
கடந்த வெள்ளிக்கிழமை, குடிதண்ணீர் குழாய் இணைப்பு வேலைகளுக்காக மன்னார் திருக்கேதீஸ்வரத்தை அண்டிய பகுதிகளில் வீதியின் அருகே மண்ணைத் தோண்டிய போது அங்கு மனித மண்டை யோடுகள், மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெற்றன.
கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களும் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் வேகமாக இடம்பெற்றன. இதன் மூலம் இங்கு புதைக்கப்பட்டிருந்த 11 மண்டையோடுகள், எலும்புகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் நேற்றுப் புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் திடீரென்று அது நிறுத்தப்பட்டது.
அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியும் நேற்றுப் புதைகுழி தோண்டும் பகுதிகளுக்கு வந்து மீட்கப்பட்ட பொருள்களை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகின்றது.
கொழும்பிலிருந்து விசேட சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினர் வருகை தந்துஇ அவர்கள் முன்னிலையிலேயே அது தோண்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தோண்டப்பட்டு வரும் குழியின் அருகாகச் செல்லும் வீதியின் கீழேயும் மனித எச்சங்கள் காணப்படுவதால் வீதியைக் கிளறி எச்சங்களை மீட்க வேண்டிய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதி 1990 ஆம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததெனவும், அதன் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment