(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் தற்போதைய நிலைமையில்
மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு பெயரளவில் அல்லாமல்
கடுமையாக்கப்படவேண்டும். அத்துடன் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு அனுமதி
வழங்கக்கூடாது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர்
மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்தல் மற்றும் மக்களின் சுகாதார பாதுகாப்பை முகாமைத்துவம் செய்தல் என்ற இரண்டுக்கும் இடையில்தான் பிரச்சினை இருக்கின்றது. கொவிட்டினால் பொருளாதார வீழ்ச்சியடைந்திருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதனால் இதுதொடர்பாக தீர்மானங்களை எடுக்கக்கூடிய அதிகாரிகள் இந்த விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள்.என்றாலும் மக்களின் சுகாதார பாதுகாப்பு விடயங்களில் செயற்பட்டுவரும் பிரிவினர் என்றவகையில், நாட்டின் தற்போதைய நிலையை மிகவும் பயங்கரமான நிலைமையாகவே எங்களால் பார்க்க முடிகின்றது. நாளுக்குநாள் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம் 118 மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது பாரிய பிரச்சினையாகும்.
அதனால் நாட்டின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக ஊடகங்கள் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றபோதும், அவர்களிடமிருந்து வரும் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை. ஒன்றுகூடல்கள், விழாக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அதனால் மாகாணங்களுக்கிடையிலான கட்டுப்பாடு கட்டாயமாக இடம்பெறவேண்டும். அது பெயரளவில் இல்லாமல், நிலைமையை உணர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment