சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் இடம்பெற்று வருவதால், இது எமது நாட்டில் பொதுப் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதனால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசிவருவதன் மூலம் இதன் பின்னணியில் அரசியல் சதித்திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில்இடம்பெறக்கூடிய சிறுபிள்ளை திருமணங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவரும் அவர் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு முன்னரும் இந்த சபைக்கு வெளியிலும் கதைத்திருந்தார்.
அதேபோன்று அண்மையில் அர்சுனா் எம்,பியும் இந்த சபையில் பேசி இருந்தார். அதேநேரம் இந்த நாட்டில் ஒரு சட்டம்தான் இருக்க வேண்டும் என்றும் அர்சுனா எம்பி தெரிவித்தார்.
ஆனால், சிறுபிள்ளை திருமணங்கள் தொடர்பில் புள்ளிவிபர திணைக்களம் இறுதியாக 2012ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் பிரகாரம், 17 வயதுக்கு குறைந்த வயதில் திருமணம் முடித்தவர்களின் இன அடிப்படையில் பார்ப்போமானால், சிங்கள இனத்தவர்களில் 21510 சிறுவயது திருமணம் இடம்பெற்றுள்ளது. அது நூற்றுக்கு 69 வீதமாகும்.
இலங்கை தமிழ் இனத்தவர்களில் 3925 சிறுவயது திருமணம் இடம்பெற்றுள்ளது. அது நூற்றுக்கு 13 வீதமாகும். மலையக மக்களில் 1312 சிறுவயது திருமணம் இடம்பெற்றுள்ளது. அது நூற்றுக்கு 8 வீதமாகும்.
அதேநேரம் முஸ்லிம் இனத்தவர்களில் 4321சிறுவயது திருமணம். இடம்பெற்றுள்ளது. அது நூற்றுக்கு 14 வீதமாகும்.
இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் சிறுவயது திருமணம் அனைத்து இன சமூகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அப்படியானால் இது ஒரு பொதுப் பிரச்சினையாகும். இதனை ஒரு பொதுப் பிரச்சினையாக பார்க்காமல் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி பேசுவதாக இருந்தால் அதன் பின்னணியில் வேறு சதித்திட்டங்கள் அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது.
அதேநேரம் இந் நாட்டில் ஒரு சட்டம்தான் இருக்க வேண்டும் என அர்சுனா எம்.பி உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். இந்த நாட்டில் பல இன மக்கள் வாழுகின்றனர். அந்த இனங்களுக்கு தனியார் சட்டங்கள் இருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டம் இருக்கிறது. கண்டியில் இருக்கும் மக்களுக்கு மலைநாட்டு சட்டம் இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு தேசவழமை சட்டம் இருக்கிறது. இந்த சட்டங்கள் நாட்டில் இருக்க வேண்டும். அந்த மதங்களுக்கு என சில தனியான அடையாளங்கள் இருக்கின்றன. அதனால் இவ்வாறான சட்டங்கள் இருந்தால்தான் எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அந்த சட்டங்களை யாரும் நிராகரித்ததில்லை.
ஆனால்அர்சுனா எம்.பி. தொடர்ந்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தை எதிர்த்து பேசிவருகிறார். அப்படியானால் தேசவழமை சட்டம் அவர்களுக்கு தேவையில்லையா? அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றா தெரிவிக்கிறீர்கள்? சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருந்துகொண்டு இன்னுமொரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசுவது கவலையளிக்கிறது.
இந்த நாட்டில் இதற்கு முன்னரும் தற்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஏனைய சிறுபாள்மை மக்களுக்கு எதிராக கதைத்ததில்லை. இன்னொரு இனத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததும் இல்லை.
அதனால்அர்சுனா எம்.பி. சிறுபான்மை மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு வேறு ஒரு சிறுபான்மை மக்களின் உரிமைக்கு எதிராக பேசுவது, அவரை இந்த பாராளுமன்றத்துக்கு வாக்களித்து அனுப்பிய மக்களுக்கு செய்யும் அவமானமாகும். தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்த நாட்டில் இருந்து வந்த எந்த அரசாங்கமும் அந்த பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகளை வழங்கியதில்லை. அதனாலேயே நாட்டில் 30 வருட யுத்தம் ஒன்று இடம்பெற்றது. எனவே நாட்டில் இருக்கும் அனைத்து மதங்களின் கலாசாரங்களை மதித்து செயற்பட வேண்டும் இருக்கும் சட்டங்களில் பிரச்சினை இருந்தால், அது தொடர்பில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

0 comments:
Post a Comment