இந்திய கிரிக்கெட் அணியின் 'சாதனை சிகரம்' சச்சின் தெண்டுல்கர் 200–வது டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். கராச்சியில் தொடங்கிய அவரது கிரிக்கெட் பயணம் மும்பையில் நிறைவு பெறுகிறது.
சச்சின் என்றாலே...
சச்சின் என்றாலே...
'கிரிக்கெட்டின் கடவுள்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட் உலகில் பேட்டிங்கில் கிட்டதட்ட ஒரு சில சாதனைகளை தவிர மற்ற அனைத்தும் அவரது வசம் தான் உள்ளது.
கடந்த 24 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் சச்சின் தெண்டுல்கருக்கு இப்போது வயது 40. வயது முதிர்வு காரணமாக அவரது ஆட்டத்திறன் சமீபகாலமாக வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது. அவர் சதம் அடித்து இரண்டரை ஆண்டுகளுக்கு (கடைசியாக 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தார்) மேலாகி விட்டதே அதற்கு உதாரணம். ஒவ்வொரு முறை அவர் களம் இறங்கும் போதும் மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் விளையாடுவதால் சீக்கிரம் ஆட்டம் இழந்து விடுகிறார்.ஓய்வு அறிவிப்பு
ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். என்றாலும் டெஸ்டில் இருந்தும் அவர் எப்போது ஒதுங்குவார் என்று ரசிகர்கள், நிபுணர்கள், மீடியாக்கள் இடையே ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. 200–வது டெஸ்டுடன் விலகுவார். அடுத்த ஆண்டு மத்தியில் விடைபெறுவார் என்று பல்வேறு யூகங்கள் கிளம்பி கொண்டே இருந்தன.
இந்த நிலையில் யூகங்கள் அனைத்திற்கும் சச்சின் தெண்டுல்கர் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார். தனது 200–வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
என்ன காரணம்?
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது வாழ்க்கையில் மிகப்பெரிய கனவாக இருந்திருக்கிறது. கடந்த 24 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் அந்த கனவு நனவான சந்தோஷத்துடன் தான் வாழ்ந்து வருகிறேன். கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம். ஏனெனில் 11–வது வயதில் இருந்து கிரிக்கெட் தான் எனது உலகமாக இருந்துள்ளது.
இந்திய அணிக்காக உலகம் முழுவதும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். எனது 200–வது டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் (மும்பையில்) விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அந்த டெஸ்டுடன் ஓய்வு பெறுகிறேன்.
கடந்த காலங்களில் எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்து, நான் விரும்பிய வரை தொடர்ந்து விளையாட அனுமதி அளித்த கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளின் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் தான் என்னை வலுவான வீரராக மாற்றியதுடன், களத்தில் சிறப்பாக செயல்படவும் ஊக்குவித்தது. அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல் என்னை முழுமையாக புரிந்து கொண்டு பொறுமை காத்த எனது குடும்பத்தினருக்கும் நன்றி.
இவ்வாறு தெண்டுல்கர் அதில் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் கடைசி டெஸ்ட்
தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியா வந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அது தான் அவரது கடைசி தொடராகும்.
தெண்டுல்கரின் ஆசைப்படியே அவரது 200–வது டெஸ்ட் போட்டி நவம்பர் 14–ந்தேதி மும்பையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனைகள்
தனது நளினமான பேட்டிங்கால் கோடிக்கணக்கான ரசிகர்களை வசீகரம் செய்த மும்பையைச் சேர்ந்த தெண்டுல்கர், நீண்ட காலம் விளையாடி ஏராளமான சாதனைகளை உருவாக்கினார்.
இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 51 சதம் உள்பட 15857 ரன்கள் (சராசரி 53.86) குவித்து இருக்கிறார். இதே போல் 463 ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் உள்பட 18,426 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். ஒரு நாள்போட்டியில் இரட்டை செஞ்சுரி எடுத்த முதல் வீரரும் இவர் தான். 200–வது டெஸ்ட் மைல்கல்லை எட்டப்போகும் அரிய வீரரும் இவர் தான்.
பேட்டுக்கு நிரந்தர ஓய்வு
தெண்டுல்கர் ஆட்டம் இழந்து விட்டால் டி.வி.யை ஆப் செய்து விடும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு. பல்வேறு வீரர்கள் அவரைத் தான் தங்களது ரோல்மாடலாக தேர்வு செய்து விளையாடுகிறார்கள்.
இப்படி கிரிக்கெட்டுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அவர் அடுத்த மாதத்துடன் கால் நூற்றாண்டுக்கு மேலாக சுமந்த பேட்டுக்கு நிரந்தர விடை கொடுப்பது ரசிகர்களுக்கு உண்மையிலேயே பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
'தெண்டுல்கர் இடத்தை நிரப்புவது கடினம்'
சுனில் கவாஸ்கர்: சச்சின் ஓய்வு அறிவிப்பால் இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய வெற்றிடம் விழுகிறது. இதனை நிரப்புவது என்பது எளிதான காரியம் அல்ல. கங்குலி, லட்சுமண், டிராவிட் ஓய்வுக்கு பின்னர் மிடில் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக அமைய நீண்ட நாள் பிடித்ததை நாம் பார்த்தோம். டெஸ்ட் போட்டியில் 4–வது வீரராக களம் இறங்கும் பேட்ஸ்மேனான தெண்டுல்கரின் இடத்தை நிரப்புவது கடினமான விஷயமாகும்.
கங்குலி: சரியான நேரத்தில், சரியான முடிவை தெண்டுல்கர் எடுத்து இருக்கிறார். அவர் விளையாடும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் அதிக அளவிலான மக்கள் நேரில் கண்டு களிக்க வேண்டும்.
முரளிதரன்: இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் இது மோசமான நாள். எல்லா பந்து வீச்சாளர்களும் அவரது விக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லா நேரங்களிலும் அவரது விக்கெட்டை வீழ்த்துவது கடினம்.
0 comments:
Post a Comment