எஸ்.அஷ்ரப்கான்
கல்முனை ஜும்ஆ பள்ளிவாயல் வீதியை செப்பனிடும் பணி மிகவும் மந்த கதியில் நடைபெறுவதால் இவ்வீதி மக்கள் பாரிய அசெகரியங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. கல்முனை பிரதேச செயலாளருக்கு முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் மௌலவியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசின் வீடு அமைந்துள்ள கல்முனைக்குடியின் பிரபல்யமான மேற்படி வீதி மிக நீண்ட காலமாகவே அபிவிருத்தி செய்யப்படாமல் அலங்கோலமாக இருந்தது. இந்த வீதியை அவசரமாக திருத்தித்தாருங்கள் என எமது கட்சி பல தடவை அரசாங்கத்தை வேண்டியுள்ளது. இந்த நிலையில் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் அக்கறை காரணமாக இந்த வீதியை திருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
அதனை பிரதான வீதியிலிருந்து ஆரம்பித்த போது அது தடுக்கப்பட்டது. பின்னர் இவ்வீதி கடற்கரை பக்கத்திலிருந்து அதன் திருத்தம் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இவ்வீதித் திருத்தம் என்பது கடந்த ஒரு வருடமாக ஏனோ தானோ என நடைபெறுகிறது.
அத்துடன் புறாக்கூட்டுச்சந்தியிலிருந்து கூப்பிடு தொலைவில் முடியக்கூடிய இவ்வீதியின் மிகுதிப்பகுதியை திருத்துவதற்காக கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் ஓர் அடி ஆளத்தில் தோண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டுரிமையாளர்களால் தமது வாகனங்களை மட்டுமல்ல மோட்டார் சைக்கிள்களைக்கூட தமது வீடுகளுக்குள் கொண்டு செல்ல முடியாமல் தவிப்பதையும் வயோதிபர்கள் பாரிய சறுக்கல்களுக்கு முகம் கொடுப்பதையும் காண முடிகிறது.
இவ்வாறு ஏனோ தானோவென வீதி திருத்தம் நடைபெறுவது என்பது வேண்டுமென்றே நடைபெறுகிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ளது. இனி ஒரு தடவை இவ்வாறு வீதி திருத்தம் பற்றியெல்லாம் கேட்டால் இதுதான் தண்டனை என்பது போல் காரியங்கள் நடைபெறுவதாகவே தெரிகின்றன.
பொது மக்களின் வரிப்பணத்தின் மூலம் வீதிகள் திருத்தப்படுகின்றனவே தவிர அரசியல்வாதிகளின் சொந்தப்பணத்தினால் திருத்தப்படுவதில்லை என்பதை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதனை கருத்திற்கொண்டு மிக விரைவாக இவ்வீதி திருத்தத்;தை முடித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவ தாங்கள் நடவடிக்கை எடுக்கும்படி முஸ்லிம் மக்கள் கட்சி தங்களை கேட்டுக்கொள்கிறது

0 comments:
Post a Comment