இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா என்ற போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய கடற்படையின் மிக நவீன போர்க்கப்பல்களில் ஒன்றான ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதிலடி" வழங்கப்படும் என்று ஈரானிய கடற்படைத் தலைவர் அமீர் ஹடாமி எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற இராணுவப்பயிற்சிக்கு பிறகு கப்பல் ஈரானுக்கு திரும்பும் போது இந்த தாக்குதல் நடந்ததாகவும், நேரடி போரில் ஈடுபடாவிட்டாலும், தனது மாலுமிகள மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐ.ஆர்.ஐ.எஸ் தேனாவின் பெயரும் அதன் பணியாளர்களின் தியாகமும் ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் தனது கடல் எல்லைகளைப் பாதுகாக்கவும், அதன் கடற்படை சக்தியை மேலும் வலுப்படுத்தவும் உறுதியாக உள்ளது என்று ஈரான் தலைமைத் தளபதி அமீர் ஹடாமி வலியுறுத்தினார்.
ஈரானிய கப்பல் மீதான அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் 84 மாலுமிகள உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்த நிலையில் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகள உடல்களுடன் சிறப்பு விமானம் மூலம் நேற்று இலங்கையிலிருந்து ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment