• Latest News

    December 19, 2013

    கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க (MPCS ) நிர்வாகத்தின் கீழ் தம்மைக் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கல்முனை நகர வாழைப்பழ வியாபாரிகள் எதிர்ப்பு!

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க (MPCS ) நிர்வாகத்தின் கீழ் தம்மைக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கல்முனை நகர வாழைப்பழ வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    நேற்று புதன்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்படி வியாபாரிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

    ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற்திட்டத்தின் பிரகாரம் கல்முனை மாநகர வர்த்தக சமூகத்தினரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இக்கலந்துரையாடலில் மாநகர ஆணைடாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எல் ரீ.சாலிதீன், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், முதல்வரின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.சத்தார் ஆகியோர் உட்பட கல்முனை நகர வாழைப்பழ வர்த்தக சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    இதன்போது கல்முனை நகர வாழைப்பழ வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு- சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

    நீண்ட காலமாக கல்முனை நகரில் வாழைப்பழ கடைத் தொகுதியில் வர்த்தகத்தில் ஈடுபடும் எம்மை தற்போது கல்முனை மாநகர சபையில் இருந்து விடுவித்து- கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் மாற்றியமைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுவதாக சுட்டிக் காட்டிய வாழைப்பழ வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், அது விடயத்தில் தமக்கு இணக்கம் இல்லை எனவும் தாம் தொடர்ந்தும் கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழேயே செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டனர்.

    அதேவேளை எதிர்காலத்தில் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எமக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் முதல்வர் மேற்கொள்ளும் எத்தகைய தீர்மானத்திற்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

    அத்துடன் 34 வாழைப்பழ கடைகள் அமைந்துள்ள வீதி இரவு நேரத்தில் இருட்டில் மூழ்கியுள்ளதாக தெரிவித்த வாழைப்பழ வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், அக்குறைபாட்டை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை முதல்வர் நிசாம் காரியப்பர் பணித்தார்.

    அதேவேளை இவ்வாழைப்பழ கடைகளுக்கு மாதாந்த வாடகையாக 350 ரூபாவும் வருடாந்த வியாபார அனுமதிப் பத்திரத்திற்காக 800 ரூபாவும் அறவிடப்படுவதாக சுட்டிக்காட்டிய அதிகாரிகள், இவற்றை செலுத்துவதில் குறித்த வியாபாரிகள் கரிசணை காட்டுவதில்லை என கவலை தெரிவித்தனர்.
    இதனைத் தொடர்ந்து 2012, 2013 ஆம் ஆண்டுகளுக்கான கடை வாடகை நிலுவைகளை உடனடியாக மாநகர சபைக்கு செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன் அதற்கு முன்னர் நீண்ட காலமாக செலுத்தப்படாமல் இருக்கும் கடை வாடகை நிலுவைகளில் 45 வீதத்தை தள்ளுபடி செய்வதற்கு முதல்வர் இணக்கம் தெரிவித்தார்.

    அத்துடன் வாழைப்பழ கடைகளுக்கு வருடாந்த வியாபார அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையை தமது சங்கத்திற்கு ஊடாக மேற்கொள்ளுமாறு சங்கப் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையையும் முதல்வர் ஏற்றுக் கொண்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க (MPCS ) நிர்வாகத்தின் கீழ் தம்மைக் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கல்முனை நகர வாழைப்பழ வியாபாரிகள் எதிர்ப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top