சுலைமான் றாபி;
பல்வேறு சவால்களுக்கு
மத்தியில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிந்தவூர் பிரதேச சபையின் வரவு
செலவுத்திட்டம் பிரதேச சபையின் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்டதாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் MAM தாஹிர்
தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச அவர்களின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் அவரினால்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் உள்ளூராட்சி
சபைகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு வழங்கியமையினால் எமக்கு ஏற்படும்
நிதியியல் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கும், எமது திட்டங்களை
முறையாக நடைமுறைப்படுத்துவதற்கும் வழிசமைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும்
எமது சபையினால் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமானது நிந்தவூர் மக்களின்
அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், அதனுள் இணைந்த இதர
செயற்பாடுகளுக்கு புத்துயிர் ஊட்டுவதாக அமைந்துள்ளதெனவும் தெரிவித்தார்.
தலைவர் மர்ஹூம் MHM அஷ்ரப் அவர்களின் நீண்ட நாள் கனவாக
இருந்த நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப்பணிகள் மிக விரைவில்
ஆரம்பிக்கப்பட்டு அதனை மக்களின் பாவனைக்கு வழங்கவிருப்பதாகவும், அதற்காக
தமது வரவு செலவுத்திட்டத்தில் சுமார் 40 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு
செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை மிக நீண்ட காலமாக குறையாகக்
காணப்பட்ட இந்த கலாச்சார மண்டபமானது தற்போதைய அரசாங்கத்தின் வரவு
செலவுத்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கிய நிதி
ஒதுக்கீட்டின் மூலம் இதனை விரைவாக செய்து முடிக்க முடியுமென்றும்,
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும் மாகாண சபைகள் உள்ளூராட்சி
அமைச்சர் ALM அதாஉல்லாஹ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக
குறிப்பிட்டார். தனது சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்
நிறைவேற்றப்பட்டமைக்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்கிய பிரதேச சபை
உறுப்பினர்களுக்கும், பிரதேச சபை எதிர்கட்சித்தலைவருக்கும் விஷேட
நன்றிகளைத் தெரிவித்தார்.
இன்றைய வரவு செலவுத் திட்டத்தின் சபை அமர்விற்கு
உதவித் தவிசாளர் எம்.எம்.எம். அன்ஸார் கலந்து கொள்ளாத போதும், பிரதேச
சபையின் உறுப்பினர் MT ஜப்பார் அலி தான் இந்த வரவு செலவுத்திட்டதிற்கு
நடுநிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை நிந்தவூர் பிரதேச சபையின்
2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினை பிரதேச சபை உறுப்பினர் SIM
றியாஸ் மும்மொழிய, சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமாலெவ்வை வழி
மொழிந்ததாக தவிசாளர் MAM தாஹிர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment