• Latest News

    December 19, 2013

    தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைய சதிமுயற்சி

    தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைய சதிமுயற்சி மேற்கொள்ளப்படுவதாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தினை என்னால் பார்க்க முடிகின்றது. இது தொடர்பாக அண்மையில் கல்முனை மாநகர சபை த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் நால்வரும் இணைந்து விட்டிருக்கும் ஒரு அறிக்கையை பார்க்கும்போது வெறுமனே இனங்களை மூட்டிவிடும் செயலுக்கு துணை போனதாக தெரிகிறது.

    கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தொடர்பில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும், தெரிவித்துள்ளதாவது,

    கரவாகு தமிழர்களின் பூர்வீகம் என்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் அறிக்கைகளில் தமிழ்மக்களின் உணர்வுகளை தூண்டிப்பார்க்க முயல்கின்றனர். இந்த அரசியல்வாதிகள் அனைவரும் இதற்கு முன்னர் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற பதத்தினையே பயன்படு;த்தி வந்தனர். அத்துடன் தற்போது இயங்கிவரும் தமிழ் பிரதேச செயலகத்தின் பெயர்ப்பலகை பிரதேச செயலகம் - கல்முனை தமிழ் பிரிவு என்றே எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு மத்தியில் துவேசத்தினையும் வெறுப்பினையும் அதிகரிப்பதற்காக பொய்யான வரலாற்றுக் கதைகளை கூறிக்கொண்டு வருகின்றனர். கரவாகு என்பது ஒட்டுமொத்த கல்முனை தொகுதிக்கென சூட்டப்பட்ட நாமம். இதில் நீலாவணை, பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு ஆகிய தமிழ் முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கடக்கியதான கரவாகு வடக்கு கிராம சபை என்றும், துறவந்தியமேடு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை முஸ்லிம், நற்பிட்டிமுனை தமிழ்,  மணற்சேனை ஆகிய தமிழ், முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கடக்கியதான கரவாகு மேற்கு கிராம சபை என்றும், கல்முனை தமிழ், கல்முனை முஸ்லிம், இஸ்லாமபாத், கல்முனைக்குடி ஆகிய தமிழ் முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கடக்கியதான கல்முனை பட்டினசபை என்றும் சாய்ந்தமருதை உள்ளடக்கியதான கரவாகு தெற்கு கிராம சபை என்றுமே வழங்கப்பட்டு வந்துள்ளன.

    இதில் சாய்ந்தமருது தவிர்ந்த ஏனைய மூன்று உள்ளுராட்சி மன்றங்களும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்த ஆட்சியினையே மேற்கொண்டிருந்தனர். கரவாகு மேற்கு கிராம சபையினை தமிழர்களே ஆட்சி செய்திருக்கின்றனர். கல்முனை பட்டின சபையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த எம். தம்பிப்பள்ளை அவர்களும் தவிசாளராக ஆட்சி செய்திருக்கின்ற அதே வேளை கல்முனை தொகுதியை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த ஒரே ஒரு பிரதேச செயலகமே காணப்பட்டுவந்ததுதான் வரலாறு. இவ்வாறு இருக்கும் வரலாற்றினை திரிவுபடுத்தி மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை சொல்ல முனைவது கண்டிக்கத்தக்க விடயமாகும். மட்டுமல்லாது முஸ்லிம்கள் வரலாறு தெரியாதவர்கள் என்று கருதுவதற்கு ஒப்பானதாகும்.

    அன்றைய காலகட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு இன்றுள்ள சந்ததிகள் பொறுப்புக் கூறவோ பழிவாங்கவோ முடியாது. தமிழர்கள் முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகளை சொல்லிக்கொண்டு போனால் அது பெரும் துயரங்களை கொண்டதாக காணப்படும். தமிழர்களுக்கு ஒரு சலுகையோ அல்லது தனியான பிரதேச செயலகமோ வழங்குவதை முஸ்லிம் மக்களோ முஸ்லிம் அரசியல்வாதிகளோ ஒருபோதும் தடுக்கப்போவதில்லை. கல்முனை மாநகர சபையில் கல்முனையைப்பற்றி பேசுவதற்கு எவருமே எத்தனித்ததில்லை என்ற உண்மையை இச்சந்தர்ப்பத்தில் சொல்லவேண்டியுள்ளது.

    அதேவேளை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தொடர்பிலான எந்த ஒரு கலந்துரையாடலோ அறிவித்தலோ இல்லாமல் கல்முனைக்கு வெளியில் உள்ள அரசியல்வாதிகள் கல்முனையில் இருக்கும் முஸ்லிம்களின் நிலங்களையும், உடமைகளையும் உள்ளடக்கியதான தமிழ் பிரதேச எல்லையை பூகோலத்திற்கு புறம்பான வகையில் வரைந்திருப்பதையே ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. இது விடயமாக இரு சமூகங்களும் பேசி ஒரு தீர்க்கமான முடிவினை எட்டவேண்டும் என்பது இன்றை அசாதாரண சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.

    முஸ்லிம்களுக்கு கீழ் தமிழர்களால் வாழ முடியாது என்று சொல்லிக்கொண்டு நிலத்தொடர்பில்லாத கல்முனைக்குடியையும் மருதமுனையையும் கடல்வழியில் இணைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவ்வாறானால் இஸ்லாமபாத் கிராம முஸ்லிம் மக்களும் நற்பிட்டிமுனை முஸ்லிம் மக்களும் எவ்வாறு ஒரு தமிழ் பிரதேச செயலகத்திற்கு கீழ் வாழ்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    மேலும் காரைதீவு பிரதேச சபை உருவாக்கத்திற்கு மாவடிப்பள்ளி மற்றும் மாளிகைக்காடு கிராமங்களை சேர்ந்த 40வீதமான முஸ்லிம்களை உள்ளடக்கியதனாலேயே அப்பிரதேச சபை கிடைத்துள்ளது. அதேபோல் நாவிதன்வெளி பிரதேச சபைக்குள் முஸ்லிம் கொலணிகள், மத்தியமுகாம் ஆகிய கிராமங்களில் உள்ள 35வீதமான முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ்களால் ஆளப்படுவது எவ்வகையில் நியாயமாகும்?

    தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு இடையில் உள்ள உறவினை சீர்குழைப்பதற்காக பேரின சமூகத்தின் அருவடிகளாகச் செயற்படுகின்றவர்கள் முன்னர் பொதுபலசேனாவினை கொண்டுவர முயற்சித்தனர் பின்பு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் பெற்றுக் கொடுப்போன் என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றனர். இந்த வலையில் ஒரு சில த.தே. கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிக்கிக்கொண்டு செயற்படுகின்றனர்.

    கல்முனையில் உள்ள இன ஒற்றுமையை சீர்குழைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளும் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முனைகின்றனர். இந்த செயற்பாட்டுக்கு கல்முனை மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது.

    கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கு கொடிபிடிக்கும் பௌத்த தேரர் நாளை கல்முனையில் ஒரு புத்தர் சிலையை வைக்க வேண்டும் என கொடி பிடிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம். இவர்கள் வடக்கில் முஸ்லிம்களின் காணி எல்லை விவகாரங்களில் முஸ்லிம்களின் பக்கமும், கல்முனையில் தமிழர்களின் பக்கமும் நின்றுகொண்டு நாடகமாடிக்கொண்டு நிற்கின்றார்கள். இவர்களின் நோக்கம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் நிரந்தர எதிரிகளாக மாற்றுவதே ஆகும் என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    கல்முனை மாநகர சபையில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் கல்முனை மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள்?  கல்முனை மாநகர சபையில் தமிழ் மக்களுக்கான இன விகிதாசார சலுகைகளை பெற்றுக்கொண்டு சென்று கல்முனை தமிழ் மக்களுக்கு என்ன சேவைகளை செய்திருக்கிறார்கள் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

    இவ்வாறானவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு சிக்குண்டு தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுத்துவது மாபெரும் வரலாற்றுத்தவறிலேயே கொண்டு சேர்த்துவிடும் என்பது திண்ணம். இது பேரின சமூகத்தில் பாரிய திட்டமிட்ட சதி என்பதை தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் நன்கு புரிந்து செயல்படும் தருணம் இது என்பதை உணர்துகொள்ளவேண்டும். இதுதொடர்பான முடிவுகளை எட்ட தமிழ் – முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புக்கள் மற்றும் அனைத்து சாராரும் ஒரே மேசையில் இருந்து பேசிக்கொள்வது ஆரோக்கியமானதாகும்.
    ஏ.எம். பரக்கத்துல்லாஹ்,
    கல்முனை மாநகர சபை உறுப்பினர்,
    அம்பாறை மாவட்ட ஸ்ரீ.ல.மு.க. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைய சதிமுயற்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top