• Latest News

    June 01, 2023

    ஆயுர்வேத வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு - பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம்

    ஆயுர்வேத வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பில் அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

    ஆயுர்வேத வைத்தியர்களை நியமனம் செய்யும் போது ஆயுர்வேத, சித்த மற்றும் யூனானி வைத்தியர்களை உள்ளடக்கி நியமனம் வழங்கப்படுவது வழக்கமானதொன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை  மீறப்பட்டுள்ளது.

    இம்முறை 100 இற்கும் மேற்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுக்கு மட்டும் நியமனம் வழங்குவது, யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

    மேற்படி நியமனங்கள் தொடர்பில், பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் காங்கிரஸ்  தலைவர் ரிஷாட்  பதியுதீனை தொடர்புகொண்டு கவலை  தெரிவித்ததையடுத்து, அவர் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனங்களின் போது, ஒரே முறையில் 7 ஆயுர்வேத வைத்தியர்களும் இரு யூனானி வைத்தியர்களும் ஒரு சித்த வைத்தியரும் உள்வாங்கப்பட்டு, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன.

    ஆனால், இம்முறை வழங்கப்பட இருக்கின்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்களில், யூனானி வைத்தியர்கள் உள்ளீர்க்கப்படாமையானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதுடன், இது யூனானி வைத்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தான் கருதுவதாகவும்  குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுளார்.

    மேற்படி ஆயுர்வேத வைத்தியர்களின் நியமனத்தில், யூனானி வைத்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனஞ் செலுத்துமாறும் பாதிக்கப்பட்டுள்ள யூனானி வைத்தியர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், மேற்படி நியமனத்தில் யூனானி வைத்தியர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தேவையான பணிப்புரையினை உரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதேவேளை, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்  பதியுதீன், ஜனாதிபதியின் செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, யூனானி வைத்தியர்களுக்கு  இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதி தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆயுர்வேத வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிப்பு - பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top