• Latest News

    April 24, 2021

    ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன முன்வைத்த திருத்தங்களின் பட்டியலை குப்பையில் போடுமாறு விஜேதாஸ ராஜபக்ஷ நீதிமன்றில் எதிர்ப்பு

     எம்.எப்.எம்.பஸீர்)

    'நாட்டில் ஒரு சட்ட மா அதிபரே செயற்பட முடியும்.  அவரை பிரதிவாதியாக குறிப்பிட்டே உயர் நீதிமன்றின் நியாதிக்கத்தை உறுதி செய்யும் விஷேட மனுக்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில், சட்ட மூலங்களில் பாராளுமன்ற குழு நிலையின் போது முன்னெடுக்கப்பட எதிர்பார்க்கப்படும்  திருத்தங்களை அவரே முன் வைக்க வேண்டும். 

    இதுவே  உயர் நீதிமன்ற சம்பிரதாயம். ஆனால் இந்த துறைமுக நகர ஆணைக் குழு சட்ட மூல விசாரணைகளில் என்றும்  காணாத நடைமுறைகளையே காண முடிகிறது.' என  ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் அறிவித்தார்.

    துறைமுக நகர ஆணைக் குழு சட்ட மூலத்தில், பாராளுமன்ற குழு நிலையின் போது கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களின் பட்டியலை, இடையீட்டு மனுதாரரான நிதி அமைச்சின் செயலர் ஆட்டிகல சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, நீதிமன்றுக்கு சமர்ப்பித்த நிலையிலேயே, அதனை குப்பையில் போடுமாறு பிரதம நீதியரசரிடம் சுட்டிக்காட்டி ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ மன்றில் கருத்துரைத்தார்.

    நேற்றைய தினம், துறைமுக நகர ஆணைக் குழு சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்களின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், ஜனடஹிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ எழுந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

    'என்றும் காணாத ஒரு சம்பிரதாயமே  இன்று உயர் நீதிமன்றில் அவதனைக்க முடிந்தது.  சட்ட மூலத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களை  வழமையாக சட்ட மா அதிபர் தரப்பே மன்றுக்கு முன் வைக்கும்.

    இங்கு என்ன நடக்கிறது.

    இடையீட்டு மனுதாரர்களான ஜனாதிபதியின் செயலரின் சட்டத்தரணியும், நிதி அமைச்சின் செயலரின் சட்டத்தரணியும் திருத்தங்களை முன் வைக்கின்றனர்.

     நாட்டில் ஒரு சட்ட மா அதிபரே செயற்பட முடியும்.

    வழமைக்கு மாற்றமான சம்பிரதாயத்தை மன்றில் அவதானிக்கின்றோம்.

    இவ்வாறான  திருத்தங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதனை குப்பையில் போட வேண்டும். சட்ட மா அதிபர் ஊடாகவே, சட்ட மூலம் தொடர்பிலான இறுதி திருத்தங்கள் மன்றுக்கு அளிக்கப்படல் வேண்டும்.' என  குறிப்பிட்டார்.

    இதன்போது திருத்தப் பட்டியலை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி  சஞ்ஜீவ ஜயவர்தன, தான் குறித்த பட்டியலை முன் மொழிவாக முன்வைத்ததாகவும், சேவை பெறுநர் சார்பில் அன்றி, மன்றுக்கு உதவியாகவே அதனை முன்வைத்ததாகவும் கூறினார்.

    இந்நிலையில் திறந்த மன்றில் பேசிய பிரதம நீதியரசர்  ஜயந்த ஜயசூரிய,  சட்ட மூலத்துக்கு  கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் என்ன என்பதை பட்டியலிட்டு, சட்ட மா அதிபர் ஊடாக மன்றுக்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் எழுத்து மூல சமர்ப்பணத்தின் போது முன் வைக்குமாறு அறிவித்தார்.

    Virakesari -

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன முன்வைத்த திருத்தங்களின் பட்டியலை குப்பையில் போடுமாறு விஜேதாஸ ராஜபக்ஷ நீதிமன்றில் எதிர்ப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top