அரச உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகள் தேசிய சம்பள கொள்கைக்கு அமைய தீர்க்கப்பட வேண்டுமே தவிர அரசியல் ரீதியிலான தீர்மானங்களினால் அல்ல என்பதை வலியுறுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்களன்று (21) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து ஞாயிறன்று இடம்பெறவுள்ள நிறைவேற்று குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் கருத்து வெளியிடுகையில்,
நாட்டில் தற்போது அரச உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடு பிரதானமானதாகக் காணப்படுகிறது. இதனால் கடந்த வாரம் பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்கள் ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது அரச உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடானது தேசிய சம்பள கொள்கையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டுமேயன்றி, அமைச்சரவையில் எடுக்கப்படும் அரசியல் ரீதியிலான தீர்மானங்களின் அடிப்படையில் அல்ல என்பது அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.
2003 இல் இதேபோன்ற பிரச்சினை ஏற்பட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் தேசிய சம்பள கொள்கையை பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் அவரும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை வழங்கினார். இதேபோன்று 2006 இல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமூகமான தீர்வினை வழங்கினார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் தேசிய சம்பள கொள்கையை மீறும் வகையில், அரசியல் ரீதியில் சம்பள அதிகரிப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அரச உத்தியோகத்தர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படக் கூடிய நிலைமையும் காணப்படும்.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாட்டுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும்
வகையில் எதிர்வரும் திங்களன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அரச
மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை
எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது ஞாயிறன்று இடம்பெறவுள்ள நிறைவேற்று குழு
கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.
0 comments:
Post a Comment