• Latest News

    November 17, 2013

    அரசியலில் நிஸாம் காரியப்பரின் ஆளுமை எவ்வாறிருக்கும்?

    நிஸாம் காரியப்பர்
    சஹாப்தீன் ;
    கல்முனை மாநகர சபையின் புதிய மேயராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எதிர்வருகின்ற 18.11.2013 செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. கல்முனை மாநகர சபையின் அடுத்த இரண்டு வருடங்களுக்கு யார் மேயராக இருப்பதென்பதில் மு.காவின் தலைவருக்கும், மேயராக இருந்த சிராஸிற்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டு நிலை, ஓரவிற்கு சுமூகமாக முடிவடைந்துள்ளது. சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்த கடிதத்தினைப் பெற்றுக் கொண்டதனை ரவூப் ஹக்கிம் ஒரு வெற்றியாக கருதிக் கொண்டிருக்கின்றார்.
    மு.காவில் குளறுபடிகளுக்கும், முரண்பாடுகளுக்கும் பஞ்சமில்லை. வாக்குறுதிகளின் மீறல்களும் ஏராளம் இடம் பெற்றுள்ளன. ஆயினும், ரவூப் ஹக்;கிம் சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்தாக வேண்டுமென்று ஒரே பிடியில் நின்றமை எதற்காக என்பது பலருக்கு தெரியாத விடயமாகவே இருக்கின்றன. தலைவரின் அறிக்கைகளை பார்த்து மு.காவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் ஆடிப் போய் இருந்தார்கள் என்றுதான் சொல்லல் வேண்டும். ஆனாலும், ஏன் தவைர் இவ்வாறு இருக்கின்றார் என்று குழம்பிக் கொண்டிருந்தவர்கள்தான் மு.காவில் ஏராளமாகும்.
    ரவூப் ஹக்கிமின் தலைமைத்துவத்தில் நிஸாம் காரியப்பரும், அவரைச் சார்ந்த சிலரும் அதிருப்தி அடைந்தவர்களாகபவே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் கல்முனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மு.காவின் தலைமை கிழக்கில்தான் இருக்க வேண்டுமென்று நிஸாம் காரியப்பர் தெரிவித்திருந்தார். இவரின் இக்கூற்று கிழக்கு முஸ்லிம்களிடையே வரவேற்பையும் பெற்றிருந்தன.
    ஆதலால், நிஸாம் காரியப்பர் ரவூப் ஹக்;கிமின் தலைமைத்துவத்திற்கு எதிர் காலத்தில் ஒரு சவாக இருப்பார் என்ற எதிர் பார்ப்பு மு.காவில் பலருக்கும் இருந்து கொண்டிருக்கின்றன. நிஸாம் காரியப்பர் தலைவருக்கு சவாலாக அமைந்துவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாக ரவூப் ஹக்கிம் நிஸாம் காரியப்பரை புறக்கணித்துச் செயற்படுகின்றார் என்ற எண்ணம் நிஸாம் காரியப்பரைச் சார்ந்தவர்களிடம் இருக்கின்றன.
    இதே வேளை, சிராஸின் அண்மைக்கால நடவடிக்கைகளில் ரவூப் ஹக்கிம் அதிக அதிருப்பதியைக் கொண்டவராகவும் இருந்தார். சிராஸ் ஒவ்வொரு வாரமும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து, அதனை ஊடகங்களில் பிரபல்யப்படுத்திக் கொண்டும் இருந்தார். இவரின் சந்திப்புக்கள் எதுவும் கட்சியின் தலைவருக்கு தெரிந்திருக்கவுமில்லை.
    ஒரு கல்லில் இரு மாங்காய்களை அடிப்பதே ரவூப் ஹக்;கிம் நோக்கமாகும். ரவூப் ஹக்கிம் சிராஸின் அரசியலில் ஒரு நம்பிக்கையை வைத்திருந்தார் என்பதனையும்; சுட்டிக் காட்டவிரும்புகின்றேன்.
    இந்தப் பின்னணி இருக்கின்ற அதே வேளையில், மு.காவிற்குள் சிராஸின் அரசியல் வளர்ச்சியினை மட்டுப்படுத்துவதற்கும் சிலர் முயற்சி செய்கின்றார்கள். இன்னும் சிலர் நாடகமாடினார்கள். ஆனால், சிராஸினால் இவை எதனையும் புரிந்து கொள்ளக் கூடியவகையில் அரசியல் முதிர்ச்சியும், சாணக்கியமும் இருக்கவில்லை. 40 நாட்களில் மேயரான இறுமாப்பில் அவர் அதனை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டு பெருமை பேசிக் கொண்டிருந்தாரே அன்றி, தன்னைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருந்த அரசியல் சூழ்ச்சி நிலைப்படலத்தை புரிந்து கொள்ள அவரால் முடியவில்லை. இதனை சுட்டிக் காட்டக் கூடியவர்களும் அவரோடு இருக்கவில்லை என்பதும் பரிதாபமாகும்.
    ரவூப் ஹக்;கிமின் வேண்டுகோளில் மறைந்துள்ள அரசியல் தாப்பரியத்தினை சிராஸ் சரியாக விளங்கி இருந்தால் இராஜினாமாக் கடிதத்தினை உடனடியாக வழங்கி இருப்பார். ஆனால், சிராஸூம்,  அவரைச் சார்ந்தவர்களும் தங்களை படி இறக்கின்றார்கள் என்று சிந்தித்தார்கள். மாறாக, அதனால் மிகவும் இலகுவாக அரசியல் இலாபம் அடைந்து கொள்ளலாமென்று எண்ணவில்லை.
    சிராஸூம், அவரைச் சூழ்ந்து நின்ற ஆலோசகர்களும் சிராஸின் அரசியல் எதிரிகளைப் போன்றே சிந்தித்தார்கள். அவர்கள் எதிர் பார்த்திருந்தனையே செய்து கொண்டிருந்தார்கள். இதே வேளை, சிராஸின் மேயர் பதவியை பாதுகாத்துத் தருகின்றவர்களாக நாடகமாடியவர்கள், சிராஸை கொண்டு வந்து சந்தியில் நிறுத்திவிட்டு, மெல்லமெல்ல நழுவத் தொடங்கினார்கள். துணையாக நின்ற கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களும் ரவூப் ஹக்கிமின் எச்சரிக்கைக்கு அடங்கிப் போனார்கள். இந்நிலையில் சிராஸ் தாம் தனித்துவிடப்பட்டிருப்பதனை உணரத் தொடங்கினார். அப்போதுதான் 40 நாள் அரசியல் அனுபவம் இன்றைய அரசியல் நகர்வுகளை புரிந்து கொள்ளப் போதாதென்று உணரத் தொடங்கினார்.
    சிராஸிற்கு சிறந்த அனுபவமில்லை. அதே வேளை, அவரை சூழ்ந்து இருந்த ஆலோசகர்களில் அதிகமானவர்கள் சிராஸின் பொருளாதாரத்தையே நேசித்தார்கள். அவரின் அரசியலைப் பற்றி சிந்திக்கவில்லை. சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்தால், நமது கதி என்னவாகும் என்று அங்கலாயித்தார்கள். சிலர் சிராஸின் அரசியலை நேசித்தார்கள். ஆனால், எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.
    இத்தகையதொரு பின்னணியைக் கொண்டுள்ள சிராஸ் மேயர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தினை தலைவர் ரவூப் ஹக்;கிமிடம் வழங்கி கட்சியில் இருப்பதனை உறுதி செய்து கொண்டார். கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இருந்த நிஸாம் காரியப்பர் நாளை மறுநாள் மேயராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
    நிஸாம் காரியப்பர் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக மு.காவில் இருந்து கொண்டிருக்கின்றார். ஆனால், இது வரைக்கும் அவரின் கைகளில் அரசியல் அதிகாரம் கிடைக்கவில்லை. இதனால், சட்டத்துறையில் அவருக்குள்ள ஆளுமையையும, திறமையையும் அறிந்து கொண்டவர்களுக்கு, அரசியலில் அவரின் ஆளுமை எப்படி இருக்குமென்று அறிந்து கொள்ள இயலவில்லை.
    இப்போது நிஸாம் காரியப்பரின் அரசியல் ஆளுமையையும், திறனையும் மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நிஸாம் காரியப்பர் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார் என்பதிலேயே அவரின் அரசியல் எதிர் காலம் அமைந்துள்ளது. கல்முனை மாநகர சபையினை சிராஸை விடவும் சிறப்பாக செயற்படுத்த வேண்டும். இல்லையாயின் நிஸாம் காரியப்பரின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கைகள் யாவும் படிப்படியாக இழக்கப்பட்டுவிடும்.
    நிஸாம் காரியப்பரைப் பொறுத்தமட்டில் தமது சட்டத்தரணித் தொழிலில் எந்த நெழிவுசுழிக்கும் இடம் கொடுக்கமாட்டார். ஒரு மாதத்தின் அதிக நாட்களை கொழும்பிலேயே கழிப்பார். அவரின் அனைத்து நடவடிக்கைகளும் கொழும்பை மையப்படுத்தியே உள்ளன. உயர்மட்டத்தினருடனேயே அதிக உறவுகளைக் கொண்டிருப்பர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
    இவ்வாறு இருக்கின்ற நிஸாம் காரியப்பரினால் கல்முனை மாநகர சபையினை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்று பலரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். உள்ளுராட்சி சபையின் உறுப்பினர்கள், தலைவர்கள் என்போர்கள் மக்களோடு, மக்களாக செயற்பட வேண்டும். சிராஸ் மக்களோடு அதிக தொடர்புகளை வைத்திருந்தார். ஒரு மாதத்தில் குறைந்தது 15 நாட்களை கல்முனையிலேயே செலவு செய்துள்ளார். ஆகவே, நிஸாம் காரியப்பர் மேயர் பதவியை பெற்றுக் கொண்டததன் பின்னரும் அதிக நாட்களை கொழும்பில் செலவு செய்வாராயின், நிஸாம் காரியப்பரினால், மீண்டும் ஒரு தடவை மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவாரா என்பது முயலுக்கு கொம்பு முளைக்கும் கதையாகவே அமைந்துவிடும்.
    சிராஸிற்கும், கல்முனை மாநகர சபையில் உள்ள மு.காவின் அதிகமான உறுப்பினர்களுக்கும் இடையே சுமூகமான உறவுகள் இருக்கவில்லை. எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்களின் உதவியோடு வண்டியை ஓட்டிச் செல்ல முடியுமென்று சிராஸ் நம்பிக் கொண்டிருந்தார். ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் நல்ல உறவை பேணிக் கொள்வதில் சிராஸ் அதிக கரிசனை காட்டாது இருந்ததுள்ளார். ஆகவே, நிஸாம் காரியப்பர் மு.காவின் மாநகர சபையின் உறுப்பினர்களுடனும், எதிர்க்;கட்சி உறுப்பினர்களுடனும் இணைந்து செல்ல வேண்டும்.
    மேலும், சபையில் உள்ள தமிழ்த் தேசிய உறுப்பினர்களுடனும் நல்ல உறவை வைத்துக் கொள்ளல் வேண்டும். அத்தோடு, மேயர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கையோடு, 2014 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு தி;ட்டத்தையும் வரைய வேண்டியவராக நிஸாம் காரியப்பர் இருக்கின்றார்.
    ஆதலால், கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை பொறுப்பேற்கவுள்ள நிஸாம் காரியப்பர் அதிகம் உழைக்க வேண்டியுள்ளன. மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டியும் உள்ளன. இதே வேளை, சிராஸ் தொடர்ந்து அரசியலில் நிலைத்திருக்க வேண்டுமானால், மக்களுடனான தமது தொடர்பை பேணிக் கொள்ள வேண்டும். பதவி பறிபோய் விட்டதே என்று சோம்பிக் கிடந்தால், சிராஸினால் அரசியலில் தலையெடுக்கவும் முடியாது.
    2015ஆம் ஆண்டிற்கு இடையில் நாட்டில் பொதுத் தேர்தலொன்று இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இந்தப் பொதுத் தேர்தலில் ரவூப் ஹக்கிம் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட இருப்பதாக மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கொண்டு எரிச்சலடைந்து கொண்டிருக்கின்றார். இதற்காக ரவூப் ஹக்;கிம் சில முடிவுகளை எடுத்துக் கொண்டு செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
    எதிர் வருகின்ற பொதுத் தேர்தலை பொறுத்தவரை மு.கா அம்பாரை மாவட்டத்தில் தனித்தே போட்டியிடும். அவ்வாறு போட்டியிடும் போது, அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய முகங்களையும் தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கான திட்டங்களை ரவூப் ஹக்கிம் கொண்டுள்ளார். ஆதலால், பொதுத் தேர்தலில் மு.காவின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் சிராஸிற்கு இருக்கின்றன. அதற்கான காரியங்களை செய்ய வேண்டிய கட்டாயமும் சிராஸிற்கு இருக்கின்றன.
    மேயர் பதவியில் ஏற்பட்ட சர்ச்சையால் சிராஸின் செல்வாக்கு இறங்கு முகத்துடன் இருந்து கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுபட, சிராஸ் திட்டமிட்ட வகையில் செயற்பட வேண்டும்.
    நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (17.11.2013)



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசியலில் நிஸாம் காரியப்பரின் ஆளுமை எவ்வாறிருக்கும்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top