• Latest News

    July 20, 2021

    05 இலட்சம் திருமணங்கள் இரத்து! ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள்

    அரசுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்
    எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கூட்டமொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது.

    மேற்படி இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் திகாம்பரம், ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்ன உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
    ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், நாட்டை நல்வழிப்படுத்துவதற்கும் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

    நாடு இருள் சூழ்ந்த யுகத்தை நோக்கி நகர்வதாகவும், மீள நாட்டில் வெளிச்சம் உண்டாவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.
    மேலும், எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

    ஜனாதிபதியை விட அதிக சம்பளம் பெற்றவர்
    நாட்டின் ஜனாதிபதியின் சம்பளத்தை விட 40 மடங்குக்கும் அதிகமான தொகையைப் பெற்ற அரச நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார்.

    அரச நிறுவனத்துடன் இணைந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் அவர் மாதமொன்றிற்கு கிட்டத்தட்ட ரூ. 4 மில்லியன் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து சமீபத்தில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர். இது தொடர்பில் பொறுப்பான அமைச்சரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நீக்கப்பட்ட தலைவர் மற்றொரு அரச நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பதவியைப் பெற்ற பின்னர் மாதத்திற்கு சுமார் 4 மில்லியன் ரூபாய் சம்பளம் பெற்ற நபருக்கு ரூ. 250,000 வரை கொடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    அவர் சுமார் ரூ. 4 மில்லியன் சம்பளத்தைப் பெறுகையில், நாட்டின் தலைவராக இருக்கும் ஜனாதிபதியின் மாத சம்பளம் ரூ. 97,500 மாத்திரமே.

    தேர்தலுக்கு தயாராகும்படி பசில் தெரிவிப்பு

    உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
    அலரிமாளிகையில் நேற்று முன்தினம் மாலை முன்னாள் மாகாண சபைப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    அதன்படி அடுத்தவருடத்தின் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்திவருவதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    05 இலட்சம் திருமணங்கள் இரத்து

    கொரோனா தொற்று பரவலினால் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் சுமார் 5 இலட்சம் திருமண நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    இந்த தகவலை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி வெளியிட்டிருக்கின்றார். அத்துடன்  நாட்டில் குழந்தைகள் பிறப்பு வீதமும் குறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ஆர்ப்பாட்டக்காரர்குளுக்கு கையசைத்த ஜனாதிபதி

    தொழிற்சங்க தலைவர்களை கைது செய்து தனிமைப்படுத்துவதற்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
    இதன்போது காரில் அந்த பகுதிக்கு வந்த ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து கையசைத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
    இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

    கதிரை மாற்றப்படவுள்ள அமைச்சர்கள்
    விரைவில் நான்கு முக்கிய அமைச்சர்களின் ஆசனங்கள் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி அமைச்சர்களான உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களின் பதவிகளே இவ்வாறு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
    எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கல்வி அமைச்சராகவும், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  மேலும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்குக் கல்வி அமைச்சர் பதவியை அளிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

    அதேவேளை, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு அவர் கடந்த காலத்தில் வகித்துவந்த வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சுப் பதவியை அளிக்கவும் அரச உயர்பீடம் தீர்மானித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு கோடியில் இரு விமானங்களை அலங்கரிக்கும் அரசாங்கம்
    வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதால் இழுத்து மூடும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், கண்டி தலதா மாளிகை பெரஹராவை விளம்பரப்படுத்தவென விமானமொன்றுக்கு பல இலட்சம் ரூபா செலவிட்டு அரசாங்கம் ஸ்டிக்கர் அலங்காரம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    எயார் பஸ் ரகத்தைச் சேர்ந்த A330-300 மற்றும் 4R-ALP ஆகிய ஸ்ரீலங்கன் விமானங்கள் இரண்டை இவ்வாறு 78 இலட்சம் ரூபா செலவில் அலங்கரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விரண்டு விமானங்களையும் அலங்கரிப்பதற்கான ஸ்டிக்கர்கள், அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி விமானங்களை அலங்கரிப்பதற்காக மொத்தம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக செலவு ஆகும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.  அதேபோல விரைவில் ஓரிரு வாரங்களில் மேலும் 06 விமானங்களுக்கு அலங்காரம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை மத்திய வங்கியில் டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியும் வரையறுக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் உணவுத்தட்டுப்பாடு வரலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனம் இவ்வாறு செலவுகளை செய்வது நியாயமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    இலங்கையில் சிசு பிறப்பு வீதம் சடுதியாக வீழ்ச்சி
    கொவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் சிசு பிறப்பு வீதம் சடுதியாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
    கொவிட் தொற்றினால் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு இதில் தாக்கத்தை செலுத்தியதாகவும், அந்தக் காலகட்டத்தில் திருமணங்கள் இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இலங்கையில் ஒருவருடத்தில் 350000 சிசுப் பிறப்புக்கள் பதிவாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆளுங்கட்சிக்குள் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்ப்பு

    இலங்கையில் பணிபகிஷ்கரிப்பை நடத்திவரும் ஆசிரியர்கள் தரித்திரர்கள் என்று கூறிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு ஆளுங்கட்சியில் இருந்தே கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதேபோல, எரிபொருள் விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானம், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட அறிந்திருக்கவில்லை என்று ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில்; நடைபெற்றது.

    இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஸ்ரீலங்கா காவல்துறையினர் அவர்களைத் தூக்கிச்சென்று தனிமைப்படுத்தலில் அனுமதித்திருக்கின்றனர். இந்த செயற்பாட்டை எதிர்த்து நான்காவது நாளாக இன்றைய தினம் ஸ்ரீலங்காவில் ஆசிரியர்கள் இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர்.

    ஆசிரியர்களின் இந்த செயற்பாட்டை அண்மையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஸ்ரீலங்கா அரச பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கடுமையான கண்டித்ததோடு, அவர்கள் தரித்திரக்காரர்கள் என்றும் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவரும் நிலையிலேயே ஆளுங்கட்சியின் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    'எரிபொருள் விலையேற்றம் செய்ய வேண்டுமென அமைச்சரவையிலும், பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர்கூட நினைக்கவில்லை. அதிகரிக்க அவசியம் என்றாலும் இப்போதைய நெருக்கடி நிலையில் அதிகரிக்கும் எனநினைக்கவில்லை. குழுவொன்று எடுத்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்தியதன் காரணத்தினால் மக்களே பாதிக்கப்பட்டனர்.

    எரிபொருள் விலையேற்றம் காரணமாக வாகனங்களுக்கு பெறப்படும் டீசல், பெற்றோலின் விலை மாத்திரம் உயரவில்லை, மாறாக அனைத்து அத்தியாவசிய சேவை, பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. ஆகவே இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பதாயின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆகவேதான் எமது விமர்சனத்தை முன்வைத்தோம். ஆனால் தனிப்பட்ட நபரை இலக்கு வைத்து அல்ல.

    எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதோடு நிவாரணம் வழங்கவும் வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் தலையீடு செய்யவும் வேண்டும். பொருட்கள் சேவைகளின் விலைகளை நிர்ணயிப்பது குறித்த திட்டமொன்றை நிதியமைச்சர் செய்துவருகின்றார்.

    இன்னும் சில மாதங்களில் பாரிய நிவாரணம் அறிவிக்கப்படும். அதேபோல ஆசிரியர்கள் தரித்திரர்கள் என்று கூறிய அமைச்சர் கெஹலியவின் கருத்தானது அந்த நேரத்தில் அவர் வாயிலிருந்து வெளியே வந்ததாக இருக்கலாம். அவர் ஆசிரியர்கள் மீது மதிப்புவைத்திருப்பவர்.

    தனிப்பட்ட ரீதியில் அவரது அறிவிப்பை நாங்கள் ஏற்கமாட்டோம். ஆனால் அவர் வேண்டுமென்றே அவர் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. ஆசிரியர்கள் மிகுந்த அறிவாளிகள் என்பதால் அவர்களும் சற்று பொறுமையுடன் செயற்பட வேண்டும்'


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 05 இலட்சம் திருமணங்கள் இரத்து! ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top