இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும்
அளிக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக
முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான தீர்ப்பு
வந்துள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர்
இரா.சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு காணி அதிகாரம் ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறுகிறார்.
முரண்பட்ட கருத்து
பலாலி படைத்தளத்துக்கு அருகிலுள்ள ஒரு இடம்
மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்து
அளிக்கப்படுவது தொடர்பாக, நாட்டின் அரசியல் அமைப்பின் 13ஆவது சட்டத்
திருத்தத்தின் கீழ் பல விதிகள் இருக்கின்றன என்றும், மாகாணசபைகளுக்கும்
காணி அதிகாரம் உண்டு என்பதை இதுவரை உச்சநீதிமன்றம் ஏற்று தனது தீர்மானங்களை
வழங்கியுள்ளது என்றும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
இப்படியான சூழலில், தற்போது தலைமை நீதிபதியாகவுள்ள
மொஹான் பீரீஸ் அவர்கள் முரண்பட்ட ஒரு முடிவை மற்ற இரண்டு நீதிபதிகளுடன்
சேர்ந்து எடுத்திருப்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு விஷயம் எனவும் சம்பந்தர்
கூறினார்.
இந்த விஷயம் குறித்து கூட்டமைப்பினர் ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள வெவேறு மக்களிடையே நல்லிணக்கமும்
புரிந்துணர்வும் ஏற்படவேண்டுமாயின் மாகாண சபைகளிடம் காணி அதிகாரம் இருக்க
வேண்டியது மிகவும் அவசியம் எனவும் கூறும் அவர், அப்படி இல்லாவிட்டால் அதன்
விளைவுகள் பாரதூரமாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
BBC-
0 comments:
Post a Comment