பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் மாஜி அதிபர் முஷாரப் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் புதிய விசாரணை எதுவும் கிடையாது என்று நவாஸ் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கடந்த 2007ம் ஆண்டு பர்வேஸ் முஷாரப் ஆட்சியின் போது ராவல்பிண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முஷாரப் உள்பட பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு போலீஸ் உயர் அதிகாரிகள் மீது கொலை சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை தெஹ்ரிக், தலிபான் இயக்கத்தினர் நடத்தியிருக்கலாம் என்ற குற்றசாட்டும் உள்ளது. இந்நிலையில் பெனாசிர் புட்டோ நினைவு தினம் நேற்று பாகிஸ்தான் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் தொடர்பு துறை அமைச்சர் பர்வேஸ் ரஷீத் கூறுகையில், பெனாசிர் கொலை தொடர்பாக ஏற்கனவே நான்கு கட்ட விசாரணை நடைபெற்றுவிட்டது.முதலில் ஒருங்கிணைந்த குழு விசாரணையும், இரண்டாவதாக ஸ்காட்லாந்துயார்டும்இ மூன்றாவதாக ஐநா குழுவினரும், நான்காவதாக பாகிஸ்தான் சிறப்பு புலனாய்வு படையினரும் விசாரணை நடத்தினர். எனவே இந்த வழக்கில் தனியாக புதிய விசாரணை மேற்கொள்ளும் திட்டம் எதுவும் பாகிஸ்தான் அரசுக்கு கிடையாது. மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் நீதிமன்ற முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

0 comments:
Post a Comment