• Latest News

    December 28, 2025

    கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

     


    கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி, இன்று ஞாயிற்றுக்கிழமை (28) தோஹாவிலிருந்து விமான நிலைய முகாமையாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முழுமையான சோதனைகளில் விமானத்தில் எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

    கத்தார், தோஹாவிலிருந்து வந்த கத்தார் ஏர்வேஸ் Q.R.-664 விமானம் இன்று காலை 08.27 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. போயிங் 787 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த குறித்த விமானம் 245 பயணிகளையும் 12 பணியாளர்களையும் ஏற்றி வந்தது. விமானம் தரையிறங்குவதற்கு முன்பே, அதில் வெடிகுண்டுகள் இருப்பதாகக் கூறி விமான நிலைய முகாமையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

    இதனையடுத்து, விமானம் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தரையிறக்கப்பட்டு, நைகந்த பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அனைத்து பயணிகளும் மற்றும் பணியாளர்களும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதுடன், விமான நிலையத்தின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் வெடிபொருட்களை கண்டறிய விசேட பயிற்சி பெற்ற நாய்களின் உதவியுடன் முழு விமானமும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனைகளில் எவ்வித சந்தேகப் பொருட்களும் கண்டு பிடிக்கப்படாததைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் விமான நிலையத்தின் பொது விமானப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இவ்விமானம் இன்று காலை 10.15 மணிக்கு தோஹாவிற்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு சோதனைகளின் காரணமாக தாமதமடைந்து இன்று மதியம் 01.07 மணிக்கு தோஹாவை நோக்கி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கத்தார் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top