கல்முனை நிருபர்;
ஆண்டாண்டு காலமாக உறவாய் இருந்த கல்முனைக்குடி சாய்ந்தமருது மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சுயநலன்களுக்காக பகையை ஏற்படுத்தியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
கல்முனைக்குடி மக்களின் பாரம்பரியம் என்பது சாய்ந்தமருதிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதுதான் வரலாறாகும். இவ்விரு ஊர்களுக்கும் மத்தியில் திருமண உறவு என்பது மிகவும் சகஜமானது.
இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
கல்முனைக்குடி மக்களின் பாரம்பரியம் என்பது சாய்ந்தமருதிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதுதான் வரலாறாகும். இவ்விரு ஊர்களுக்கும் மத்தியில் திருமண உறவு என்பது மிகவும் சகஜமானது.
எனது தந்தை சாய்ந்தமருதின் பிரபல்மயமான ஆலிம் பரம்பரையை சேர்ந்தவர். ஆனாலும் அவரை கல்முனைக்குடியினர் சாய்ந்தமருதூரார் என பிரித்துப்பார்க்கவில்லை என்பதை சத்தியமாக சொல்ல முடியும்.
கல்முனை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவராக எனது தந்தை நியமிக்கப்பட்டபோது அவர் சாய்ந்தமருது என எவரும் பிரதேசவாதம் பேசவில்லை. இவ்வாறு பல அனுபவங்கள் பலருக்கும் உண்டு. ஆனால் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும், கல்முனைக்குடி சாய்ந்தமருதின் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சுயநலவாதிகளுக்கும் இவ்விரு ஊராரையும் பிரித்து வைத்து அரசியல் செய்வதன் மூலமே தமது இருப்பைக்காக்கலாம் என்பதன் எதிரொலியாகவே இன்று பிரதேச வாதம் தலையெடுத்துள்ளது.
இந்த நிலையில் அண்மைய மேயர் குழப்பம் காரணமாக சிராஸின் ஆதரவாளர்களால் வெளியிடப்பட்ட பிரசுரத்தில் கலமுனைக்குடியினர் சாய்ந்தமருதின் மீது மேலாதிக்கம் செலுத்த முனைகின்றனர் என குறிப்பிட்டிருப்பது இஸ்லாத்துக்கும் மனித நாகரிகத்துக்கும் எதிரானதாக மட்டுமன்றி உண்மைக்கும் புறம்பானதாகும். இவ்வாறான கருத்துக்கள் எமது சமூகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவாகும்.
உண்மையில் கல்முனைக்குடி மக்கள் அரசியல் விடயத்தில் மிகுந்த அப்பாவிகளாக இருக்கிறார்கள் என்பதே உண்மையானதாகும். சமூக உணர்வு கொண்ட அவர்கள் தினமும் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு முஸ்லிம் காங்கிரசின் அரசியலால் பெரிதும் நன்மைகள் கிடைக்கவில்லை என்பதும் உண்மையாகும்.
கல்முனைக்குடி மக்களுக்கு சாய்ந்தமருதின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது என்பதனை இந்த மேயர் பிரச்சினையின் போது தமக்கு மேயர் வேண்டும் என கல்முனைக்குடி மக்கள் இன்று வரை எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடாமல் இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் முஸ்லிம் காங்கிரசின் பிரதேச மட்ட அரசியல்வாதிகளுக்கே யார் பெரியவன் என்ற போட்டி மனப்பான்மை உள்ளது. அதனடிப்படையில் கல்முனைக்குடியின் முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்ட உறுப்பினர்கள் சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்ட உறுப்பினர்கள் மீதும் சாய்ந்தமருது மு. கா உறுப்பினர்கள் கல்முனைக்குடி மு. கா உயர் உறுப்பினர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முனைகிறார்கள் என கூற முடியுமே தவிர முழு கல்முனைக்குடி மக்களையும் பொய்யாக குற்றம் சாட்டியமைக்காக சிராஸின் ஆதரவாளர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பது மனிதத்தன்மையாகும்.
உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உறுதியான தலைமையாக இருந்திருந்தால் தேர்தல் காலத்தில் மேயர் யார் என்பதை பகிரங்கமாக கூறியிருக்க வேண்டும். நிசாம் காரியப்பர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதால் அவருக்கு மேயர் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக இருந்திருப்பின் அவர் குறைந்த வாக்குகள் பெற்றாலும் அவரே மேயர் என அறிவித்திருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்யாமல் ஊர் மக்களை குழப்பி ஏமாற்றி அவர்களின் வாக்குகளை கொள்ளையடித்து விட்டு இப்போது பாரிய மன முரண்பாடுகளை இவ்விரு ஊர்களுக்குள் தோற்றுவித்துள்ளமை கண்டிப்புக்குரியதாகும்.
இவ்வாறான சுயநல வெறிபிடித்த ஒரு கட்சி கல்முனைக்குடி, சாய்ந்தமருது மக்களுக்கு தேவைதானா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
ஆக, முஸ்லிம் காங்கிரசின் சுயநல ஏமாற்று அரசியல்வாதிகளின் இந்த பித்தலாட்டங்களுக்குள் சாய்ந்தமருது கல்முனைக்குடி பொது மக்கள் தம்மை நுழைத்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்கும்படியும், மாற்றுக்கட்சிக்கான வழிவகைகளை சிந்திக்கும்படியும் முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

0 comments:
Post a Comment