதங்களை அனுஷ்டிக்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி சம்பந்தமாக அவருக்கு தெளிவுபடுத்துவதற்காக அவரை சந்திப்பதற்கு அவகாசாத்தை அளிக்குமாறு அனைத்து கட்சிகளை சேர்ந்த 15 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக எழுதி பாக்கிஸ்தானிய உயர்ஸ்தானிகரிடத்தில் கோரிக்கையொன்றை வழங்கியிருந்தோம்.
ஆனால், இன்று அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெலயினால் பாதுகாப்பு காரணமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்ரான் கானை சந்திக்க விட முடியாது என்ற செய்தி துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அறியக்கிடைக்கின்றது. இந்த நாட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து எழுதி கையொப்பமிட்டு அனுப்பிய கோரிக்கைக்கு எங்களது அரசாங்கமானது பாக்கிஸ்தானிய பிரமுகர்களிடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தால் உயிராபத்து அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமென சொல்லி இருக்கின்றது.
எந்தவித அடிப்படையுமில்லாத மிகவும் கோழைத்தனமான காரணத்தை முன்வைத்து சந்திப்பதற்கு அவகாசத்தை பெற்றுத்தருவதற்கு மறுத்திருக்கின்றார்கள். இத்தகைய அரசாங்கத்திடம் எதனை எதிர்பார்க்க முடியும். தங்களுடைய சொந்த பிரதமர் பாராளுமன்றத்தில் சொல்லிய வார்த்தைக்கே மதிப்பில்லாத நிலையில் பாக்கிஸ்தானிய பிரதமரின் வார்த்தைக்கு என்ன மதிப்பு இருக்கப் போகின்றதோ என்பது எனக்கு தெரியாது.
இருந்தபோதிலும், இன்று எங்களுக்கு இந்த நாட்டிற்குள் நடக்கின்ற அநீதியை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய நாடுகள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளையாவது இல்லாமல் செய்துவிட்டு ஆதரவளியுங்கள் என்று தான் நாங்கள் கேட்கின்றோம்.
நாங்கள் இந்த நாட்டிற்கு எதிரானவர்கள் அல்லர். இந்த நாட்டின் இறையாண்மைக்கு, சுயாட்சிக்கு எதிரானவர்கள் அல்லர். இந்த நாட்டில் சகல இன மக்களும் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்கின்ற ஒரு சூழல் அமையப் பெறாமல் முஸ்லிம்களின் மேல் வெறுப்பூட்டுகின்ற நடவடிக்கைகளையும், பேச்சுக்களையும் பேசினால் தான் இவர்களால் இந்த ஆட்சியில் நீடித்திருக்க முடியுமென நம்புகின்ற ஓர் அரசாங்கமாக இருந்து எங்களுக்கு எதிராக அநீதியை கட்டவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கின்றது.
இதனை அவதானித்த சர்வதேச சமூகம் ஜெனீவா பிரேரணையில் அதனையும் உள்வாங்கியிருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் இஸ்லாமிய நாடுகள் இவ்விடயங்கள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பதை வேதனையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
அயல் நாட்டிலிருந்து வருகையளிக்கின்ற தலைரொருவரும் இந்த நாட்டு கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் பாசத்துக்குள்ளான வீரரை சந்திப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமளிக்காமல் தடுத்துவிட்டார்கள். மிகவும் அவமதிக்கின்ற நிலையாகவே இதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. எங்களுடைய பிரதமரையே இவர்கள் அவமதித்துவிட்டார்கள்.
இந்நிலையில் தான் எங்களுடைய போராட்டத்தை தொடர்ச்சியாக செய்துகொண்டே இருப்போம். எங்களுக்கு நடக்கின்ற அநீதி களையப்பட்டு, நீதி கிடைக்கும் வரை போராடுவோம். இந்த போராட்டத்தின் மூலமாக இந்த ஆட்சியை காலப் போக்கில் வீட்டுக்கு அனுப்புகின்ற மாபெரும் மக்களின் போராட்டமாக இது வெடிக்கும் என்பதையும் இந்த அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கின்றோம்.
இந்நாட்டு முஸ்லிம்கள் மாத்திரமல்ல, ஏனைய மதத்தவர்களும் பயத்தோடும், பீதியோடும் தங்களுடைய சொந்தங்களுள் கொவிட் - 19 தொற்று காரணமாக உயிரிழக்குகின்றவர்களுக்கு நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை கோரி நிற்கின்றனர். சகல விஞ்ஞான ரீதியான காரணங்களையும் மறுதளித்து இந்த அரசாங்கம் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
மரணித்த பிற்பாடு நல்லடக்கத்தை மறுக்கின்ற இந்த கேவலமான அரசுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டாம் என்பதை மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றேன். குறைந்த பட்சம் இம்ரான் கானின் விஜயத்திலாவது இந்த நல்லடக்கத்திற்குரிய உரிமையை எங்களுக்கு பெற்றுத் தருமாறு வேண்டுகின்றோம். இதனை அரசு கடைசி கட்டத்திலாவது அனுமதியளிக்க வேண்டும் என கேட்கின்றோம்.
0 comments:
Post a Comment