• Latest News

    August 08, 2024

    ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொது வேட்பாளர் பெயர் அறிவிப்பு

     
    தமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொது வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

    தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை  அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மாத்திரமே நான் இருப்பேன் இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்காக அல்ல. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கான உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக இந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டம்பர் 22 ஆம் திகதி மட்டுமே இருக்கும் அதற்கு பிற்பாடான பணிகளை தமிழ் பொதுக்கட்டமைபே எடுக்கும்.

    தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம். இதில் பலர் இருந்திருந்தாலும் தந்தை செல்வாவின் போராட்டம் அகிம்சை ரீதியாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல ஏமாற்றங்களை கண்டிருந்தது பின்னர் ஆயுதப்போராட்டம் அது மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதும் ஏமாற்றங்களே எமக்கு மிஞ்சியது.

    சர்வதேச ரீதியாக நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றபோது சர்வதேசம் ஒரு குரலில் வரவேண்டும் என்பதைத்தான் நமக்கு கூறியது இவ்வாறாக அனைத்து விடையங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு குரலில் ஒருமித்த கருத்துக்களை முன்கொண்டு செல்வதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான ஆதரவை வாக்குகளாக செலுத்துகின்றபோது தமிழ் மக்களின்  இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாது உள்ளது அவை  தீர்க்கப்படவேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்த பொதுவேட்பாளர்  முயற்சியாகும்.

    பொதுக் கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாக சட்டத்தரணி தவராசாவும் எனது பெயரையும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரும் நண்பார்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானே அவரோ எவ்விதமான சர்ச்சைகளும் இல்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன்.  இவ்வாறான சூழலில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையவர்கள் போட்டடியிடுகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடையம் மிக முக்கியமாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றவர்கள் விடுதலைப்புலிகளை நான் தான் பிரித்தேன், கட்சிகளை  பிரித்தேன்,என்னை மாற்றமாட்டேன்  என்று போட்டிபோட்டு செல்லும் நிலையே காணப்படுகின்றது.

    இவ்வாறான நிலையில் மக்களை பிரித்தாளுகின்றவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கு கிழக்கை பிரித்தவர்களுக்க வாக்குகளை வழங்கப்போகின்றோமா? என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்த்தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல ஜனாதிபதிகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்னும் பேரம் பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்கவேண்டும். இவற்றுக்காகத்தான் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்கவேண்டும் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொது வேட்பாளர் பெயர் அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top