2025 ஜனவரியில் மாத்திரம் 34 மில்லியன் ரூபாய்!
மொஹமட் ஆஷிக்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினை, எமது நாட்டு அரசியல் அரங்கில் பல வருட காலமாக பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது. இலங்கையில் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதாகவும், அதற்காக இலட்சக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது உண்மையா? இலங்கை பாராளுமன்றத்தின் தலைமைச் செயலகத்தில் இருந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஏனைய தகவல் மூலங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் இதனை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கையில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர் என்ற கூற்றில் உண்மையில்லை. இலங்கைக்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து பாராளுமன்றமும், தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முறை, அமைச்சர்களுக்கு மற்றொரு முறை என இரண்டு வகையான ஓய்வூதிய முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பல நாடுகளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறையைக் கொண்டுள்ளன.
உலகில் ஏனைய நாடுகளின் நிலை எவ்வாறு காணப்பட்டாலும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் நியாயமற்றது என்றும் அதனை இரத்துச்செய்ய வேண்டும் என்றும் அண்மைக் காலமாக இலங்கையில் பரவலாக பேசப்படுகின்றது. உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது நியாயமற்ற செயற்பாடா?
45 வருடங்களுக்கு முன்னர் எடுத்த தீர்மானம்
இலங்கை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியச் சட்டத்தின் படியும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களின் படியுமே, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெற்றுக்கொள்கின்றனர்? 2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் தலைமைச் செயலாளரும் பிரதிச் செயலாளருமான சமிந்த குலரத்ன வழங்கிய தகவலின்படி, 1977ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி முதல் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கை பாராளுமன்றத்தினால் 328 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், 189 மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின்படி, ஜனவரி மாதம் 328 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 23,385,520.77 ரூபாயும் (இரண்டு கோடியே முப்பத்துமூன்று இலட்சத்து, எண்பத்து ஐந்தாயிரத்து ஐந்நூற்று இருபது ரூபாய் மற்றும் எழுபத்தேழு சதம்) மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கு 11,020,666.14 ரூபாயும் (ஒரு கோடியே பத்து இலட்சத்து இருபதாயிரத்து அறுநூற்று அறுபத்து ஆறு ரூபாய் மற்றும் பதினான்கு சதம்) வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மொத்தமாக ஓய்வுபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2025ஆம் ஆண்டு ஜனவரியில் செலுத்தப்பட்ட மொத்த தொகை 34,406,186.91 ரூபாய் ஆகும் (மூன்று கோடியே, நாற்பத்து நான்கு இலட்சத்து ஆறாயிரத்து நூற்று எண்பத்தாறு ரூபாய் மற்றும் தொண்ணூற்று ஒரு சதம்). இவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக்கொள்பவர்களுக்குள், 5 வருடங்கள் முதல் 40 வருடங்கள் வரை நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். (எவ்வாறாயினும், அதிகபட்சமாக 15 வருடங்கள் எனக் கணக்கிடப்படுகின்றது).
7 இலட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர்
சாதாரணமாக அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற ஏழு இலட்சத்திற்கும் அதிகமானோர், இப்போதைக்கு ஓய்வூதியம் பெறுகின்றனர். 2023ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், 2023ஆம் ஆண்டில் 695,726 ஓய்வுபெற்ற அரச பணியாளர்கள் ஓய்வூதியம் பெற்றுள்ளனர்.
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையில் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்களா? அவர்கள் எவ்வித சேவையையும் செய்யவில்லையா? இல்லாவிட்டால் அவர்கள் செய்த சேவை போதுமானதாக இல்லையா? அல்லது ஓய்வூதியத் திட்டத்தில் பிரச்சினைகள் உள்ளனவா என மக்கள் மனதில் பல்வேறுபட்ட கேள்விகள் எழுவது இயல்பானது தானே? எமது நாட்டிலுள்ள அனைத்து சட்டங்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாலேயே நிறைவேற்றப்பட்டவையாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் உதயமான எமது பாராளுமன்றத்தில், பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், தொழிலதிபர்கள் மட்டுமன்றி அரச உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். அரச சேவையில் இருந்து விலகி பாராளுமன்றத்திற்கு வந்த சந்தர்ப்பங்களும் இருக்கலாம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கினை பெற்றுக்கொள்ள அவர்கள் உரித்துடையவர்கள் என, இலங்கை பாராளுமன்றம் வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் / சபாநாயகர் / அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் / பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என வகைப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஐந்து ஓய்வூதிய அலகுகளின் கீழ் இந்த ஒய்வூதியம் வழங்கப்படுகின்றது.
ஓய்வூதியமும் கொடுப்பனவுகளும்
பிரதமர் ஒருவர் குறைந்தபட்ச சேவைக் காலமான 5 வருடங்களை பூர்த்திசெய்திருந்தால், அவர் 23,833.33 ரூபாயை ஓய்வூதியமாக பெற்றுக்கொள்வார். அத்தோடு, 15 வருடங்களை பூர்த்திசெய்தால், பிரதமர் ஒருவருக்கு 47,666.66 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். சபாநாயகர் ஒருவர் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை பூர்த்திசெய்கையில் 22,833.33 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் அதேவேளை, 15 வருடங்களை பூர்த்திசெய்திருந்தால் 45,666.66 ரூபாய் ஓய்வூதியமாகப் பெற்றுக்கொள்வார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை பூர்த்திசெய்த பின்னர் அவர்களுக்கு அதிகபட்சமாக 21,666.66 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. மற்றும் அதிகபட்சமாக 15 வருடங்கள் முடிந்த பின்னர், அவர்களுக்கு 43,333.32 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை பூர்த்திசெய்கையில், அவர்களுக்கு 21,166.66 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுவதோடு, அதிகபட்சமாக 15 வருடங்கள் நிறைவடையும் போது, 42,333.33 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. இந்த அலகுகளில் இறுதியாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 5 வருடங்களை பூர்த்திசெய்கையில் அவர்களுக்கு 18,095.00 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. அதேபோன்று, அதிகபட்சமாக 15 வருடங்களை பூர்த்திசெய்கையில், 36,190.00 ரூபாயை ஓய்வூதியமாக பெற்றுக்கொள்கின்றனர்.
ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஓய்வூதியம் மட்டுமன்றி, மேலும் பல கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கும் அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகின்றனர் என வழங்கப்பட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாழ்வாதார கொடுப்பனவாக 6,025.00 ரூபாயும், இடைக்கால கொடுப்பனவாக 3500.00 ரூபாயும், 2022ஆம் ஆண்டு இடைக்கால கொடுப்பனவாக 3000.00 ரூபாயும், 2024ஆம் ஆண்டு இடைக்கால கொடுப்பனவாக 3000.00 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இவை மாத்திரமன்றி, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் 10,000 ரூபாய் இடைக்கால கொடுப்பனவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் தங்கிவாழ்வோருக்கு 15,000.00 ரூபாயும் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.
இலங்கை பாராளுமன்றம் வழங்கிய தகவலின்படி, ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 42,525.00 ரூபாயும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கு 32,525.00 ரூபாயும் மாதாந்த உதவித்தொகையாக பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுகின்றது. ஆனால், 30 – 40 வருட சேவையை பூர்த்தி செய்த அரசாங்க ஊழியர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகள் வழங்கப்படாமையே, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் சமூகத்தில் அதிருப்தி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு முறையை மறுபரிசீலனை செய்து பொருத்தமான ஓய்வூதிய முறையை உருவாக்கியிருக்க வேண்டும். எவ்வாறாயினும், எதிர்க்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை முற்றாக இரத்துச் செய்ய தற்போதைய பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானமானது, தற்போது ஓய்வூதியம் பெறும் எவரையும் பாதிக்காது என்ற போதும், இந்தப் பிரேரணைக்கு ஆதரவளித்த பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கோரும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment