ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள்
அடுத்த தலைவர் யார்?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான இரா.சம்பந்தன் சுகயீனமாக இருக்கின்றார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்;டதன் பின்னர் உடல் நிலையில் தேறியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைவர் பதவியில் எம்.சுமந்திரன் கண் வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே கூட்டமைப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் கூட்டு. பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கே கூட்டமைப்பை தமிழ்க் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. புதிய தலைவர் தெரிவு வரும் போது கூட்டமைப்புக்குள் தலைமைத்துவ போட்டியால் பிளவுகள் ஏற்படலாம் என்று எதிர்பாக்கப்படுகின்றது.
பதிவுகளை வைத்தவர்கள் எங்கே?
கொவிட் தொற்றால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்கள் ஓட்டமாவடியில் உள்ள மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்படுகின்றன. 19ஆம் திகதி வரை இங்கு 686 கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆயிரம் உடல்களையே அடக்கம் செய்வதற்கு போதுமான இடமே உள்ளது.
ஆனால், அது பற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை கொள்வதாக தெரியவில்லை.
இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்குரிய அனுமதியை பெற்று விட்டதாக அம்பாரை மாவட்த்தில் உள்ள எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் முகநூல்களில் எழுதினார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களும் அதனை மறுக்கவில்லை.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் இறக்காமம் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடமென்று சுகாதார அமைச்சுக்கு சிபார்சு செய்து கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இதன் பிரதிகளை மாவட்;டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த பிரதியை வைத்தே எங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சாதித்து விட்டாரென்று சீக்கியர் டான்ஸ் ஆடினார்கள்.
ஆனால், இன்னும் இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டும், அதன் புகழ்பாடியும், காபட் வீதி அமைத்து கொமிசன்களை பக்கட்டில் போட்டுக் கொண்டும் சுற்றும் கதிரையில் இரந்து சுற்றும் விழிச் சுடரே என்று பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே இறக்காமத்தில் அடக்கம் செய்வதற்குரிய அனுமதியை பெற்றுக் கொடுங்கள். இல்லாது போனால், கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமில்லாது காத்துக் கொண்டிருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படும்.
ஆபத்து வருவதற்கு முன்னர் நடவடிக்கைகளை எடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மஜ்மா நகரில் (19.06.2021) மொத்தமாக 686 கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் 648 முஸ்லிம்களின் ஜனாஸாக்களாகும். 14 கிறிஸ்தவ மரணங்களும், 15 இந்து மரணங்களுமஈ; 07 பௌத்த மரணங்களும், 02 வெளிநாட்டவர்களின் மரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணித்தியாலங்களில் மூன்று மாற்றங்கள்
அடங்கு. அடங்க மறுத்தால் அடக்குவோம் என்பது போலவே அமைச்சர் விமல் வீரவன்சவின் நிலையுள்ளது.
பசிலுடன் முரண்பட்டுக் கொண்ட் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் பொறுப்பிலிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழிற்துறை அமைச்சு, விவசாய அமைச்சின் கீழிருந்த இயக்கங்கள், பொறுப்புகள், நிறுவகங்களைத் திருத்தும் புதிய அரசாங்க வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ளார்.
இது குறித்து நாவலபிட்டியில் வைத்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, லங்கா பொஸ்பேட் கடந்த காலத்தில் விவசாயத் துறையின் கீழ் இருந்தது என்பதே அதற்குக் காரணம் என்று நான் நினைக்கின்றேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமது பொறுப்பில் இருந்தவற்றை எடுத்து மஹிந்தானந்த அளுத்கமகேவின் விவசாய அமைச்சின் கீழ் கொண்டு சென்றமையால் விமல் வீரவன்ச அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு நானே முக்கிய காரணமென்று சூளுரைத்தவரின் நிலையே இதுவாகும்.
24 மணித்தியாலங்களில் அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சு தொடர்பில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழில் அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், துறைமுக அதிகார சபையின் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் தயா ரத்நாயக்க கைதொழில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னரே அமைச்சர் விமல் வீரவன்சவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த லங்கா பாஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கழுதையால் கடனை அடைக்கும் பாகிஸ்தான்
சீனா தமது பட்டு விரிப்பு திட்;டத்திற்கு அமைய பல நாடுகளுக்கும் கடன்களை கொடுத்து, அந்நாடுகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டுள்ளது. தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்காகவே சீனா இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால், சீனாவிடம் கடனை பெற்ற பாகிஸ்தான் கழுதை மூலமாக தமது கடனை செலுத்திக் கொண்டிருக்கின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? அதுதான் உண்மை. இலங்கையும் கழுதைகளின் இனப் பெருக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்தால் சீனாவிடம் பெற்ற கடனை செலுத்தலாம் அல்லவா?
உலகளவில் அதிக கழுதைகளை கொண்ட மூன்றாவது நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் எருமைகளின் எண்ணிக்கை 12 இலட்சமாகவும், ஆடுகள் எண்ணிக்கை 3.2 கோடியில் இருந்து 3.5 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
செம்மறி ஆடு இனப்பெருக்க எண்ணிக்கை ஆண்டுக்கு 4 இலட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.
இதனால் தற்போது பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் உள்ளன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் சீனாதான் என்று கூறப்படுகிறது.
சீனாவில் கழுதைகளுக்கு அதிகளவில் கிராக்கி உள்ளது. இதில் இருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகள் கிடைக்கின்றன. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துகளும் கழுதையில் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்துகளையும் கழுதையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்கள் வாங்கி கொன்று, மருந்துகளை தயாரிக்கின்றன.
இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டுகிறது. மேலும், சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவும் பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது. இதன் காரணமாகவே, கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆர்வம் காட்டி வருகிறார். கழுதைக்காகவே இந்நாட்டில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment