• Latest News

    January 20, 2026

    நிந்தவூர் கடலரிப்பு வேலைக்கு முட்டுக்கட்டை!

    ஏ.எம்.பலீல் -

    நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள பாரிய கருங்கற்களை வேறு  பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு எடுத்துச் செல்லப்படுவதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

    நிந்தவூர் கடற்கரை மையவாடி பிரதேசத்தில் இருந்த கருங்கற்களை ஏற்றிய போது பொது மக்களும், மீனவர்களும் ஏற்றியவர்களுடன் வாய்தகராற்றில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதன் பொது அங்கு ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் வந்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


    ஒலுவில் பிரதேசத்தில் முறையாகவும், திட்டமிடப்படாத வகையிலும் துறைமுகம் அமைக்கப்பட்டதன் விளைவாகவே நிந்தவூரில் கடலரிப்பு ஏற்பட்டது. ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்டமையால் ஒலுவில் பிரதேசத்தில் பல ஏக்கர் தென்னந் தோட்டங்களை கடல் முற்றாக உள்வாங்கிக் கொண்டது. இதனை தடுப்பதற்காக ஒலுவில் கடலில் தடுப்புக்கள் அமைக்கப்பட்டன. இதனால், அங்கு கடலரிப்பு மட்டுப்படுத்தப்பட்டது. 


     அதனை தொடர்ந்து நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்டது. பலத்த பாதிப்புக்களை ஏற்படுத்தியது. மீனவர்களின் வாடிகள், தங்குமிடங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பால் நிந்தவூர் பிரதேசத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை கடல் காவு கொண்டுள்ளது. தென்னந் தோட்டங்கள், வயற்காணிகள், குடியிருப்பு காணிகள் இவற்றில் அடங்கும்.

     ஒலுவில் துறைமுகம் இயங்கிய காலத்தில் அதிகம் நன்மைகளை அடைந்தவர்கள் சாய்ந்தமருது, கல்முனை ஆழ்கடல் மீனவர்களாகும். அத்தோடு நிலப்பரப்பிலும், மீன்பிடியிலும் பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேசங்கள் அதிக நன்மைகளை பெற்றுக்கொண்டன. 

     நிந்தவூர் மீனவர்கள் மற்றும் பொது மக்கள் மூன்று தடவைகள் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவும் நிந்தவூரைப் பிறப்பிடமாகவும், நிந்தவூர் மக்களின் அதிகபட்ச வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பைசால் காசிமுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டன.

     
    இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் காரணமாகவும், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புக்களினாலும் நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்கு பாரிய கருங்கற்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றைக் கொண்டு கடலரிப்பை தடுப்பதற்குரிய தடுப்புக்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வேலைத் திட்டம் இன்னும் முடியவடையவில்லை. நிந்தவூரில் பல இடங்களில் தடுப்புக்கள் அமைக்கப்பட்டமையால் கடலரிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
     
     
    ஆயினும் இன்னும் பல இடங்களில் தடுப்புக்கள் அமைக்கப்படவுள்ளன. அவற்றிக்கான நிதியும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக தொடர்ச்சியாக கருங்கற்கள் போடப்பட்டு தடுப்புக்கள் அமைக்கப்படும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
     
     
    அண்மையில் திகவா புயலின் காரணமாக ஏற்பட்ட கடற்கொந்தளிப்பால் நிந்தவூரில் தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும் பாரிய அளவில் கடலரிப்பு ஏற்பட்டது. 
     
     
    இவ்வாறு நிந்தவூரின் நிலை இருக்கின்ற பின்னணியில் நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள பாரிய கருங்கற்களை வேறு ஒரு பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லம் நடவடிக்கைகள் நேற்றும் (19) நேற்று முன்தினமும் (18) மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
     
     
    இதன்போது மீனவர்கள் மற்றும் பொது மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் உத்தரவின் பேரில் இதனை எடுக்கின்றோம் என்று பொய் ஒன்றைத் தெரிவித்துள்ளார்கள். அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    இதனைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முக்கிய அதிகாரிகள்,   இன்னும் சிலர் அங்கு வருகை தந்ததாக மீனவர்களும், பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.  

    ஆட்சியாளர்கள் பெருமளவு நிதியைக் கொண்டிருக்கின்ற போது, நிந்தவூர் அஸ்ரப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்திற்கு பெருந் தொகை கொண்டு வருவதற்கும், வீதி அமைப்பதற்கும் நாங்கள்தான் நிதி கொண்டு வந்தோம் என்று சொல்லும் வண்ணம் பலம் பெற்றவர்கள் வேறு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு பெருந் தொகை நிதியைக் கொண்டு வந்திருக்க முடியும் அல்லவா? 

    அதனைச் செய்யாது நிந்தவூர் கடற்கரை மையவாடி பிரதேசத்தில்  கடலரிப்பை தடுப்பதற்குரிய வேலைத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் அதற்கான கருங்கற்களை எடுத்துச் செல்வது  அப்பிரதேசத்திற்கு செய்யும் அநியாயமாகும். 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் கடலரிப்பு வேலைக்கு முட்டுக்கட்டை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top