• Latest News

    August 03, 2021

    அரந்தலாவை தேரர்கள் படுகொலைகள் 31 பிக்குகள் கொல்லப்பட்ட வழக்கு - கருணா, பிள்ளையான் மீது குற்றச்சாட்டு

    தமிழீழ விடுதலைப் புலிகள் (L.T.T.E) அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அரந்தலாவை தேரர் கொலை தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு இன்று -03- அறிவித்துள்ளார்.


    இந்த தாக்குதலின் போது பலத்த காயமடைந்த நிலையில், உயிர் தப்பிய ரிதிமாலியத்த புத்தசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி, கலாநிதி அவந்தி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

    விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கையை அடுத்த வழக்கு தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக , பிரியந்த ஜயவர்தன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாமிற்கு அரச சிரேஷ்ட சட்டத்தரணி அறிவித்துள்ளார்.

    பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் உயிர் பிழைத்த ரிதிமாலியத்த புத்தசார தேரர் முன்வைத்த அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    தமிழீழ விடுதலைப் புலிகள் (L.T.T.E) அமைப்பினரால் 1987 ஜூலை 02 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி புத்தசார தேரர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த தாக்குதலில் 31 தேரர்களும் சிவிலியன்கள் மூவரும் கொல்லப்பட்டதாகவும் தாம் உள்ளிட்ட சில தேரர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்து, மனுதாரரான தேரர் தமக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு 02 கோடி ரூபாவை நட்டஈடாக செலுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் (L.T.T.E) அமைப்பின் முக்கிய தலைவர்கள், போராட்டத்தைக் கைவிட்டு தற்போது அரசியலில் பிரவேசித்துள்ளதாகவும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் அதில் அடங்குவதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    பொலிஸ்மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

    குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரந்தலாவை தேரர்கள் படுகொலைகள் 31 பிக்குகள் கொல்லப்பட்ட வழக்கு - கருணா, பிள்ளையான் மீது குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top