பி.எம்.எம்.ஏ.காதர்;
பேரினவாத சக்திகளுடன் இணைந்து கல்முனையை இன ரீதியாக கூறுபோட்டு இப்பகுதி தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
'கல்முனைப் பிரதேசத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பல்லாண்டு காலமாக மிகவும் ஒற்றுமையுடன்- அன்னியோன்னியமாக வாழ்ந்து வருகின்ற சூழ்நிலையில் தமிழ் பிரதேச செயலகம் என்ற போர்வையில் இரு சமூகத்தினரையும் பிரிக்க எத்தனிப்பது மிகவும் கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய விடயமாகும்.
பேரின சக்திகள் மூக்கை நுழைத்திருப்பது ஏன்?
கல்முனைப் பிரதேசத்தைப் பொறுத்தமட்டில் இங்குள்ள தமிழ், முஸ்லிம் ஊர்கள் யாவும் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தே காணப்படுகின்றன.
இவ்வாறு தமிழ் கிராமங்கள் நிலத் தொடர்பற்று காணப்படுகின்ற நிலையில் உத்தேச தமிழ் பிரதேச செயலகத்திற்கு முஸ்லிம் பகுதிகள் சிலவற்றையும் உள்ளடக்கி எல்லையிட முற்படுவதானது இவ்விரு சமூகத்தினர் மத்தியில் முரண்பாடுகள் உருவாக வழி வகுப்பதோடு எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம் என அஞ்சுகிறோம்.
இது விடயத்தில் பேரினவாத சக்திகள் மும்முரமாக நிற்பதன் பின்னணி என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கூட அதற்கு சார்பாக செயற்படுவதானது முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளான எம்மை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒன்றிணைந்து சிறுபான்மைச் சமூகத்தினரின் பிரச்சினைகளுக்காக கூட்டாக குரல் எழுப்புகின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் பேரினவாத சக்திகளும் அரசாங்கமும் முண்டியடித்துக் கொண்டு செயற்படுவதன் நோக்கம் இரு சமூகங்களையும் நிரந்தரமாக பிரித்து விட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
தமிழ் சமூகத்தினருக்காக குரல் கொடுக்கும் மு.கா.
தமிழ் சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் சர்வதேச மட்டத்திலும் குரல் கொடுத்து வருகின்றார். இத்தகைய ஒரு அரசியல் தலைமையை தமிழ் கூட்டமைப்பும் கல்முனை வாழ் தமிழ் சகோதரர்களும் நம்ப முடியாதா? இத்தகைய ஒரு தலைமையிடம் கல்முனை விவகாரத்த்ற்கு தீர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?
13ஆவது திருத்த சட்டம் மற்றும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இந்த அரசாங்கம் இல்லாதொழிக்க முற்பட்ட போது அதற்கெதிராக எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் அமைச்சரவையில் தனித்து நின்று குரல் எழுப்பி- தடுத்து நிறுத்தியதையும் எமது கட்சித் தீர்மானத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண சபையில் 13ஆவது திருத்த சட்டம் மற்றும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பலப்படுத்தும் பிரேரணை ஒன்று என்னால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதையும் தமிழ் கூட்டமைப்பு இலகுவில் மறந்து முடியாது.
இந்த விடயங்கள் சாதாரணமாக இடம்பெற்றவையல்ல. மத்திய அரசாங்கத்திலும் கிழக்கு மாகாண சபையிலும் அரசாங்க பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டே பல்வேறு அழுத்தங்கள், நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் எதற்கும் அஞ்சாமல், அடிபணியாமல் தமிழ் சமூகத்தின் முதுகெலும்பான 13ஆவது திருத்த சட்டத்தை நாம் போராடி காப்பாற்றியிருக்கிறோம்.
தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைகள் விடயத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புகளையும் செய்யாமல், விடாப்பிடியாக நின்று எமது மு.கா. போராடுவதன் காரணமாகவே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸை அரசு மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நடத்துகிறது என்கின்ற கசப்பான உண்மையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
ஆனால் இவற்றை சற்றும் கணக்கில் எடுக்காதது போன்று ஓர் அற்ப விடயத்துக்காக முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு இன்று முற்பட்டிருப்பது ஏன்?
முஸ்லிம்களை கொன்றொழித்த புலிகளுக்கு நடந்தது என்ன?
அன்று புலிகள் இயக்கத்தினர் முஸ்லிம்களின் உயிர், உடைமைகள் மற்றும் பொருளாதாரத்தை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர்.
வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றி- இனச் சுத்திகரிப்பு செய்தனர். காத்தான்குடி பள்ளிவாசல்களில் புகுந்து தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை சுட்டுப் படுகொலை செய்தனர். ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தானை போன்ற பகுதிகளில் நடுநிசியில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்தனர். அத்துடன் நாளாந்தம் அங்கும் இங்குமாக முஸ்லிம்கள் கடத்தப்பட்டு- கொல்லப்பட்டு வந்தனர்.
இவ்வாறு புலிகளின் பிடிக்குள் சிக்குண்டிருந்த முஸ்லிம்கள் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் இறைவனிடமே அதனை பாரம்சாட்டினர். இறுதியில் புலிகள் கூண்டோடு அழிக்கப்பட்டிருந்தனர். புலிகள் மேற்கொண்ட இத்தகைய பிழையான செயற்பாடுகளால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் போராட்டமும் தோற்கடிக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு வந்துள்ளது.
அது போன்றே இன்று கல்முனையை கூறுபோட்டு முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் வகையில் தமிழ் கூட்டமைப்பு செயற்படுமாயின் பின்னொரு காலத்தில் தமிழ் சமூகம் வருந்த வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
வரலாற்றுத் தவறு!
கல்முனையை இன ரீதியாக கூறுபோட்டு- முஸ்லிமகளின் பகுதிகளையும் அபகரிப்பதற்கு பேரின சக்திகளின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தமிழ் கூட்டமைப்பு துணை போகுமாயின் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் பெரும் துரோகம் மட்டுமல்ல வரலாற்றுத் தவறாகவும் அமையும் என்பதை கூட்டமைப்பின் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் சமூகத்தின் இன்றைய அரசியல் ரீதியான சாத்வீகப் போராட்டங்களுக்கு முழு மனதுடன் அனுசரணையாக இருந்து வருகின்ற முஸ்லிம் காங்கிரஸை அதிலிருந்து தூரப்படுத்தும் முயற்சிகளுக்கு தமிழ் கூட்டமைப்பு துணை போய் விடக் கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.
கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு நிர்வாக ரீதியான பிரச்சினைகள் ஏது இருந்தால் அது குறித்து தமிழ்- முஸ்லிம் தரப்புகள் இரண்டும் ஒரே மேசையில் இருந்து பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர அதனைத் தீர்த்து வைக்கும் கடிவாளத்தை பேரின சக்திகளிடம் கையளித்து விட்டு தமிழ்இ முஸ்லிம் சமூகத்தினரின் எதிர்கால இருப்பைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க கூடாது.
தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகள் நடத்த முடியுமாயின் ஏன் கல்முனை விவகாரம் தொடர்பில் இரு தரப்பினரும் மனம் விட்டு பேசித் தீர்வு காண முடியாது?
பேசித் தீர்ப்போம் வாருங்கள்!
இவ்விடயத்தில் தமிழ்- முஸ்லிம் சமூகங்களை பிரித்தாள முற்படும் பேரின சக்திகளின் கையிற்றை விழுங்கிக் கொண்டு தமிழ் கூட்டமைப்பு செயற்படுவதன் மர்மம் என்ன? அதன் பின்னால் உள்ள ஆபத்தினை தமிழ் கூட்டமைப்பு உண்மையில் புரிந்து கொள்ளவில்லையா?
இந்த விடயத்தில் இரு தரப்பினரும் கூடிப் பேசி தீர்வு காணா விட்டால் தமிழ்- முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் படுகுழியில் வீழ்ந்து- எவ்வித அதிகாரங்களும் அற்ற சமூகத்தினராக மாற வேண்டிய ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்று ஆணித்தரமாகக் கூறி- எச்சரிக்கின்றேன்.
-
ஆகையினால் கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளைக் கைவிட்டு- உடனடியாக முஸ்லிம் காங்கிரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தீர்வு காண்பதற்கு தமிழ் கூட்டமைப்பும் கல்முனை வாழ் தமிழ் சகோதரர்களின் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்' என்று ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்

0 comments:
Post a Comment