வங்கக்கடலில் உருவான அதிவேக புயலான பைலின் நேற்று இரவு 10 மணிக்கு மேல்
ஒடிசாவின் கோபால்பூர் வழியாக கரையை கடந்தது. மணிக்கு 220 கி.மீ. வேகம் வரை
சுமார் 6 மணி நேரத்திற்கு வீசிய இந்த பைலின் புயலுக்கு 90 லட்சம் மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2.1/2 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
கடந்த 14 வருடங்களில் ஒடிசா கடற்கரை கண்டிராத இந்த கடும் புயலினால் பெய்த
கனமழைக்கு கஞ்சம் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட ரூ. 2400 கோடி பயிர்கள்
நாசாமாகியுள்ளன. சாலைகளில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் தகவல்
தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒடிசா கோபால்பூர் கடற்கரைய கடந்து சென்ற அந்த பைலின் புயல் பின்னர்
பலஹீனமடைந்தது. இதனால் ஒடிசாவில் ஏற்படவிருந்த பெருமளவிலான பாதிப்புகள்
தடுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமீப வரலாற்றில் இல்லாத
அளவிற்கு 9 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
ராணுவம் மற்றும் துணை நிலை ராணுவத்தினர் பெருமளவில்
குவிக்கப்பட்டிருப்பதால் மீட்புப்பணிகள் துரித கதியில் நடைபெற்று
வருகின்றன. இந்த அதிக வேக பைலின் புயல் கோபால்பூர் கடற்கரையை கடந்து
செல்வதற்கு முன்பு வீசிய கடும் காற்றுக்கு ஒடிசா மற்றும் ஆந்திராவில் 9
பேர் வரை பலியாகியுள்ளனர்.
கடந்த 1999-ம் ஆண்டு வீசிய அதி வேக புயலுக்கு ஒடிசாவில் 9,885 பேர்
உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள்
அதி வேக புயலின் பாதிப்பிலிருந்து தப்பித்துள்ளன.
பைலின் புயலின் தாக்கம் ஒடிசாவின் பராதீப், கோபால்பூர் மற்றும் ஆந்திர
மாநிலம் ஸ்ரீகாக்குலம் வரை இருந்தது. இதனால் அருகிலுள்ள பீகார்,
சத்திஸ்கார், ஜார்கண்ட், மேற்குவங்கம் மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில்
பெருமளவிலான கனமழை பொழிய எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இமாயமலையில்
உள்ள நேபாளில் சென்று பலஹீனமடையும் என்றும் கூறப்படுகிறது.


















0 comments:
Post a Comment