ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 21ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இணையவழியூடாக(Zoom) அவரது நினைவு தினத்தில் (16.9.2021) இடம்பெற்றபோது , அதற்குத் தலைமை வகித்து கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.
எமது
மறைந்த தலைவருக்குச் செய்கின்ற மிகப் பெரிய நன்றிக்கடனாக கட்சியுடைய
தற்கால அரசியல் முழுமையாக பரிமாண மாற்றமடைய வேண்டும் என்பதில் எனக்கு எந்த
மாற்றுக் கருத்தும் கிடையாது. இதை என்னுடைய சக பாராளுமன்ற உறுப்பினர்கள்
மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு உள்வாங்க வேண்டும் என வினயமாகக் கேட்டுக்
கொள்ள விரும்புகின்றேன்.
இன்று இருக்கின்ற நிலைமையில் எம்மைச் சூழ நடந்துக் கொண்டிருக்கின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது கடந்த நாட்களில் வெலிக்கடை மற்றும் அநூராதபுரச் சிறைசாலைகளுக்குச் சென்று சிறைச்சாலைக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் செய்திருக்கின்ற அட்டகாசத்தைப் பார்த்தால் மிகவும் பாரதூரமானது. அவ்வாறு இராஜாங்க அமைச்சரொருவர் தமிழ் கைதிகளை எவ்வாறு தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார் என்பதைப் பார்த்தபோது , அழுத்தம் கொடுத்து அவரை அந்தப் பதவியிலிருந்து விலக வைத்திருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள அவமானத்திலிருந்து அரசாங்கம் விடுபட முடியாது. இது சாமான்யமானதொரு விடயமல்ல.
இன்று தமிழ் சமூகம் இதற்காக ஆத்திரமடைந்திருக்கின்றது. முஸ்லிம் சமூகமும் இவ்வாறான விடயங்களில் ஆத்திரமடையவேசெய்யும். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த ஆட்சியாளர்களோடு ஒன்றித்து பயணிப்பது மிகவும் ஆபத்தானது.
தலைவர் என்கின்ற பேராத்மா எங்களிடத்தில் விட்டுச் சென்றிருக்கின்றதில் ஏதாவதொரு சிறு பாகமாவது எங்களிடத்தில் எஞ்சியிருக்குமாயின், இவ்வாறான ஆட்சியை இனிமேலும் நாங்கள் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பது எந்தக் காரணம் கொண்டும் இந்த சமூகம் அங்கீகரிக்கின்ற விடயமாக இல்லை என்பதை எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உளம்கொள்ள வேண்டும்.
அடிக்கடி மனச்சாட்சியை பற்றிக் கதைப்பவர்கள், தங்களுடைய பிரதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இருக்கின்ற சந்தர்ப்பங்களை தாங்கள் இழந்துவிடுவோம் அல்லது வலிந்து வம்புகளுக்குள் மாட்டுகின்ற பலருக்கு இது வாய்ப்பாக போய்விடும் என்று வெறும் நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லிக்கொண்டு , அபிவிருத்தி மாயையில் அள்ளுண்டு போகின்ற ஓர் அரசியல் சமகாலத்திற்கு ஒவ்வாத விடயம் என்பதை எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றாகப் புரிந்தக்கொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் குறித்து இன்று கத்தோலிக்க சமூகம் யதார்த்தத்தைப் புரிந்திருக்கின்றது. பேராயர் உட்பட அந்தச் சமூகம் மிகத் தெளிவாக அதன் பின்னணியில் இடம்பெற்றுள்ள சூழ்ச்சி, சூட்சுமம் என்பன பற்றி வெளிப்படையாகப் பேசத் தலைப்பட்டிருக்கின்றது.
போதாக் குறைக்கு ஆட்சியாளர்கள் மறைக்க நினைப்பதற்கு மேலும் வலுச் சேர்க்கின்ற வகையில் , நேற்றைக்கு முன்னைய தினம் காவியுடை தரித்த, வழமையாகவே வலிந்துவந்து வம்புக்கிழுக்கின்ற இன்னுமொரு "பிரபலம்" மீண்டும் பேசத் தொடங்கியிருக்கின்றார். மிக விரைவில் இன்னுமொரு தாக்குதல் நடைபெறப் போகின்றது என்றும், முஸ்லிம் தீவிரவாதிகள் வந்து அதைச் செய்ய போகின்றார்கள் என்றும் அந்தப் "பிரபலம்"ஆரூடம் கூறியிருக்கின்றார்
இந்த ஆரூடத்திற்குப் பின்னால் இருக்கின்ற மிகப் பெரிய திட்டமிடலை மிகச் சரியாக அடையாளம் கண்டு , பேராசிரியர் ராஜன் ஹூல் "EASTER SUNDAY ATTACK AND DEEP STATE " என ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதி இருக்கின்றார். அது ஒரு முக்கியமான நூல் அதனை அனைவரும் வாசிக்க வேண்டும். அதில் தெளிவாக பல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன்படி நாட்டின் உளவுத்துறை எவ்வாறு செயற்படுகின்றது, சில விடயங்கள் திரைமறைவில் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன என்பதை பற்றிய சந்தேகங்கள் பலமாக மேலெழுந்திருக்கின்ற சூழ்நிலையில் தான் புதிதாகவும் இவ்வாறான சில ஆரூடங்கள் வெளிவருகின்றன.
எனவே, மிக விரைவில் மீண்டுமொரு கலவரத்திற்கு வழிகோலுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இன்றைய பொருளாதார சிக்கல்களிலும் இந்த மோசமான சுகாதார சூழலிலும் வேறு வழி தெரியாமல் மீண்டுமொரு முறை முஸ்லிம்களை வன்முறையாளர்களாக எடுத்துக் காட்டி நாடகமொன்றை அரங்கேற்றுவதற்கு தயாராகி வருகின்றதை போன்ற அச்சம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கின்றது.
விரைவில்என்னுடைய சக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளேன். ஆளுங்கட்சிக்கு இன்று சாமரம் வீசிக் கொண்டிருக்கின்ற எம்மவர் உட்பட ஏனையவர்களையும் சேர்த்து எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பேசி, அண்மைய காலமாக நாங்கள் எதிர்நோக்கிவரும் எங்களுடைய பாரம்பரிய சட்டங்களான விவாக மற்றும் விவாகரத்து சட்டம், தனியார் சட்டங்கள் போன்றவற்றில் இஸ்லாத்தின் அடிப்படை சட்ட வரையறைகளைப் பேணி ,அவற்றின் நடைமுறைகளில் சேர்க்க வேண்டிய சீர்த்திருத்தங்கள் பற்றி எமது சமயத் தலைமைகளுடனும்,துறைசார் சட்ட. வல்லுனர்களுடனும்,சமூக செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடி நாங்கள் உடன்பாடு கண்ட விடயங்கள் உள்ளன.அவற்றைச் செயற்படுத்த முன்வர வேண்டும்.
இச்சட்டங்களில் தங்களுக்கு வேண்டிய விதத்தில் மாற்றங்களைச் செய்வதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு மிக மோசமான அழுத்தத்தை தற்போதைய நீதியமைச்சருக்கு மேல் செலுத்திக் கொண்டிருக்கின்ற தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்பர்களை நாங்கள் வென்றாக வேண்டும். அதற்கு நாங்கள் ஒன்றுபட வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று இல்லாமல் எல்லோரையும் ஒன்றுபடுத்தி ஓர் அணியாக நின்று, அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.
0 comments:
Post a Comment