எம்.எஸ்.தீன் -
முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுய நலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வ தற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன.
முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுய நலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வ தற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன.
அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.
இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. மற்றப்படி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிக்கு தெளிவாக தெரியும்.
இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. மற்றப்படி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிக்கு தெளிவாக தெரியும்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆதரவாக வாக்களித்தார். ஆனால், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முடிவுக்கு மாற்றமாக வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று முடிவினை எடுக்கவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்விலவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். அதாவது அமைச்சர் உதய கம்மன்விலக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார்கள்.
அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இவ்விரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகளின் பின்னால் அவர்களின் தனிப்பட்ட அரசியல் தேவையே உள்ளது.
இக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் பொதுஜன பெரமுனவுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார்கள். உதய கம்மன்வில உட்பட இன்றைய அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகள் என்று முஸ்லிம் வாக்காளர்களின் மனங்களில் கருத்துக்களை விதைத்தார்கள். பொதுஜன பெரமுனவும், உதய கம்மன்வில போன்றவர்களும் தேர்தலில் வெற்றி பெற்றால் முஸ்லிம்களினால் நிம்மதியாக வாழ முடியாதென்று இனவாதத் தீயில்தான் தமது வெற்றியை உறுதி செய்து கொண்டார்கள்.
ஆனால், தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் எலும்புத் துண்டுகளை தேடுகின்றவர்களாக மாறியுள்ளார்கள். அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்களை மூடிக் கொண்டு ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் மற்றும் உரிமைகள் குறித்து மௌனித்துள்ளார்கள்.
உதய கம்மன்விலவை முஸ்லிம் விரோத போக்குடைய இனவாதி என்று தேர்தல் மேடையில் கைகளை உயர்த்தி ஆவேசமாக பேசிய மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்விலவுக்கு ஆதரவாக கையுயர்த்தியுள்ளார்கள்.
அதே வேளை, கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. உதய கம்மன்விலவை முஸ்லிம்களின் விரோதிகளாகக் காட்டியவர்கள், அவர் எங்களின் தோழர் என்று காட்டும் வகையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தகைய குணங்களைக் கொண்டவர்கள் என்பது இன்னுமொரு தடவை நிருபிக்கப்பட்டுள்ளது. ஆயினும், முஸ்லிம் சமூகம் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளின் மூலமாக இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதே யதார்த்தமாகும்.
உதய கம்மன்வில முஸ்லிம்களுக்கு எதிரான போக்குடைய பௌத்த கடும்போக்குவாதியாராவார். இவர் முஸ்லிம்களுக்கு எதிராக பல கருத்துக்களை தொடர்ச்சியாக முன் வைத்துக் கொண்டிருப்பவர். பிவித்துரு ஹெல உருமயவின் தலைவராகவும் உள்ளார்.
இக்கட்சியின் பிரதான கொள்கை நாட்டில் பௌத்த மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக பல செயற்பாடுகளை முன்னெடுத்தவர் என்ற குற்றச்சாட்டையுடைய மதுமாதவ அரவிந்தன் உதய கம்மன்விலவின் கட்சியின் முக்கிய உறுப்பினராவார். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கும் இடமென்ற கருத்தக்களை முன் வைத்தவர். குர்ஆன் மதரஸாக்கள் மூடப்பட வேண்டுமென்ற பௌத்த இனவாதிகளின் கருத்துக்களுடன் உடன்பாடு கொண்டவர். மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துக்களை முன் வைத்தவர்களில் ஒருவர். முஸ்லிம்களின் தனியார் சட்டத்திற்கும் எதிரானவர்.
இத்தகைய முஸ்லிம் விரோத நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஒருவருக்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது கூட ஒரு வகையில் ஆதரவான நிலைப்பாடாகும்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பவில்லை என்பதே அவர்களின் தீர்மானமாகும். ஆனால், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை என்பது அவர்கள் ஆபத்தானவர்கள் என்பதனைக் காட்டுகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் மேல் பல போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, முஸ்லிம்களின் முதுகுகளின் மீது அரசியல் செய்து கொண்டிருக்கும் உதய கம்மன்வில எவ்வாறு முஸ்லிம்களை பௌத்தர்களுக்கு எதிரானவர்கள், பயங்கரவாதிகள், நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று பௌத்தர்களிடம் பிரச்சாரம் செய்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டர்களோ, அதனைப் போன்றே முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்வில போன்றவர்களின் கருத்துக்களில் சவாரி செய்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
இவ்விரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்கத்திற்கான ஆதரவு தற்போது உதய கம்மன்வில வரை விரிவடைந்துள்ளது. நாளை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வரை இவர்களின் ஆதரவுக் கரங்கள் நீளவும் செய்யும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் நியாயத்திற்காகக் கூட எதிராக செயற்படுவதற்கு முன் வராத கோழைகளாகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.
அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எங்களுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி தரப்படும் என்ற வாக்குறுதிக்காகவே 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கினோம் என்று புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி தெரிவித்திருந்தார்.
அமைச்சர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புதியவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படுமாயின் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கப் போவதில்லை. ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். அது கூட நிச்சயமில்லை.
இந்நிலையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டுமென்ற ஆசையை இவ்விரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கொண்டுள்ளார்கள். அதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு சமூகத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டுமென்ற கொள்கையை முஸ்லிம் பொது மக்களிடம் எதிர் பார்க்க முடியாது. அவர்கள் தங்கள் சார்பாக தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள். ஆனால், அவர்களோ மக்களை அடகு வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் முஸ்லிம் சமூகம் செய்த துர்ப்பாக்கியம்.
Virakesari 25.07.2021
0 comments:
Post a Comment