• Latest News

    November 17, 2013

    தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ரஸ்ய அழகிகளின் நடனம்: அகில இலங்கை உலமா சபை கண்டனம்

     ஏ.எம். சமீம்;

    இலங்கையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும் அம்பாரை மாவட்டத்தில், 90 வீதமான முஸ்லிம் மாணவர்களோடும், மிக அதிகமான முஸ்லிம் விரிவுரையாளர்கள், ஊழியர்கள் கடமைபுரியும் ஒலுவிலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 07ம் திகதி வியாழன் மாலை முழுக்க முழுக்க ரஷ்ய நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அந்நாட்டு இளம் பெண்களும், ஆடவர்களும் கலந்து நடனமாடிய நடன அரங்கேற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது.
    இந்நடன அரங்கேற்றம் பற்றி பல்கலைக் கழகத்தினுள் 2, 3 நாட்களாகவே பெரும் சலசலப்பு ஒன்று தோன்றியிருந்தது. பலரும் இது விடயத்தில் முகம் சுளித்துக் கொண்டதோடு, இஸ்லாமிய தஃவாவில் ஈடுபாடுடைய அனைவரும் இதை தடுத்து நிறுத்த தங்களாலான முயற்சிகளில் ஈடுபடலாயினர்.
    குறிப்பாக இலங்கையிலேயே இஸ்லாமிய கற்கைகளுக்காக உள்ள ஒரேயொரு பீடமான தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அறபு மொழிப்பீடத்தின் பீடசபை 06ம் திகதி நடைபெற்ற போது, ஒரு சிரேஷ்ட விரிவுரையாளரால் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டதோடு, இதை தடுக்க இப்பீடம் முயற்சிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    இதற்குப் பதிலளித்த அப்பீடத்தின் பீடாதிபதியும், அறபு மொழித்துறைத் தலைவரும் இது விடயமாக பல்கலைக் கழக உபவேந்தரிடம் கலந்துரையாடியதாகவும், அதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் உபவேந்தர் தமது வேண்டுகோளை அலட்சியம் செய்து விட்டதாகவும், அதற்குப்பிறகு இதுபற்றி எவ்வித ஆலோசனைக் கூட்டத்திற்கும் தம்மை அழைக்கவில்லை எனவும் கவலையுடன் தெரிவித்தனர்.
    இவ்விடயம் 04ம் திகதியிலிருந்தே அம்பாரை மாவட்டத்தின் தப்லீக் ஜமாஅத்தினர் மத்தியிலும், குறிப்பாக மாவடிப்பள்ளியிலுள்ள தப்லீக் மர்கஸின் மசூறா சபையிலும் கலந்துரையாடப்பட்டது. அப்போது மதிப்புக்குரிய அலியார் ஹஸரத் சற்று சுகவீனமுற்றிருந்ததால், அவரின் சார்பில் ஒருசில உலமாக்கள் பல்கலைக்கழக உபவேந்தரோடு தொடர்புகொண்டு கலந்துரையாடியதோடு, நடன அரங்கேற்றத்தை நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் உபவேந்தரோ நடனமாடும் அனைவரும் 12 வயதிற்குப்பட்ட சிறுவர்கள் எனவும், நமதூர் பாடசாலைகளில் நடக்கும் சிறுவர் நடனம் போன்ற ஒரு விடயமே எனவும் முடியுமானால் அந்த உலமாக்களையும் வந்து கலந்துகொள்ளுமாறும் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார். ஆலோசனையில் ஈடுபட்ட உலமாக்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாதிருந்தது.
    எப்படியிருப்பினும் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்கள், இஸ்லாமியப் பற்றுள்ள சில ஊழியர்கள் பல்கலைக்கழகத்திலுள்ள முஸ்லிம் மஜ்லிஸோடு இணைந்து எடுத்துக்கொண்ட முயற்சியினால் ஓரிரண்டு முஸ்லிம் மாணவர்கள், ஊழியர்களைத் தவிர எந்த முஸ்லிம்களும் இந்நடன அரங்கேற்றத்திற்கு சமுகமளிக்கவில்லை.
    இந்த விடயம் சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா சபையினரால் அகில இலங்கை உலமா சபைக்கு தெரிவிக்கப்பட்டு, அகில இலங்கை உலமா சபையின் செயலாளர் அஷ்-ஸெய்க் ஏ.எம்.முபாறக்(கபூரி) அவர்கள் ஏழாம் திகதி 4 மணிக்கு பல்கலைக்கழக உபவேந்தரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, உபவேந்தர் எடுத்த எடுப்பிலேயே தான் ஒரு முக்கிய கூட்டத்தில் இருப்பதாகவும், பின்னர் தான் தொடர்பு கொள்வதாகவும் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். அன்று 5 மணிக்கு நடன அரங்கேற்றம் ஆரம்பமாகவிருந்ததால் அகில இலங்கை உலமாசபை செயலாளர் உடனடியாக ஒரு கண்டன அறிக்கையைத் தயாரித்து உபவேந்தருக்கும், பல்கலைக்கழக பதிவாளருக்கும் தொலைநகலில் அனுப்பிவைத்தார். இவை எதுவும் செயலிழந்த நிலையில் திட்டமிட்டபடி நடன அரங்கேற்றம் சுமார் 3 மணித்தியாலங்கள் மாணவர் நலன்புரி பிரதான மண்டபத்தில் நடந்து நிறைவுபெற்றது.
    ரஷ்ய சிறுமிகளின் நடனம் என்றே விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால், ஒருசில பல்கலைக்கழக ஊழியர்கள் தமது பிள்ளைகளையும் அழைத்துச் சென்றிருந்தனர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக வயது வந்த ரஸ்ய ஆண், பெண் ஆடவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தும், தூக்கிப்பிடித்தும் நடனமாடியதால், தாம் அழைத்துவந்த தமது குழந்தைகளோடு நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதில் கூச்சப்பட்டு, கவலைப்பட்டதாக அறிய முடிகிறது.
    பொதுவாக பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கை, அறபு மொழிப்பீட பீடாதிபதி, துறைத்தலைவர், சம்மாந்துறை உலமாக்கள், அகில இலங்கை உலமா சபையினர் என பல தரப்பிலும் இந்த நடன நிகழ்ச்சியை நிறுத்துமாறு எடுத்துக்கூறியும் உபவேந்தரால் அவ்வாறு நிறுத்த முடியாமல் போனதன் மர்மம் என்ன? வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் இந்த நடன நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக இப்பல்கலைக் கழகத்தில் இவ்வாறான இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு மாற்றமான ஆண்பெண் கலப்பு வைபவங்களையும், இசை நடன நிகழ்சிகளையும் நடாத்தி முஸ்லிம் மாணவர்களினதும், விரிவுரையாளர்கள், ஊழியர்களினதும் மனக்கிலேசத்தை தோற்றுவித்துள்ளனர். மாணவர்களில் சுமார் 65 வீதமானவர்கள் முஸ்லிம் பெண் மாணவிகள் என்பதுடன், இங்கு இஸ்லாமிய விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதில் இப்போது கேள்விக்குறி எழுந்துள்ளது.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ரஸ்ய அழகிகளின் நடனம்: அகில இலங்கை உலமா சபை கண்டனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top