• Latest News

    August 07, 2024

    ஜனாதிபதியின் நடவடிக்கை ரணில் எதிர்காலத்தில் ஆட்சியாளர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் - ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எச்சரிக்கை

    ஒரு நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், அந்நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ஜனாதிபதி கூறுவது எதிர்வருங்காலத்தில் ஆட்சிபீடம் ஏறவுள்ள ஆட்சியாளர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் என எச்சரித்துள்ளார்.  


    'இலங்கையின் தேர்தல் சூழ்நிலையில் ஊடகம் மற்றும் சட்டத்தின் வகிபாகம்' எனும் தலைப்பில் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துரை நிகழ்வு இன்று  செவ்வாய்கிழமை (06) கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு விசேட உரையாற்றுகையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

    அங்கு அவர் மேலும் கூறியதாவது:

    அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் 'எவ்வாறு ஜனநாயகம் மரிக்கிறது?' என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலில் உள்ள விடயங்கள் அமெரிக்காவுக்கு மாத்திரமன்றி, நம்மனைவருக்கும் பொருந்தக்கூடியவையாகும். பொதுவில் இராணுவ சதி மற்றும் புரட்சி போன்றவற்றின் விளைவாக ஜனநாயகம் மரிப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், நவீன உலகத்தில் தேர்தல் ஊடாக ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தலைவராலேயே ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யவும் முடியும். 

    இவ்வாறானதொரு பின்னணியிலேயே இம்முறை நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஏனெனில் 'அரகலய' போராட்டத்தின் பின்னர் நாட்டு மக்கள் தேர்தலொன்றில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் முதன்முறையாக வழங்கப்படுவதனால், இது மிகமுக்கியமான தேர்தலாகும். 

    ஒரு நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், அந்நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். குறிப்பாக பங்களாதேஷில் பிரதமராகப் பதவி வகித்த ஷெய்க் ஹஸினா ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. எனவே அவ்வாறான பின்னணியில் பொருளாதார வளர்ச்சி வேகம் எத்தகைய மட்டத்தில் காணப்பட்டாலும், மக்கள் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக நிச்சயமாகக் கிளர்ந்தெழுவர். 

    அதேபோன்று எமது நாட்டில் தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது. இருப்பினும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் கூறுகின்றனர். 

    இவ்வாறு நாட்டின் நீதித்துறையைப் புறந்தள்ளுவது மிகப் பாரதூரமான விடயமாகும். இதனை நாம் ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்தன என நபர்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கவில்லை. மாறாக இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிப்பதானது, எதிர்வருங் காலங்களில் ஆட்சிபீடமேறும் ஜனாதிபதி நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளுவதாகக் கூறுவதற்கே வழிகோலும்.  

    ஆகவே நீதிமன்றத்தின் சுயாதீனத்துவமும் மேன்மையும் பாதுகாக்கப்படும் அதேவேளை, நாட்டின் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் உறுதிசெய்யப்பட வேண்டும். அத்தோடு இத்தகைய நெருக்கடி நிலையில் ஊடகவியலாளர்கள் எவ்வித பக்கச்சார்புமின்றி சுயாதீனமாகவும், நேர்மையாகவும் தமது அறிக்கையிடல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியின் நடவடிக்கை ரணில் எதிர்காலத்தில் ஆட்சியாளர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக அமையும் - ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top