செங்கடல் பகுதியில் கடலோர காவல் படை அதிகாரியாக பணியாற்றச் சென்று உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (26) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.ஜி.புஸ்பகுமார என்பவரின் சடலமே இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளது.ஓமன் மற்றும் எகிப்துக்கு இடையேயான கடல் பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையில் ஈடுபடுவதற்காக குறித்த நபர் அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், கடல் பாதுகாப்பு சேவைக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்றதன் பின்னர், மதிய உணவை அருந்திவிட்டு நித்திரையில் இருந்த போதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர், இலங்கை கடற்படையில் கடமையாற்றி விட்டு சட்ட ரீதியாக விலகி, கடலோர காவல் படை அதிகாரியாக தனியார் நிறுவனம் ஒன்றில் இணைந்து தற்போது நான்கரை வருட சேவையை நிறைவு செய்தவர் ஆவார்.
கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இந்த நபரின் சடலம் ஓமன் துறைமுகத்தில் சுமார் 15 நாட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.20 மணிக்கு கே.ஆர். கத்தார் ஏர்வேஸ் 654 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சடலத்தை பெற்றுக்கொள்ள வந்த உறவினர்கள், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment