சுலைமான் றாபி;
இன, மத, மொழிகடந்து இளைஞர்களுக்கு வாழ்க்கைத்தொழில் தேர்ச்சிக் கல்வியினை
தங்களின் ஆற்றல்கள் மூலம் கற்றுக்கொண்டு சிறந்த தொழில்களைப் பெற்றுக்
கொள்வதற்காக ஒரு தளமாகக் காணப்படும் நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி
நிலையத்தினை அம்பாறைக்கு கொண்டுசெல்வதற்கான முஸ்தீபுகள் இடம்பெறும் வேளை,
இந்த விவகாரத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஒன்றியம் எதிர்வரும் 29ம் திகதி இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினை சந்திக்கவுள்ளதாக அவ்வொன்றியத்தின் தலைவரும்
இளைஞர் பாராளுமன்ற புத்தாக்க அமைச்சருமான MI அன்வர் சதாத், ஊடக மற்றும்
தகவல் தொழில் நுட்ப அமைச்சரும் ஒன்றியத்தின் செயலாளருமான SLM ஷாபி ஆகியோர்
கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இளைஞர் களின் தொழில் பயிற்சி வரிசையில் இந்த தொழில் பயிற்சி நிலையம்
மூலமாக கடந்த காலங்களில் கணிசமான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்
இடம்பெற்றுள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பம், மின்னியியல்துறை , தச்சு,
மேசன், குழாய் நீர் பொருத்துதல் இன்னும் இதர பயிற்ச்சி நெறிகள் மூலம்
அதிகமான இளைஞர் யுவதிகள் தங்களுக்கென்று தகுதியான துறைகளை தெரிவு செய்து
நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொழில் புரிந்து வருகின்றனர்.
இளைஞர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட இந்த தொழில் பயிற்சி நிலையமானது
அவர்களுக்கே பயனற்றுப்போகுமாக இருக்குமானால் ஒட்டுமொத்த இளைஞர்களின்
வாக்குப் பலத்தினால் கிடைத்த இளைஞர் பாராளுமன்றப் பதவிகளையும், அதன்
கதிரைகளையும் சூடாக்குவதில் அர்த்தம் இல்லை. அரசியல்: சமூகங்களுக்காக
உருவாக்கப்பட்டதே தவிர, அரசியலுக்காக சமூகங்கள் உருவாக்கப்படவில்லை!
அவ்வாறு உருவாக்கவும் முடியாது! எனவே இந்த தொழில் பயிற்சி நிலைய
விவகாரத்தில் தங்களது அமைச்சுப் பதவிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்
பதவிகளையும் தூக்கி எறிய தயார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சந்திப்பில் இளைஞர் பாராளுமன்ற சபை
முதல்வர் UL சபீர், புத்தாக்க அமைச்சர் MI அன்வர் சதாத், ஊடக மற்றும் தகவல்
தொழில் நுட்ப அமைச்சர் SLM ஷாபி மற்றும் அம்பாறை மாவட்ட அனைத்து இளைஞர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் மகஜர்
ஒன்றினை கையளிக்கும் அதேவேளை, இதன் பிறகு அம்பாறை மாவட்டத்தில் உள்ள
அரசியல் வாதிகள் மற்றும் புத்தி ஜீவிகளை சந்தித்து இதன்பின்னர் நடைமுறைப்
படுத்தப்படவேண்டிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்படும் என்றும் இந்த ஊடக
அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 comments:
Post a Comment