வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் பவித்திரா வன்னியாராச்சி எந்தவித தீர்மானத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் வியாழக்கிழமை (08) அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
என்னுடன் அரசியலில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பலருடன் நீண்ட ஆலோசனைகளை நடத்திய பின்னர் நான் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கின்றேன். 2022 ஆம் ஆண்டு எமது நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்திரமற்ற நிலையில் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டிருந்த மையை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலானோரின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அன்று எடுக்கப்பட்ட அந்த தீர்மானத்தால் நாம் நம்பியது போல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றார். எனவே ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆதரவாளர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் போது இரத்தினபுரி மாவட்டம் மற்றும் ஆலோசணைகளை பெறுவது எனது கொள்கையாகும் . அந்த வகையில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினராக இருந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக அறிவிக்கின்றேன்.

0 comments:
Post a Comment