எம்.எஸ்.தீன் -
ஆளுந்தரப்பு சார்பு அரசியலையே எப்போதும் முஸ்லிம் கட்சிகள் தெரிவு செய்து வந்துள்ளன. எதிர்க்கட்சி அரசியல் என்பது முஸ்லிம் கட்சிகளுக்கு தற்காலிகமானதாகவே இருந்துள்ளன. பின்னர் ஏதோ ஒரு அடிப்படையில் ஆளுந்தரப்புடன் இணைந்து கொள்வதே முஸ்லிம் கட்சிகளின் கடந்த காலமாகும். அத்தகையதொரு நிலையை நோக்கியே முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்;சியில் இருந்த போது, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவரும் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார்கள். அத்தகையதொரு நிலைப்பாட்டில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பங் கொண்டுள்ள போதிலும், அதற்குரிய பூரண சமிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் காட்டவில்லை.
இதனிடையே ரவூப் ஹக்கீமுக்கும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், கட்சியின் உள்ளுர்பிரமுகர்கள் வரை செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றன.
கட்சியின் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை தங்களோடு நெருக்கமாக வைத்துக் கொள்வதற்கு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலோட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருன்றார்கள்.
தற்போதைய நிலையிலான அஞ்சலோட்ட முடிவுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதாகவே தெரிகின்றன. 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு கட்சியின் தலைமையினது முடிவுக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்ததன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
விசேடமாகக் கூறுவதானால், தொழில் வாய்ப்புக்களுக்குரியவர்களை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தை உள்ளுராட்சி தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளார்கள். இதனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியது சரியென்றும், அதனால்தான் கோவிட் 19 தொற்றால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியதென்றும் உள்ளுராட்சித் தலைவர்கள் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கட்சியின் தலைவருக்கு எதிரான மக்கள் அலையை ஏற்படுத்தவதற்கு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்ளையும், உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிருந்து காட்டமான கருத்தொன்று வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த அவர், 'கட்சியின் உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படும் போது, அவர்கள் கண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒரு புறம். ஆனால், கட்சியுடைய ஆதரவாளர்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் இருக்கும் வரைதான் கட்சித் தலைமையிலும் நான் இருப்பேன். அந்த செல்வாக்கை நான் இழந்தால், கட்சித் தலைமையில் நீடித்திருப்பதை ஒருபோதும் நான் விரும்பமாட்டேன். எஞ்சியிருக்கின்ற பாராளுமன்ற ஆயட்காலத்தில் அவர்களுடைய ஆசனங்களின் பெறுமானம் இந்தக் கட்சியை பலவீனப்படுத்திவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான உச்சக்கட்ட முயற்சியை நான் இறுதிக்கட்டம் வரை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
ஈற்றிலே தீர்மானம் எடுப்பவர்கள் மக்கள், கட்சியின் ஆதரவாளர்கள், அடிமட்ட போராளிகள். அவர்களுடைய மன உணர்வுகள் சம்பந்தமான பெறுமானத்தை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், தலைமையும் உணர்ந்து கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக நடப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை ஒரு தேர்தல் வரும்போது தெரிந்து கொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீமின் இக்கருத்து எதிலும் ஒட்டிக் கொள்ளாத ஒன்றாகவே உள்ளது. கடந்த காலங்களிலும் கட்சியை காப்பாற்றுவதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு இணங்க வேண்டியேற்பட்டதென்று 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கிய வேளை குறிப்பிட்டிருந்தார்.
அதே வேளை, கட்சிக்குள் தமது தலைமைத்துவதற்கு எதிரான சதிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனையும் அவர் உணர்ந்துள்ளார் என்பதும் அவரின் கருத்துகள் கோடிட்டுக் காட்டுகின்றன.
சர்வதேசத்தின் அழுத்தம்
இதே வேளை, கோவிட் தொற்றால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்துள்ளமை குறித்து முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 'தங்களின் முயற்சியினால்தான் அது சாத்தியமானது' என்று தமது குழுக்களிடம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷ ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்படும் என்ற போது. மறுநாள் அதனை ஆளுந் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே மறுத்தார்கள். கோவிட் தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரியே 20வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினோம். ஆனால், அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று அப்போது இதே பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக தெரிவித்தார்கள்.
பின்னர், அரசாங்கம் கொரோனா தொற்றால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்குரிய வர்த்தமானியை வெளியிட்டதன் பின்னர், இதற்கு நாங்களும் காரணமென்று அரசியல் இலாபத்தை மையப்படுத்திய பிரச்சாரங்களை தற்போது ஆரம்பித்திருக்கின்றார்கள்.
அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்தமைக்கு பிரதான காரணம் சர்வதேச அழுத்தமாகும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் முஸ்லிம் நாடுகளும், ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைப் பேரவை, முஸ்லிம் நாடுகளின் அமைப்பாகிய ஓ.ஐ.சி அமைப்பும், சர்வதேச மன்னிப்பு சபையும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று வலியுறத்தியதோடு, கட்டாய எரிப்புக்கு எதிராக தமது கண்டனங்களையும் வெளியிட்டிருந்தன.
இதே வேளை, இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பற்றியதொரு குற்றச்சாட்டுக்கள் மற்றும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை முறியடிப்பதற்கு இலங்கை கடும்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றது.
இதற்காக இலங்கை தனது பிரேரணை ஆதரவாக நட்பு நாடுகளை தயார்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றது. ஆகவே, முஸ்லிம் நாடுகள் தம்மை எதிர்த்து விடக்கூடாது என்பதற்கான ஒரு நகர்வாகவும் இலங்கை அரசாங்கம் ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி அளித்துள்ளது எனலாம்.
அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு வருகைதந்த போது கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்பது குறித்து; ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச வேண்டுமென்று ஆர்ப்பாட்டங்கள் மூலம் அழுத்தங்கள் அளிக்கப்பட்டன.
இவ்வாறான பின்னணியில்தான் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளது. இந்தப் பின்னணியை புரிந்து கொள்ளாது, 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று சொல்லிக் கொண்டிருப்பதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.
பிரதமது மஹிந்தவின் அறிவிப்பினை ஆளும் கட்சி உறுப்பினர்கள் மறுதலித்தபோது, 20இற்கு வாக்களித்த தம்மை அரசாங்கம் ஏமாற்றிவிட்டதென்று பகிரங்கமாகச் சொன்னவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் போராடுவோம் என்று ஊடக அறிக்கைகளையும் வெளியிட்டு இருந்தார்கள். பின்னர் அவர்கள் மௌனிகளாகியிருந்தனர் என்பதனையும் மறந்து விட முடியாது.
இதனை விடவும் அடக்கத்திற்கான அனுமதி கிடைத்த பின்னர் அதற்கான இடங்களை தெரிவு செய்வதில் செல்வாக்கு செலுத்தினார்களா என்றால் இல்லை.
அடக்கத்திற்கான அனுமதி தமக்கு கிடைத்த அரசியல் வெற்றி என்று கருதினார்கள் அதனால், ஜனாஸாக்களை அடக்கும் இடங்களை தெரிவு செய்யும் செயற்பாடு தொடர்பில் கவனம் செலுத்திருக்கவில்லை.
அடிப்படையற்ற கருத்து
அரசாங்கம் ஏற்கனவே கொரோனா தொற்றால் மரணிப்பவர்களை தகனம் செய்வதே பொருத்தமான நடவடிக்கையாகும்.
அடக்கம் செய்தால் நிலத்தடி நீர் மூலமாக கொரோனா வைரஸ் பரவக் கூடுமென்று தெரிவித்தது. ஆனால், சுகாதார நிபுணர்களின் அறிக்கையில் விஞ்ஞான அடிப்படையில் நிருபிக்கப்படவில்லை. அதனால், கொNருhனா தொற்றால் மரணிக்கின்றவர்களை தகனம் செய்யும் முடிவு அரசியல் நோக்கமானது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
நிலத்தடி நீர் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று ஏற்கனவே தெரிவித்துக் கொண்ட அடிப்படையற்ற கருத்தினை உண்மை என்று நிருபிப்பதற்காகவே அடக்கம் செய்வதற்குரிய இடங்களை அதரிவு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தகனம் செய்யும் முடிவு அரசியல் தேவைக்காக இருந்தாலும், அந்த முடிவால் அரசாங்கம் தன் தலையில் தாமாகவே மண்ணை கொட்டிக் கொண்டதற்கு சமமாகின்றது. தற்போது அதிலிருந்து மீள்வதற்காகவே பல வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது.
அதில் குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால், தீர்மானத்தில் அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அகற்ற வேண்டும் என்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சி.ஏ.சந்திரப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இலங்கை தொடர்பான முதன்மை குழுவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதன் மூலம் கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்தமை இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகின்றது.
இணக்கப்பாட்டு அரசியல்
இதே வேளை, முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களும் அரசாங்கத்தோடு இணக்கப்பாட்டுடன் நடந்து கொண்டால்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாமென்று பரப்புரை ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
முஸ்லிம்களுக்கு பர்தா முதல் முஸ்லிம் தனியார் சட்டம் வரை பல பிரச்சினைகள் உள்ளன. கல்முனையிலும் பிரச்சினைகள் உள்ளன. பொத்துவில் முதல் புல்மோட்டை வரை கிழக்கு மாகாணத்திலும், வடமாகாணத்திலும் முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாதுள்ளன.
முஸ்லிம் கட்சிகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தோடு இணக்க அரசியலையே செய்து கொண்டிருக்கின்றன. இணக்க அரசியலில் முஸ்லிம்களின் மேற்படி பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக பிரச்சினைகளின் எண்ணிக்கை ஆட்சி மாற்றங்களின் பின்னர் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றன.
முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தமையால்தான் எல்லா ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்காக குரல் கொடுப்பதற்கும் முடியாத பலவீனத்தில் இருந்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம் பிரதிநிதிகளின் தன்னல நாட்டமே சமூகத்திற்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுக்க முடியாது மௌனித்து இருப்பதற்கான பிரதான காரணமாகும்.
முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தமையால்தான் எல்லா ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்காக குரல் கொடுப்பதற்கும் முடியாத பலவீனத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. இதனால்தான் அரசாங்கத்தின் எல்லா சட்ட மசோதாக்களுக்கும் மீள்விசாரணையின்றி ஆதரவு அளித்து வந்துள்ளார்கள்.
கடந்த மைத்திரி – ரணில் கூட்டாட்சியில் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பெரும் பாதிப்படைந்தார்கள். முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களை ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தவில்லை. அவர்களை அரசாங்கமே பாதுகாத்துக் கொண்டது. ஆயினும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை அரசாங்கத்துடனே பங்காளிகளாக இருந்தார்கள்.
கடந்த ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருந்த போது, நெருக்கடிகளை சமாளிப்பதற்காக தாம் வகித்த அமைச்சர் பதவிகளை முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமாச் செய்தார்கள். அந்த இராஜினாமாவை பெரும் இமாலய சாதனையாக தற்பொது தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பிரிதொரு அரசியல் நகர்வுக்காக ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரிலேயே அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள் என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும்.
ஆகவே, இத்தகைய முஸ்லிம் கட்சிகளிடமும், பிரதிநிதிகளிடமும் சமூகப்பற்றை எதிர்பார்க்க முடியாது. கொள்கையை அவதானிக்க முடியாது. ஒட்டு மொத்தமாக 'ஆட்சியாளர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவே' செயற்பட்டுள்ளன. தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதனால்தான், ஜனாதிபதி பதவியில் ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடலாமென்பதற்காக கொண்டு வரப்பட்ட 18வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது. ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காகவும் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள்.
தற்போது மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கவும், இரட்டை பிரஜா உரிமையுடையவர்கள் தேர்தலில் போட்டியிடலாமென்பதiயும் உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கும் ஆதரவு வழங்கியுள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் சமூகத்திடம் அம்பலப்பட்டுள்ளார்கள்.
இத்தகையவர்கள் அடுத்த பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமென்று அரசாங்கத்தினால் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால் அதற்கும் ஆதரவு வழங்குவார்கள் என்பதுதான் முஸ்லிம் கட்சிகளினதும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நடத்தைக் கோலமாகும்.
இதே வேளை, முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்ட மசோதாக்களுக்கு கையுயர்த்தி பயன் அடைந்துள்ளார்கள் என்பது பொய்யான கூற்றல்ல. முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹஸன்அலி, முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் இந்த உண்மையை உரத்துச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் கூற்றை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மறுக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு கட்சிக்குள் நெருக்கடிகள் ஏற்பட்ட நிலையில் அக்கருத்தினை வெளிப்படுத்தியமையால் அது பெரிது படுத்தப்படவில்லை.
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் சட்ட மசோதாக்கள் விடயத்தில் 'ருசி' கண்டவர்கள். அத்தகையவர்களுக்கு முஸ்லிம் சமூகம் எப்போது கற்பிதத்தினை வழங்கப்போகின்றது என்பதுதான் தற்போது மேலெழுந்துள்ள கேள்வியாகும்.
வீரகேசரி – 07.03.2021

0 comments:
Post a Comment