அரசாங்கத்தின் கொள்கைகள் தற்போது மாறி இருக்கிறது. அதனால் எமது மாணவர்கள் சர்வதேச பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்காக சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு நிலைப்பாடுகள் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருந்தன. ஆனால் தற்போது அது மாறி இருக்கும் என நினைக்கிறேன். மாற வேண்டும். அதனால் சர்வதேச பல்கலைக்கழகங்கள் உத்தியோகபூர்வமாக நாட்டுக்குள் வருவதற்கு இடமளிக்க வேண்டும். அன்று அம்பந்தோட்டை எண்ணெய் சுற்றிகரிப்பு தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்கும் போது, சீனாவின் கொலனி ஒன்றை அமைக்கப்போவதாக தெரிவித்திருந்தீர்கள். அதேபோன்று திருகோணமலை எண்ணை குதங்கள் தொடர்பில் கதைக்கும்போது இந்தியாவின் கொலனி அமைக்கப்போவதாக பொதுச் செயலாளர் டில்வின் சில்வா போராட்டக்களத்து வந்து தெரிவித்திருந்தார்.
தற்போது எல்லாம் மாறி இருக்கிறது. அதனால் எமது மாணவர்கள் சர்வதேச பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்காக சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எமது ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம்.
அதேவேளை, மதுபானசாலை உரிமை பத்திரம் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலை சபைக்கு சமர்ப்பிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. ரணில் விக்ரமசிங்க மதுபானசாலை உரிமைப்பதிரம் வழங்கி அரசியல்வாதிகளை தனது பக்கம் இழுத்துக்கொண்டதாக தெரிவித்தார். அப்படியானால் அந்த பெயர் பட்டியல் எங்கே என கேட்கிறோம்.
இந்த அரசாங்கத்துக்கு பட்டியல் அரசாங்கம் என்றே தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மதுபானசாலை உரிமை பத்திரம் பெற்றுக்கொண்டவர்கள் என பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேநேரம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எரிபாெருள் நிரப்பு நிலையங்கள் வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதேபோன்று ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்கள்.
ஆனால் இந்த எந்த பெயர் பட்டியலிலும் எனது பெயர் இல்லை. 2001 இல் இருந்து இருக்கிறேன். மதுபானசாலை பத்திரம் எடுக்கவும் இல்லை. வேறு அனுமதி பத்திரங்கள் எடுக்கவும் இல்லை. அரயல் தேவைக்கோ எனது சொந்த தேவைக்கோ ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றதும் இல்லை. அதேபோன்று அரச சொத்துக்களை துஷ்பியோகம் செய்ததும் இல்லை. எனத கரங்கள் தூய்மையானதாகும்.
மேலும் அரசாங்கம் தேர்தல் மேடைகளில் தெரிவித்த பல விடயங்களை மாற்றி இருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அவர்களின் வாகன சிறப்புரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். மேடைகளில் என்ன தெரிவித்திருந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாகனங்கள் வீடுகளை வழங்குங்கள். அப்போதுதான் அவர்களால் சேவை செய்யலாம். வாகன அனுமதி பத்திரம் 2016இல் நிறுத்தப்பட்டது. தற்போது அதனை வழங்க முடியும். கொழும்பில் இருப்பவர்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தூரப்பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு இந்த வரப்பிரசாதங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
பட்டலந்த விவாதம் இடம்பெற இருக்கிறது. என்றாலும் இந்த காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற இருக்கின்றன. அதனால் இந்த விவாதத்தை பிற்படுத்துமாறு தெரிவிக்கும் போது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கப்போவதாக தெரிவிக்கின்றீர்கள். நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஒரு போதும் பாதுகாக்க முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவை தூக்கில் போட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. நிலைமையை புரிந்து கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment