• Latest News

    September 08, 2013

    சிரியா மீது தாக்குதல் நடத்துவது கட்டாயம்! அமெரிக்க அதிபர் ஒபாமா

    "ஈராக் போர் போல் கடுமையாக இருக்காது, ஆனால் சிரியா மீது தாக்குதல் நடத்துவது கட்டாயம்" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
    சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீது சமீபத்தில் ரசாயன குண்டு வீசி ராணுவம் தாக்கியது. அதில் 464 குழந்தைகள் உள்பட 1429 பேர் பலியாகினர்.
    இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அறிவித்தார். இதற்கு அமெரிக்க மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    எனவே போர் நடத்துவதற்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான விவாதம் நாளை (9–ந்தேதி) நடக்கிறது. இது குறித்து 10–ந் தேதி பாராளுமன்றத்தில் ஒபாமா உரையாற்ற உள்ளார்.
    இந்த நிலையில் நேற்று ரேடியோ மற்றும் இண்டர்நெட்டில் வாராந்திர உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
    சிரியாவில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து போட்டோக்கள் வெளியாகி உள்ளன. அதன் பிறகும் நான் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது. சிரியாவில் நடைபெற்ற ரசாயன ஆயுத தாக்குதல் மனித கௌரவத்திற்கு நேரடி தாக்குதலாகும்.
    அதுமட்டுமின்றி அது நமது தேசிய பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். எனவேதான் சிரியா மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்க நான் முடிவு செய்தேன்.
    'சிரியாவில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றது போன்று போர் கடுமையாக இருக்காது' குறைந்த அளவிலான ராணுவத்தின் மூலம் மட்டுமே தாக்குதல் நடத்தப்படும்.
    இந்த விவகாரத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நமது செயல்கள் அதிக திறன் வாய்ந்ததாக இருக்கும். எனவே, "ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்த சிரியா மீது கட்டாயம் தாக்குதல் நடத்த வேண்டும். அதற்கு அனைத்து எம்.பி.க்களும் பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும்" என்றார்.
    இதற்கிடையே சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்காவில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது.
    அதில், சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவில் 51 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிரியா மீது தாக்குதல் நடத்துவது கட்டாயம்! அமெரிக்க அதிபர் ஒபாமா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top