இப் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளதால் 2 புள்ளிகளை பெரும்பாலும் இழந்துள்ள பாகிஸ்தான் மற்றைய 3 போட்டிகளில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இன்றைய ஆரம்பப் போட்டியை எதிர்கொள்கிறது.
2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கடைசி ரி20 உலகக் கிண்ணத்தில் அமெரிக்காவிடம் சுப்பர் ஓவரில் தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தான் அதே அணியை இந்த வருடமும் தனது குழுவில் எதிர்கொள்ளவுள்ளது.
எனவே இம்முறை மிகுந்த எச்சரிக்கையுடன் அமெரிக்காவை மட்டுமல்ல ஏனைய அணிகளையும் பாகிஸ்தான் எதிர்கொள்ளவுள்ளது.
நாங்கள் இத்தகைய அணிக்கு எதிராக அதிகம் விளையாடியதில்லை. மேலும் அவர்களின் பலம் மற்றும் பலவீனம் உண்மையில் தெரிவதில்லை. ஒரு அணியாக நாங்கள் 40 ஓவர்கள் வரை எங்கள் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். நாங்கள் அதைச் செய்ய முடிந்தால், உலகின் எந்த அணியையும் வெல்லக்கூடிய அணி எங்களது அணி என்று நான் முழுமையாக நம்புகிறேன்' என நேற்றைய ஊடக சந்திப்பின்போது பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா தெரிவித்தார்.
தனது பரம வைரியான இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாட மறுப்பது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தாலும், மைதானத்திற்கு வெளியே நடக்கும் விடயங்களால் நாங்கள் எமது உற்சாகத்தை இழக்கப் போவதில்லை என்று சல்மான் கூறினார்.
'நாங்கள் ஒரு ஊடக சந்திப்புக்கு வரும்போது, கிரிக்கெட்டை விட வேறு விடயங்கள் பற்றி எங்களிடம் கேட்கப்படுகிறது. இது ஒரு நல்ல விடயம் அல்ல என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் நாங்கள் ஒரு விளையாட்டு வீரராக இங்கு வந்துள்ளோம். மேலும் கிரிக்கெட்டைப் பற்றி பேசவும் கிரிக்கெட் விளையாடவும் வருகிறோம். எனவே, அந்த அளவிற்கு மட்டுமே இருப்பது நல்லது. ஒரு அணியாகவும், ஒரு தனிநபராகவும் இந்த விடயங்கள் எங்களைப் பாதிக்காமல் இருக்க முயற்சி செய்கிறோம், மேலும் இந்த விடயங்களைப் பற்றி அதிகம் பார்க்கவோ அல்லது சிந்திக்கவோ கூடாது. எனவே இதுபோன்ற விடயங்களைத் தவிர்ப்பது நல்லது' என்றார்.
இறைவனின் கிருபையால் உலகக் கிண்ணத்துக்கான எமது தயார்படுத்தல் சிறப்பாக அமைந்துள்ளது. எமது அணியில் இடம்பெறும் அனைவரும் நீண்டகாலமாக ஒன்றாக விளையாடிவருகிறோம். கடந்த ஆறு மாதங்களில் நாங்கள் ஒரு தொடரையும் இழக்கவில்லை. பெரும்பாலானவற்றில் வெற்றிபெற்றுள்ளோம். போட்டிகள் நடைபெறும்போது நாங்கள் எவ்வாறு நிலைமைகளை கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு திறமையாக செயல்பட்டோமோ அப்படியோ தொடர்ந்து விளையாடினால் வெற்றிபெற முடியும் என நான் முழுமையாக நம்புகிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, இந்திய - பாகிஸ்தான் போட்டியை நடத்திவிடவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்தியாவுடன் விளையாட முடியாது என்ற முடிவை மறுபரீசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் கடித மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோரியிருந்தது.
ஆனால், வெளிநாட்டு ஊடகமொன்றில் வெளியான செய்தியின்படி, இந்தக் கடிதம் கிடைத்ததாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அரசாங்கத்தின் முடிவை மாற்ற முடியாது என்று பதிலளித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, முழு ஆற்றலுடன் விளையாடினால் பலம்வாய்ந்த பாகிஸ்தானை வெற்றிகொள்ள முடியும் என ஊடகவியலாளர்கள் மத்தியில் நெதர்லாந்தின் ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ'டோவ் தெரிவித்தார்.
நான்காவது டி20 உலகக் கோப்பையில் விளையாடும் நெதர்லாந்து தொடக்க வீரர் மேக்ஸ் ஓ'டௌட், பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி என்பதைப் புரிந்துகொண்டு நாங்கள் மிகத் திறமையாக விளையாடினால் அவர்களை வெல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். பாகிஸ்தான் ஒரு சிறந்த அணி என்பதால் அது கடினமாக இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். எனவே, நாங்கள் மைதானத்திற்குள் சென்றதும் எங்களது பயிற்சிகள் மீது நம்பிக்கை வைத்து திறமையை வெளிப்படுத்தவுள்ளோம்' என்றார் மெக்ஸ் ஓ'டௌட்.

0 comments:
Post a Comment