முஹம்மத் SR. நிஸ்த்தார்.
கடந்த 28.09.13ல் லண்டன் முஸ்லீம் குரல்
வானொலியில் நடைபெற்ற அரசியல் களம் நிகழ்ச்சியில் பேட்டி வழங்கிய முஸ்லீம்
காங்கிரஸ் செயலாளர் திரு. ஹசன் அலி அவர்கள் இரண்டு முக்கிய விடயங்களை
மக்களின் சிந்தனைக்கு விட்டுச்சென்றார். 1. ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகம்
தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் மு.கா பல ஒப்பந்தங்கள் செய்துள்ளது, அவை
நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்தில் இருந்து வெளியேறமாட்டோம். 2. மு.கா
கிழக்கை மையப்படுத்தி செயல்படும் ஒரு கட்சி.
இலங்கையில் நடந்து முடிந்த மூன்று மாகாண
சபை தேர்தல்களில் மு.கா மொத்தமாக நான்கு(04) இடங்களை மாத்திரம் பெற்ற
நிலையில் இது அக் கட்சியின் தோல்வியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு
விடையளிக்கும் முகமாக அது தொடர்பான விடயங்களை விளக்கும் போதே திரு, ஹசன்
அலி
இந்த இரண்டு முக்கிய விடயங்களையும் கூறிச் சென்றார். இந்த இரண்டு
அம்சங்களையும் உற்று நோக்கும் ஒருவருக்கு இயற்கையாக எழும் கேள்விகள்: 1.
அது என்ன ஒப்பந்தம்? ஏன் அதன் சாராம்சம் இன்னும் வெளியிடப்படாமல்
இருக்கின்றது? எப்போது அ(து)வை நிறை வேறும் என்று காத்திருக்கின்றீகள்? அது
நிறைவேற்றப்படாமல் இருந்தால் என்ன செய்ய உத்ததேசம்? 2. மு.கா. கிழக்கை
மையப்படுத்துவதாக இருந்தால் ஏன் மத்தியிலும், வடமேற்கிலும், வடக்கிலுமான
மாகாண சபை தேர்தல் பிரவேசம்? பொது தேர்தல்களில் ஏன் தேசிய ரீதியிலான
குதிப்பு? அதனூடாக ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தின் குரலாக ஒலிக்க
எடுக்கும் முயற்சி ஏன்? என்பவைகளே.
சரியான காரணங்கள் இருந்தனவோ என்னவோ
வடக்குத் தமிழரின் அரசியல் மாதிரிக்கு சமனான ஒரு அரசியல் வடிவம் இலங்கை
முஸ்லீம்களுக்கும் தேவை என்ற புரிதலில், பொது நலமும் சற்று சுயநலமும்
கலந்தும், அதற்கு சமய சாயம் பூசியும் பூசாமலும் ஏதோ இறைவனின் நாமத்தில்
ஆரம்பித்துவைக்கப்பட்ட கட்சி முஸ்லீம் காங்கிரஸ். இன்று அதன் கொள்கை என்ன
என்று தலைமைக்கும் தெரியாததால் மக்கள் முன் எதை சொல்வது? எதை காட்டி வாக்கு
கேட்பது? என்று திண்டாடுகின்றது. ஆனாலும் அல்லாஹ், இஸ்லாம், முஸ்லீம் என்ற
ஏதாவது ஒரு வார்த்தையை ஒட்டிவைத்தால் இதற்கு எதிராக செல்வது சமய
நிந்தனையாகிவிடும், மஃஸரில்( இறை நம்பிக்கையாளரின் உலக இறுதி நாளுக்கு
பின்னான விசாரணை நாள்) இறைவனின் கோவப்பார்வைக்கு உற்படவேண்டி வரும் என்ற
பயத்தில் பலவீன பக்தர்கள் வழங்கும் வாக்குகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது
அக்கட்சி.
அரசியலில் கட்சி கட்டுவதும் அதற்காக
கச்சைகட்டி களத்தில் இறங்குவதும் சாதரணமாக கொள்கை சார்ந்த(ideological)
அல்லது யாதார்த்தப் போக்கை(pragmetic) பிரதிபலிக்கும் இரண்டு விடயங்களில்
ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அமைவதைக் காணலாம். சில சந்தர்பங்களில்
இவ்விரண்டும் கலந்த மாதிரியான செயல் திட்டத்திலும் கட்சிகள் அரசியல்
செய்வதுண்டு. இவை இரண்டும் இல்லாமல் தேர்தல் வருகின்றன வாக்களிக்க மக்கள்
ஆவலாக இருக்கின்றார்கள் என்பதற்காக யாராவது ஒருவர் வேட்பாளராவதும் தாம்
தேர்தலில் குதித்துவிட்டோம் என்பதற்காக கோடி, கோடியாய் செலவு செய்து
மாகாணசபையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ நாற்காலி ஒன்றின் மேல் மோகம் கொண்டு
ஏதேதோ செய்வதும் நம் நாட்டில் சகஜமான ஒரு விடயமாகிவிட்டது. ஆகவே
அரசியலின் சமூகம் சார்ந்த முக்கியத்துவம், கடமை உணர்வு, பொறுப்புக் கூறல்,
வெளிப்படைதன்மை எல்லாம் இல்லாமல் பணமும், முடியுமானால் புகழும்
சம்பாதிக்கும் ஒரு தொழிலாக அதை மாற்றி விடுகின்றனர். இதை சரியாக படம்
பிடித்துக் காட்டுகின்றது மு.கா செயலாளர் ஹசன் அலியின் பேட்டியின்
சாராம்சம்.
ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும்
கட்சி என்றால் அதற்கு சரியான கொள்கைகளும், அதை செயல்படுத்த சரியான வேலைத்
திட்டங்களும், அதை நடை முறைப்படுத்த அயராது உழைக்கும் பிரதிநிதிகளும் தேவை.
நாட்டின் தேசிய கட்சிகளின் பிழையான வழி நடத்தலினால் அங்கு
சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதும் அந்த பாதிப்பை சீர்செய்ய சந்தர்ப்பம்
பார்த்திருப்பதும், அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால் நமக்கு
பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு சற்றும் குறைவில்லாத விதத்தில் நடப்பதும்,
அப்படி நடப்பதுவே அரசியல் ரீதியான நமது பலம் என்ற மாயைக்குள் மயங்குவதுமாக
தனி கட்சி அமைத்து சுமார் 30 வருட அரசியல் வாழ்வை கண்டுவிட்டது முஸ்லீம்
சமூகம். கப்பல்-துறைமுக அபிவிருத்தி அமைச்சு கைவசம் இருந்தது என்பதற்காக
இரவு பகலாக பதவி வழங்கலில் ஈடுபட்டு கட்சிக்கான நம் சமூக அந்தஸ்த்தை
சம்பாதிக்க எடுத்த முயற்சி ஒரு அரசியல் மேதாவிதனமாகும். கட்சியின் ஆதரவை
மாற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தமையானதும் நம் அரசியல்
சாணக்கியமும் அல்ல அது காற்றுள்ள போது தூற்றிக்கொண்ட விடயம் மட்டுமே. இவை
எல்லாம் நம் நாடு ஒரு பயங்கர காட்டு பிரயாணத்தை மேற்கொண்டிருந்த
காலப்பகுதிக்குள் நடந்து முடிந்த சம்பவங்கள். காலம் மாற நம் அரசியல்
சிந்தனையும் போக்கும் மாறி இருக்க வேண்டும். மறவில்லை அதனால் அரசியல்
அநாதைகளாகி வருகின்றோம். இது நீடித்தால் அரசியலில் நம் முக்கல்
முனகலுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும்.
மு.கா ஸ்தாபக தலைவர் 70வதுகளின்
பிற்பகுதியில் புத்தளத்தில் நடந்த ஒரு மீலாத் விழா (இறைதூதர் முஹம்மதின்
பிறந்த நாளை ஒட்டி நடைபெறும் நிகழ்வு)வில் சொற்பொழி ஒன்றை செய்தார்.
அப்போது ஒரு முஸ்லீமுக்கும் அவன் சமய நூலான புனித குர்-ஆனுக்கு இடையிலுள்ள
உறவை காட்ட ஒரு உதாரணத்தை சொன்னார். மனதில் அது சுளீரென தைத்தது. அவர்
சொன்னது இது தான்: ” ஓரு (முஸ்லீம்) கள்வன்(?) ஒரு வீட்டுக்குள் நுழைந்து
களவாடி வெளிச் செல்லும் போது ஏதோ தட்டுப்பட அதை எடுத்து பார்த்தானாம், அது
குர்-ஆன் என்பதை கண்டு கொண்டு அதை வாஞ்சையோடு முத்தமிட்டு அலுமாரியின் மேலே
வைத்துவிட்டு சென்றானாம்”, ஒரு புனைவுதான் இது என்றாலும் இது ஒரு பிழையான
உதாரணம் என்பதையும் தான் இதை ஒரு பொது கூட்டத்திலே மக்கள் முன்
சொல்கின்றேன் என்பதையும் உணரத்தவறியது, இவரின் பிழையான அரசியல்
முடிவுகளுக்கு சரியானதாக தாம் கருதும் விளக்கம் ஒன்றை கொடுக்க
முனைந்தமைக்கும் உள்ள ஒற்றுமையை காட்டுகின்றது.
அதனால்தான் ஜானாதிபதி முறையே இலங்கை
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பளிக்கும் ஒரு ஏற்பாடு என்ற இவரின் வாதமும்
இன்று பொய்யாகி இந்த ஜானாதிபதி முறை சர்வாதிகார போக்கிற்கான ஒரு பலத்த
அத்திவாரமாக மாறியிருப்பதை நாம் கண்டுகொண்டிருக்கின்றோம். ஸ்தாபக தலைவர்
தன் இறுதி காலத்திலேயாயினும் மு.கா வின் தொடர்ச்சியான இருப்பு
நீண்டகாலத்தில் ஒட்டு மொத்த சமூகத்துக்கு ஆபத்தாக அமையும் என்ற ரீதியில்
மாற்று அரசியல் நகர்வொன்றை இணங்கண்டு கொண்டதும் அது தொடர்பான
செயலாக்கத்தில் ஈடுபட்டதும் அரசியலில் அவரின் சிறிய பரிணாமத்தைக் காட்டி
நிற்கின்றது.
ஆனாலும் அந்த இறுதி நேர முயற்சி முனைப்பு
பெற முன்னரே அவரின் மறைவானது இலங்கை முஸ்லீம்களின் அரசியல் வளர்ச்சியிலும்
ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கொள்ளவேண்டியுள்ளது. ஆகவேதான் மு.கா
என்பது காரணமின்றி ஒரு தேசிய கட்சியின் ஸ்தானத்தில் வைத்து
பார்க்கப்பட்டதும் முஸ்லீம்களுக்கு தேசிய ரீதியாக ஏற்படும்
முட்டுக்கட்டைகளுக்கு மு.கா காட்டமான நடவடிக்கைகளை எடுக்க வல்லமை உள்ளதென்ற
தப்பபிராயமுமாகும். இதற்கான இன்னுமொரு அடிப்படை காரணமாக அமைந்தது பொதுவாக
முஸ்லீம்களுக்கிருக்கும் அரசியல் அறிவின்மையும் தேர்தல்கால அரசியல்
நிலைமையே அரசியலின் ஒட்டு மொத்த வடிவம் என்ற நமது நம்பிக்கையின் பால்பட்ட
விடயமுமாகும். இதை எல்லாம் நிரூபிப்பதாக அமைந்தது திரு, ஹசன் அலியின்
அன்றைய பேட்டி.
இந்த அடிப்படையில் அவர் விட்டு சென்ற
முக்கிய கருத்துக்களை பார்க்கும் போது மு.கா க்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி அரசாங்கத்துக்கும் இடையே உடன்படிக்கை(கள்) உள்ளதென்றால் அது எதை
குறித்த உடன்படிக்கை என்று ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்துக்கு
தெரியாவிட்டாலும் ஆகக்குறைந்தது மு.கா அங்கத்தவர்களுக்கும், ஆதரவாளருக்கும்
தெரிந்திருக்க வேண்டும். ஆனால் மு.கா அதி உச்ச (சபை) நபர்களைத் தவிர
வேறுயாருக்கும் தெரிந்திருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இந்த
உடன்படிக்கை தனி நபர் நலன் சார்ந்ததில்லை என்று உறுதியாகக் கூறும் ஹசன் அலி
இந்த சந்தேகத்துகுறிய உடன்படிக்கையின் சாராம்சத்தைக் கூட குறிப்பிட
தயக்கம் காட்டியதை பார்க்கும் போது அப்படி ஒரு உடன்படிக்கை இல்லை அல்லது
அது கிழக்கு மாகாண சபையின் இரண்டாம் அரை ஆட்சி காலத்தில் மு.கா க்கான
முதலமைச்சர் பதவி என்பதை தவிர வேறு ஏதும் இருப்பதற்கான சாத்தியபாடுகள்
குறைவே என்பதையுமே இது காட்டி நிற்கின்றது. சரி அப்படிதான் முதலமைச்சர்
பதவி கிடைத்துவிட்டது என்றாலும் இவர்களால் சமூகத்துக்காக எதை செய்ய
முடியும்? வெறும் முதலமைச்சர் பதவி என்றால் தமிழர் தேசிய கூட்டணியும் கூட
மு.கா சை மாகாணசபையின் முழு காலப்பகுதிக்கும் முதலமைச்சர பதவியை
வைத்திருக்க சம்மதித்து தம்முடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக் கேட்டனரே. ஆகவே
அவர்களுடன் செய்ய இருந்தது சிறிய ஒப்பந்தம் ஒன்றுதான், அதாவது “ஐக்கிய
இலங்கை” என்ற கொள்கைக்கு எதிரான எந்த நிலைப்பாட்டை த,தே.கூ எடுத்தாலும்
அதற்கு மு.கா ஆதரவு வழங்காது என்ற சின்ன விடயமாகும். ஆனாலும் மு.கா த.தே.கூ
அழைப்பை நிராகரித்தது. எனவே இந்த முதலமைச்சர் பதவிக்கப்பால் ஏதோ ஒன்று
இருக்க வேண்டும். அது சமூகம் சார்ந்தாக இருந்தால் அது உடனடியாக சமூகத்தின்
முன் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் அப்படி ஒரு சமூகம் சார்ந்த
விடயம் தொடர்பாக ஐ.ம.சு.முன்னணியுடன் மு.கா.க்கு உடன்படிக்கை எதுவும் இல்லை
என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் “நடிகர்” நீதி
அமைச்சர் எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் “செயலாளர் நாயகம்” ( UN General
Secretary) பதவிக்கு இலங்கை சார்பாக தன்னை பரிந்துரைக்கும் படியான
உடன்படிக்கை ஒன்றை சுதந்திரக் கட்சியுடன் செய்திருப்பதற்கான
சாத்தியப்பாடுகள் இருப்பதாக உர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களும் எம்மை
வந்தடைந்துள்ளன. நீதியமைச்சர் பதவியே மு.கா தவைவருக்கு பொருத்தமில்லாத
ஒன்றென்று இன்று இலங்கை மக்கள் கருதும் போது ஐ. நா. செயலாளர் நாயகம் என்ற
உலகத்தின் அதிவுயர் பதவிகளில் ஒன்று இவருக்கு எப்படி பொருத்தமாகும்? ஆகவே
ஒப்பந்தம், உடன்படிக்கை, ராஜதந்திரம், ஆபத்தில்லா அணுகு முறை என்று
முஸ்லீம்களை தொடந்தும் “இருள்” க்குள் வைக்கலாம் என்று மு.கா இனியும் கனவு
காணலாகாது.
இதே போலவே திரு. ஹஸன் அலியின்
அடுத்தவிடயம், அதாவது மு.கா கிழக்கை முதன்மைபடுத்தும் ஒரு கட்சி என்ற
விடயம். ஸ்தாபக தலைவருக்கிருந்த அன்றை தமிழ் அரசியலுடனும், அரசியல்
தலைவர்களுடனுமான தொடர்பும், பின்நாள்களில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான
அனுபவங்களும் அவரை தமிழரின் அரசியலுக்கு “ஏட்டிக்குப் போட்டியான” (Tit for
tat) ஒரு அரசியல் நிலை நோக்கி (பிழையாக) சிந்திக்கச் செய்தது. இது
கிழக்கிலே “முஸ்லீம் ஆட்சியலகு” (Muslim administrative unit) என்ற
சாத்தியமில்லாத ஒரு விடயத்தை முன்வைக்க தூண்டியது. இது “ஒலுவில்
பிரகடனமாக” கிழக்கிலே வலம் வந்தது. மு.கா ஒரு தேசிய கட்சி என்றால்
கிழக்கின் முஸ்லீம் ஆட்சியலகு என்ற கோரிக்கை கிழக்குக்கு வெளியே வாழும்
கிழக்கைவிடவும் கூடுதலான முஸ்லீம் மக்களுக்கு எந்த விதத்தில் அது நன்மை
பயப்பதாக அமைந்திருக்கும்? அத்துடன் எமது பிராந்திய வல்லரசான இந்தியாவே
விரும்பாத, எந்த விலை கொடுத்தும் ஒரு தனி “தமிழீழம்” அமைவதை தடுக்க ஆவலாய்
இருந்த இந்தியாவின் நிலைப்பாட்டை, இந்தியாவின் பொதுவான வெளிவிவகார
கொள்கை(Foreign policy)யை அறியமுடியாத ஒரு அரசியல் தலைவராக ஸ்தாபக தலைவர்
இருந்திருக்கிறார் என்பதை இன்றும் நம்பமுடியாதுள்ளது. இந்தியாவின்
நிலைப்பாட்டை அவரால் சரியாக அறிய முடிந்திருக்குமானல் சாத்தியமில்லா
“தமிழீழம்” என்ற “கனவு நாடு” ஒன்றைக் கண்டு பயந்து ”முஸ்லீம் ஆட்சியலகு”
என்ற ஒரு அவசர “தற்காப்பு” பிராந்திய ஏற்பாட்டை முன்வைத்து பொதுவாக
தமிழர்களின் அதிர்ப்திக்கும், குறிப்பாக தமிழ் புலிகளின் கோபத்திற்கும்
முஸ்லீம் சமூகத்தை முகங்கொடுக்க செய்திருக்கமாட்டார்.
பிற்பாடு இன்றைய மு.கா தலைவருக்கு
வன்னியிலே கோழி பிரியாணி விருந்துபசாரம் அளிக்கப்பட்டு, நேரந்தவராது
தொழுகையை நிறைவேற்ற வசதி எல்லாம் செய்து கொடுக்கப்பட்டு அங்கே மு.கா
தவைவருக்கும் புலித் தலைவருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
அதன் உள்ளடக்கம் (Contents) அன்று முஸ்லீம் சமூகத்துக்கு வெளிப்படுத்தவோ
அல்லது விளங்கப்படுத்தவோ இல்லை. ஆகவே இவரும் இந்திய அரசின் போக்கையோ அல்லது
இந்திய வெளிவுறவு கொள்கையையோ அறிந்திருக்கவில்லை. ஆகவே இன்று மு.கா க்கும்
ஐ.ம.சு.மு க்கும் ஒன்றோ, பலதோ உடன்படிக்கைகள் இருக்குமானல் அதுவும்
அரசியல் ரீதியிலே முஸ்லீம் சமூகத்துக்கு பயனளிக்கும் ஒன்றாக பார்க்க
முடியாத நிலையேயுள்ளது. அதாவது ஆளும் அரசாங்கத்தை, அரசாங்கத்தை
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு சிறு குழு(Oligare)வை, அவர்களின்
திட்டங்களை அறிய முடியாதவராகவே இருகின்றார். எனவே மு.கா தேசிய ரீதியில்
முழு முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியில்லாத கட்சி. அதன்
தலைவர் தேசிய ரீதியிலான முஸ்லீம் சமூகத்தின் தலைமைப் பதவிக்கு
பொருத்தமில்லாதவராகவே காணப்படுகின்றார்.
இவை தவிரவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக
நடந்தேறிய முஸ்லீம் விரோத நடவடிக்கைகள் தொடர்பாக அந்த சமூகத்தை தேசிய
ரீதியிலே பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லும் கட்சி திருப்தியளிக்கும்
வகையில் ஏதாவது செய்ததற்கான அத்தாட்சிகள் எதுவும் இல்லை. தேவையானதை
சரியானவர்களுடன் பேசியுள்ளோம் என்றதும், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை
எடுப்போம் என்றதும் காதில் பூ சுத்தும் செய்தியே. தன்னுடைய அமைச்சின்
அதிகார வரம்புக்குள்ளேயே எந்தவித நடவடிக்கையும் எடுக்க சக்தியில்லாத ஒரு
மனிதனுக்கு அந்த அமைச்சு மிகப் பெரிய ஒரு பொறுப்பு. ஆகவே அவரிடம் ஒட்டு
மொத்த சமூகத்தின் விவகாரங்களையும், அரசியல் எதிர்காலத்தையும் கொடுத்துவிட
முடியாது, அப்படி கொடுத்தாலும் அவரால் அதை சரியாக செய்ய முடியாது. ஆகவேதான்
மு.கா ஒரு பிராந்திய கட்சி என்றும் அந்த பிராந்தியத்தை நோக்கியே தமது
கட்சியை(படையணியை) மு.கா நகர்த்தி செல்வதையும் காணலாம்.
ஆக திரு. ஹஸன் அலி தம் கட்சியின்
நிலைப்பாட்டை சரியாக படம்பிடித்துக் காட்டி முஸ்லீம் சமூகத்தை அதிர்ச்சி(
Shock) யடையச் செய்த பிறகும் மு.கா முஸ்லீம் சமூகத்துக்காக குரல் கொடுத்து,
அவர்களின் உரிமைகளை பாதுகாத்து முழு இலங்கை முஸ்லீம்களையும்
சொக்க(enrapture) வைக்கும் என்று எதிர்பார்தால் இதைவிட அரசியல் அறிவீனம்
ஒன்று இருக்கமுடியாது.

0 comments:
Post a Comment