மத நல்லிணக்கத்தை சீர்குழைத்து இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தி, நாட்டை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் சில குழுக்கள் திட்டமிட்டு செயல்படுவதாக ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து, மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மத முரண்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் பரந்தளவில் பயன்படுத்தப்படுவதால் மத ரீதியான பிளவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
அது மாத்திரமின்றி வெவ்வேறு மதங்களைக் சார்ந்தவர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டும் வகையில் சில குழுக்கள் மிகவும் சூட்சுமமாக செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புலனாய்வு துறை இது தொடர்பான தகவல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பில் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் முழுமையாக அவதானம் செலுத்தியுள்ளோம்.
அதற்கமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு துறையினருக்கும் , உரிய அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மத மற்றும் இன ரீதியான முரண்பாடுகளை நீண்ட காலம் எதிர்கொண்டு குண்டுகள் வெடிக்கும் சத்தங்களுக்கு மத்தியில் நாம் வாழ்ந்திருக்கின்றோம்.
இவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவற்றுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாடத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எமக்கு கற்றுக் கொடுத்துள்ளன.
எனவே சில குழுக்களால் மக்கள் மத்தியில் இன, மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கு அரசாங்கம் இனியோருபோதும் இடமளிக்காது என்றார்.
கடந்த வாரங்களில் கத்தோலிக்க மத போதகர் எனக் குறிப்பிடப்படும் ஜெரோம் பெர்னாண்டோ என்ற நபர் ஏனைய மதங்கள் தொடர்பில் முறையற்ற கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக்
குறிப்பிட்டு சமூக ஊடக செயற்பாட்டாளர் நதாஷா எதிரிசூரிய என்ற பெண்ணும்
கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment