• Latest News

    December 22, 2013

    இப்படியும் நடக்கிறது!

    யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அடிக்கடி சைக்கிள்கள் திருடிச் செல்லப்படுகின்றன. எனினும் அவை மீட்கப்பட்டதாகவோ திருடர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை என மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
    இதேவேளை, யாழ்.கந்தர்மடம் பகுதியில் அண்மையில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றது. இளைஞரொருவர் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து வந்துக் கொண்டிருந்த சமயம் நபரொருவர் கொச்சைத் தமிழில், தான் அவசரமாக கொழும்புக்கு செல்ல வேண்டுமெனவும், தயவு கூர்ந்து தன்னை யாழ்ப்பாணம் பஸ் நிலையமருகில் கொண்டு சென்று இறக்குமாறும் மன்றாடியுள்ளார். முதலில் மறுத்த குறித்த இளைஞன், பின்னர் பாவம் எனக் கருதி அந்த நபரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டுள்ளார்.
     
    யாழ்ப்பாண பஸ் நிலையத்தை அடைந்ததும் அப்பகுதியில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலையொன்றுக்கு சைக்கிளை கொண்டு செல்லுமாறு கூறிய அந்த நபர் அங்கு சென்று சைக்கிள் நிறுத்தப்பட்டவுடன் சைக்கிளை விட்டுவிட்டுப் போகுமாறு கூறியுள்ளார்.
     
    இளைஞனோ, அவ்வாறு செய்ய முடியாது என கூறியதும் அந்த நபர் சைக்கிளை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
     
    அதேவேளை, அந்த இளைஞன் திடீரென சைக்கிளை பூட்டி சாவியைக் கையில் எடுத்துள்ளான். இதனையடுத்து அந்த நபர் கைதொலைபேசியூடாக மேலும் இருவரை உதவிக்கழைத்துள்ளான். அவர்களும் வந்து சேர்ந்தவுடன் குறித்த இளைஞருக்கும் மூவருக்கும் இடையில் பெரும் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.
     
    அதேவேளை, இளைஞன் பொலிஸாருடன் தொடர்பு கொண்ட போதிலும் அதற்கு உரிய பதில் கிட்டவில்லை.
     
    இதன் தொடர்ச்சியாக அந்த மூவரின் தாக்குதலில் காயமுற்ற இளைஞன் சைக்கிளை அந்த இடத்தில் விட்டுவிட்டுத் தமக்கு அறிமுகமான மன்னார் பொலிஸாருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளான்.
     
    அவர்கள் யாழ்.பொலிஸாருக்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதையடுத்து அங்கு விரைந்த யாழ்.பொலிஸார், சம்பவத்தோடு தொடர்புடைய நபர்களை அடையாளம் காட்டுமாறு கோரியுள்ளனர்.
     
    இளைஞர் அடையாளம் காட்டிய போதும் அவர்கள் மறுத்துள்ளனர்.
     
    இதன் தொடர்ச்சியாகப் பொலிஸார் அவர்களுடன் சற்றுக் கண்டிப்பாக நடந்துள்ளனர். இந்நிலையில், அங்கே அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலைக்கு சமீபமாகவுள்ள பற்றைக்குள் மூன்று சைக்கிள்கள் அநாதரவாகப் போடப்பட்டு காணப்பட்டன.
     
    அந்த மூன்று சைக்கிள்களில் குறித்த அந்த இளைஞனின் சைக்கிளும் ஒன்றாகும். உடனே அந்த இளைஞன் தனது சைக்கிளை அடையாளம் காட்டி அதனை மீட்டுக்கொண்டான்.
     
    சற்றுத் துணிவுள்ள இளைஞன் என்ற காரணத்தினால் தனது சைக்கிளை மீட்டுக்கொண்டான். இவ்வாறு எத்தனை பேர் பரிதாபப்பட்டு உதவப்போய் இறுதியில் அனைத்தையும் இழந்தார்களோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
    Kesari-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இப்படியும் நடக்கிறது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top