ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்களால் தோல்வி அடைந்த இலங்கை, முதல் சுற்றுடன் வெளியேறும் நிலையை எதிர்கொண்டுள்ளது.
நடப்பு உலக சம்பியன் இலகுவான வெற்றியுடன் ஒன்பதாவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாத்தை நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தானுடனான முதலாவது போட்டியில் போன்றே அவுஸ்திரேலியாவுடனான போட்டியிலும் இலங்கையின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையவில்லை.
இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை 100 ஓட்டங்களை எட்டத்தவறியது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஆரம்ப வீராங்கனைகளான விஷ்மி குணரட்ன (0), அணித் தலைவி சமரி அத்தபத்து (3) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததுடன் கவிஷா டில்ஹாரி (5) 7ஆவது ஓவரில் வெளியேறியமை இலங்கைக்கு பேரிடியைக் கொடுத்தது.
ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் நிலக்ஷிகா சில்வாவும் 4ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆட்டம் இழந்ததும் மேலும் 3 வீக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.
துடுப்பாட்டத்தில் நிலக்ஷிகா சில்வா (29), ஹர்ஷிதா சமரவிக்ரம (23), அனுஷிக்கா சஞ்சீவனி (16) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மெகான் சூட் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொஃபி மொலினொக்ஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
94 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவி எலிசா ஹீலி (4), ஜோர்ஜியா வெயாஹாம் (3), எலிஸ் பெரி (17) ஆகிய மூவரும் ஆட்டம் இழக்க 6ஆவது ஓவரில் அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், பெத் மூனி, ஏஷ்லி கார்ட்னர் (12) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கினர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத் மூனி 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரை விட எலிஸ் பெரி 17 ஓட்டங்களையும் ஏஷ்லி கார்ட்னர் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சுகந்திகா குமாரி 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் உதேஷிகா ப்ரபோதனி 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இனோக்கா ரணவீர 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: மெகான் ஷூட்


0 comments:
Post a Comment