திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளை எதிர்வரும் ஜனவரி இருபத்தியெட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை இன்று பத்தொன்பதாம் திகதி பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு, இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படாத நிலையில், வழக்கினை இன்று பிற்பகல் இரண்டு 30 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பௌத்த மதகுருமார்களும், ஏனைய பொதுமக்களும் பலத்த பாதுகாப்புடன் இன்றைய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பௌத்த மதச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் எனப் பெருமளவிலானோர் நீதிமன்ற வளாகத்தில் சமூகமளித்திருந்தனர்.
இதன் காரணமாக நீதிமன்றச் சூழலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நீதிமன்றத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:
Post a Comment