• Latest News

    March 18, 2025

    இஸ்லாமிய மத சட்டங்களில் மாற்றம்! தன்னிச்சையாக செயற்பட போவதில்லை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க


    இஸ்லாமிய மத சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் அது குறித்து சகல தரப்பினருடனும் விரிவாக கலந்துரையாடி அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என ஜனாதிபதி உலமா சபைக்கு தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

    இவ்விடயத்தில் ஒருபோதும் தன்னிச்சையாக செயற்பட போவதில்லை. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அமைச்சர் சரோஜா ஜெனிவாவில் குறிப்பிடாத விடயங்களை குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டி மிக மோசமான விமர்சனங்கள் பரப்பப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபையில் வலியுறுத்தினார்.

    பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

    அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

    நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். என்பதை வலியுறுத்தி பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரையில் மக்கள் ஜனநாயக முறையில் ஆணையை வழங்கி உறுதிப்படுத்தியுள்ளனர். 

    ஆகவே இந்த மக்கள் ஆணையை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.

    சமூக வலைத்தளங்களில் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தொடர்பில் முறையற்ற வகையில் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கப்படுகிறது. இதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் மதத் தலைவர்களிடம் கேட்கின்றோம். நாங்கள் அரசியலுக்காக எவ்வித இனவாதம், மதவாதத்தை கையில் எடுப்பவர்கள் அல்ல. இப்போது பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மீது அதிகளவில் தாக்குதல்களை நடத்திய சகல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளனர்.

    நாங்கள் ஒருபோதும் வாக்குகளை எதிர்பார்த்து மதவாதத்தை ஈடுபட்டதில்லை. எமது கட்சியில் உள்ள மிகவும் பெறுமதியான ஒருவரே சரோஜா போல்ராஜ், கறுப்பு ஜூலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டார். அவர் சகல இன மக்களுடனும் இணைந்து பணியாற்றி இன்று சிறந்த தலைவியாகியுள்ளார்.

    ஜனாதிபதி பதவிக்கு வர முன்னர் ஜமய்யதுல் உலமாவை சந்தித்து முஸ்லிம்கள் தொடர்பான தனிப்பட்ட சட்டங்கள் உள்ளன. அதன்படி இஸ்லாமிய சட்டங்களை மாற்றுவதென்றால் அது தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடியே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை உறுதியளித்துள்ளார். ஆனால் அதனை தெரிந்து கொண்டே இப்போது எமது அமைச்சர் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றீகள்.

    தேசிய மக்கள் சக்தியை இந்த நாட்டின் முஸ்லிம் மக்களும் பெரிய கட்சியாக்கியது ஏன்? முஸ்லிம் அரசியல் என்று சொல்பவர்கள் பலரின் அரசியல் ஹராம், அந்த அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை ஹராம், அவர்களின் வியாபாரங்கள் ஹராம், அவர்கள் மதத்தின் பெயரால் செய்வது ஹராமே. இப்போது உள்ளூராட்சி தேர்தலின் போது சரோஜா போல்ராஜ் தொடர்பில் கூறுகின்றனர்.

    முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பில் அமைச்சர் சரோஜா ஜெனிவாவில் மாறுப்பட்ட எந்த கருத்தையும் கூறவில்லை. மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் மாற்றத்தை செய்ய வேண்டும். இஸ்லாமிய கலாச்சாரங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கட்சியென்ற வகையில் நாங்கள் இனவாதத்தை செய்வதில்லை. கலாச்சாரங்களை மதிக்கின்றோம். நீங்கள் விமர்சனங்கள் முன்வைப்பதை நிறுத்துங்கள். நாங்கள் எந்த சட்டத்தை திருத்தவதாக இருந்தாலும் முறையாக கலந்துரையாடியே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்விடயத்தில் தன்னிச்சையாக செயற்படும் எண்ணம் அரசாங்கத்துக்கு கிடையாது.

    முஸ்லிம் மக்கள் கடந்த தேர்தல்களில் பலரை நிராகரித்தார்கள் தற்போது, எஞ்சியவர்களையும் நிராகரித்து கற்ற இஸ்லாமிய இளைஞர்கள், யுவதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    Thanks: Virakeasari

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்லாமிய மத சட்டங்களில் மாற்றம்! தன்னிச்சையாக செயற்பட போவதில்லை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top